மாண்டவள் பெற்ற மைந்தன்

ஹான் மன்னன் பரம்பரை ஆட்சிக் காலத்தில் ‘டான்’ என்பவர் இருந்தார். அவர் ஒரு படிப்பாளி. நாற்பது வயது ஆகியும் திருமணம் புரிந்துகொள்ளவில்லை!அவர் அடிக்கடி அந்நாட்டு காதல் பாடல்களை விரும்பிப் படிப்பது வழக்கம். தனிமை வாழ்வின் தவிப்பை அப்போது அவர் உணர்வார்!

ஒருநாள் நட்ட நடு இரவில் ஓர் அழகிய இளம்பெண் அவர் முன்னே தோன்றினாள். பளபளப்பான ஆடைகள் அணிந்திருந்த அந்தப் பெண் சற்று தடுமாறிய நிலையில் தன் முகத்தை நேரடியாகக் காட்டமல் நின்றுகொண்டிருந்தாள். “என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்றாள் அவள். முகத்தையும் உருவத்தையும் தெளிவாகப் பார்க்கமுடியாததால் டான் தயங்கினார். ஆனாலும், வயதான காலத்தில்  வலிய வரும் திருமண விண்ணப்பத்தை ஏன் தட்டிவிடவேண்டுமென்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது.

அப்போது அந்தப் பெண் பேசினாள். “ஒரே ஒரு நிபந்தனை. அதை நீங்கள் மீறக் கூடாது. என்மீது விளக்கின் வெளிச்சத்தைக் காட்டக்கூடாது. என் உருவத்தை எக்காரணத்தைக் கொண்டும் பார்த்துவிட முயலக் கூடாது. இந்த நிபந்தனை முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே!” என்றாள்.

டான் இதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் திருமணம் புரிந்துகொண்டனர். ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘டான்’ தன் மனைவியை எப்படியாவது பார்க்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டார்.

ஒரு நாள் இரவு, அவள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், டான் மெழுகுவர்த்தியை எடுத்து, அவள் உருவத்தைப் பார்த்தார். ஐயோ, கொடுமை! இடுப்புக்கு மேலே பொலிவுடைய பெண் ஒருவரைக் கண்டார்! ஆனால், இடுப்புக்குக் கீழே வெறும் எலும்புகளே இருந்தன. அவர் அதிர்ச்சியுற்று அசைவற்று நின்றபோது அதே நேரம், அவள் கண்விழித்தாள். “நிபந்தனையை மீறிவிட்டீர்களே. இன்னும் ஓராண்டு பொறுத்திருந்திருக்கக்கூடாதா? அப்படி இருந்திருந்தால் இடுப்பு வரை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த உடலின் தசைகள் இடுப்புக்குக் கீழே கால்களிலும் வளர்ந்திருக்கும்! நானும் முழு பெண்ணாக ஆயிருப்பேன். இப்போது எல்லாம் நாசமானது” என்றாள்.

டான் அவளிடம் மன்னிப்புக் கேட்டான். தன்னுடைய தேவையற்ற அவசரம் இப்படியோர் நிலைக்கு தள்ளிவிட்டதே என்று வருந்தினான்.

“இதை மன்னிக்கமுடியாது. இனிமேல் நாம் நிரந்தரமாகப் பிரிந்துவிட வேண்டியதுதான். என்றாலும் நான் பெற்ற என் செல்வத்துக்காக பணவசதி செய்துதர வேண்டும். ஆகவே என்னுடன் நான் செல்கின்ற இடத்துக்கு வாருங்கள். அங்கே நீங்களும், என் மகனும் வாழ்வதற்காகஒரு ஏற்பாட்டை செய்து தருகின்றேன்.” என்றாள்.

அவ்வாறு அவள் அவனை ஒரு பெரிய மாளிகைக்குக் கூட்டிச் சென்றாள். முத்துக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த விலை உயர்வான கவுனை எடுத்து அவனிடம் தந்தாள்.

“இதோ இதை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இருவரின் முழு வாழ்க்கைக்கும் தேவையான பொருள் இந்த கவுனை விற்றால் கிடைத்துவிடும்.” என்றாள்.

பின் அவன் அணிந்திருந்த மேல் சட்டையின் கையோடு கொஞ்சம் உடல் பகுதியையும் கிழித்தெடுத்துக்கொண்டு சட்டென மறைந்துபோனாள்.

டான் அந்த கவுனை எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு சென்றான். அங்கே அந்த வேலைப்பாடு மிக்க கவுனை சுய்யாங்கை சேர்ந்த குறுநிலத் தலைவன் வாங்க் என்பவருக்காக ஒருவர் விலை கொடுத்து வாங்க வந்தார். அவர் பெருமளவு பொற்காசுகளைக் கொடுத்து அந்த கவுனைப் பெற்றுக் கொண்டார். டான் மிகவும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்.

வாங்க் அந்த கவுனை பார்த்தவுடனே, “ஆ, இது என் மகளின் கவுன்; அவளுடைய சவ அடக்கத்தின்போது இதைத் தான் அணிவித்து அடக்கம் செய்தோம். இதை விற்றவன் ஒரு புதைக்குழியைத் தோண்டித் திருடக்கூடிய மாபாதகனாக இருக்கவேண்டும். உடனே அவனைப் பிடிக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.

அந்த குறுநிலத் தலைவனின் கட்டளைப்படி காவலர்கள் டானை உடனே பிடித்து வந்தார்கள். டான் குறுக்கு விசாரனை செய்யப்பட்டான். டான் எவ்வளவோ சொல்லியும் வாங்க் அவனை நம்பவில்லை. இருந்தாலும் இவன் சொல்வதைச் சோதித்துப் பார்த்துவிடலாம் என்று கருதி  தன் மகளின் புதைகுழியை தோண்டிப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான். டானும் வாங்க்கும் நின்றுகொண்டிருக்க புதைகுழி தோண்டப் பட்டது.  என்ன ஆச்சர்யம், அவன் மகளின் சடலம் டானின் கையுடன் கூடிய சட்டைப் பகுதியை கையிலே வைத்திருந்தது. வாங்க் உண்மையிலே அசந்துவிட்டான். ஆனாலும் இன்னும் ஒரு சோதனையாக டானின் மகனை அழைத்து வரச் செய்தான்.

டானின் மகனின் முகம்கூட அவள் மகளின் முகத்தை ஒத்திருந்தது. புதை குழியில் இருந்த டானின் மனைவி பிணத்தை வெளியே வைத்ததும், டானின் இரண்டு வயதான மகன் ஓடிப்போய் “அம்மா” என்று கத்திக் கொண்டே தாயின் கன்னத்தோடு தன் கன்னத்தை இழைத்தான். அந்த இளம் பிஞ்சுவின் விழிகளிலிருந்து நீர் முத்துக்கள் உருண்டன.

இப்பொழுதுதான் வாங்க் உண்மையை அறிந்தான். டானின் கூற்று உண்மையென்று ஒப்புக்கொண்டான். தன் மகள் மரணமடைந்தப் பிறகு புதைகுழியிலிருந்து எழுந்துச் சென்று இவனை மணம் புரிந்திருக்கிறாள்! ஏதோ தெய்வ வரம் பெற்றிருக்கிறாள். ஆனால் பாவம், டானின் அவசர புத்தியால் தன் உடலை முழுமையாகத் திரும்பப்பெறும் வாய்ப்பை இழந்துவிட்டாள். நல்ல வேளை அவர்களுக்கு ஒரு குழந்தையாவது பிறந்ததே என்று ஆறுதல் பெருமூச்சு விட்டான் வாங்க்.

இப்பொழுது டானின் மகன் வாங்க் மாளிகைக்கு வந்துவிட்டான். வாங்க் டானிடம் அந்த கவுனை திரும்பக் கொடுத்துவிட்டாள். டானை தன்னுடைய சட்டரீதியான மருமகனாகவும் அவன் ஏற்றுக்கொண்டு விட்டான். டானின் மகனுக்கு பிற்காலத்தில் ஒரு பெரிய பதவியையும் அவன் ஏற்படுத்திக்கொடுத்தான்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts