ஈசாப் நீதிக் கதை

சிங்கமும் கரடியும் குள்ளநரியும்

ஒரு சிங்கமும் கரடியும் கூட்டாக வேட்டையாடி ஒரு மானைக் கொன்றன. கொன்ற மானைப் பங்கு போடுவதில் சிங்கமும் கரடியும் பயங்கரமாகச் சண்டை செய்தன. வெகுநேரம் சண்டை செய்ததால் இரண்டும் களைப்படைந்து விட்டன. அதனால் இரண்டும் தரையில் சாய்ந்தன. அந்த சமயம் வெகுதூரத்திலிருந்தே இவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு குள்ள நரி ஓடி வந்தது. அங்கிருந்த மானைத் தூக்கிகொண்டு ஒடிவிட்டது. சிங்கமும் கரடியும் ஒன்றும் செய்ய முடியாமல் அதனைப் பார்த்தபடி கீழே தரையில் கிடந்தன. இவை இரண்டும் வேட்டையில் கிடைத்ததை நல்ல முறையில் பங்கு போட்டுக் கொள்ளாமல் வீணாகச் சண்டை போட்டு இரையை இழந்தோமே என்று வருத்தப்பட்டன.

சேவலும் இரத்தினக் கல்லும்

சேவல் ஒன்று குப்பையைக் கிளறி அதற்கான உணவைத் தேடிக் கொண்டிருந்தது. அப்போது அதற்கு ஒரு விலை மதிப்பற்ற இரத்தினக்கல் கிடைத்தது. அதனைப் பார்த்துக்கொண்டிருந்த குஞ்சு ஒன்று ஆவலுடன் சேவலின் அருகே வந்து அந்தக் கல்லை திருப்பித் திருப்பிப் போட்டது. அதைக் கண்ட சேவல் வருத்தமுடன் " இது எனக்குக் கிடைத்து என்ன பயன்? ஒரு இரத்தின வியாபாரியின் கையில் இது அகப்பட்டிருந்தால் அவனுக்கு இதன் மதிப்பு தெரியும். எனக்கோ இத விட இந்த குப்பையில் ஒரு தாணியம் கிடைத்திருந்தால் அதுவே விலை மதிப்பில்லத பொருளாக இருக்கும்" இன்று கூறியது.

நாயும் அதன் நிழலும்

ஒரு நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த மாமிசத்துண்டை திருடியது அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது வழியில் ஒரு ஓடையைக்கடக்க வேண்டியிருந்தது. நாய் ஓடையைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் மாமிசத்துண்டு இருந்தது. அதைக் கண்ட நாய் அந்த மாமிசத்துண்டினையும் கவ்வ எண்ணியது. உடனே அது பலமாக 'லொள்','லொள்' எனக் குரைத்து கொண்டே தன்னீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது. அதனால் அதன் வாயில் இருந்த மாமிசமும் தண்ணீரில் விழுந்தது. அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஓநாயும் ஆட்டுக் குட்டியும் ஒரு ஓநாய் அதிக தாகத்துடனும் பசியாலும் தவித்துக் கொண்டு இருந்தது. அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. அப்போது சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி ஒன்று தண்ணீர் குடிப்பதைக் கண்டது. உடனே அதற்குக் கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து " டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே " என்றது ஆட்டுக்க்குட்டு மிகுந்த பயத்துடன் " நான் உங்களுக்குக் கீழ்ப் பக்கத்தில் தண்ணீர் குடிக்கிறேன் நீங்களோ மேல் பாகத்தில் குடிக்கிறீர்கள் .நான் இங்கே தண்ணீர் குடிப்பதால் அங்கு தண்ணீர் எப்படி கலங்கும் " என்றது "ஆறு மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். அதற்காக அவருடைய தோல் உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய்" என்று கோபமாகச் சொல்லியது ஓநாய். ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது . அதன் உடல் நடுங்க ஆரம்பித்தது. " ஐயா! நான் சொல்வதைக் கேளுங்கள் தயவு செய்து என் பேச்சை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை" என்று மிகப் பணிவாகச் சொல்லியது. ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு " என்ன கர்வம். எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இனி நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் " என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்தது. ஆட்டுக்குட்டி என்ன கத்தியும் விடாமல், அதனைக் கடித்துத் தின்றது ஓநாய். (கதை உணர்த்தும் நீதி : கெட்டவர்கள் தங்கள் செயலுக்கு நீதியையோ தவறுக்கு மன்னிப்பையோ விரும்ப மாட்டார்கள்)

தவளையும் சுண்டெலிகளும்

தவளையும் சுண்டெலியும்

ஒரு காட்டில் தவளையும் சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. தவளை வாழ்ந்து வந்த குளத்தில் கோடைக் காலத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது.எனவே எலி அதற்கு உதவி செய்ய நினைத்தது. அங்குமிங்கும் தேடி ஒரு குளத்தைக் கண்டறிந்தது. குளத்தினருகில் சென்ற போது, குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் சண்டை வந்தது. எலி தன் இனத்தவரை ஆதரவிற்குக் கூப்பிட்டது. தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயின. வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் இதைக் கண்டன. சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள் , தவளைகள் மீது பாய்ந்து தமக்கு இரையாக்கிக் கொண்டன.

நீதி: எளியவர்கள் ஒற்றுமையின்றி இருப்பது வலியவர்களுக்கு நன்மையாகும்.

உதவிக்குப் பலன்

குளிர் காலத்தில் ஒருநாள் ஒரு பாம்பு பனியில் விரைந்து சுருண்டு கிடந்தது. அதன் உயிர் போய்விடுமோ என்ற நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் அவ்வழியே வந்த குடியனவன் ஒருவன் இதனைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அவன் அப்பாம்புக்கு உதவிட நினைத்தான். பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். குடியானவனுடைய உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள உணர்வு பெற்றது. அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய குடியானவன் மார்பைப் பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த குடியானவன் தன் செய்கைக்காக வருந்தினான். பாம்பைப் பார்த்து " ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்றான்.

ஈசாப் நீதிக்கதைகள் – கழுதையின் தந்திரம்

ஒரு வியாபாரி உப்பு வாங்குவதற்காகத் தன் கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். போகிற வழியில் ஓர் ஓடை இருந்தது.

திரும்பி வரும்போது கால்தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனதால், கழுதை எழுந்த போது சுமையின் கனம் மிகவும் குறைந்திருந்தது.

வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக்கொண்டான். வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது.

வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது.

ஆனால் கடற்பஞ்சு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது.

தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு பங்கு பாரத்தைச் சுமந்தது.

ஈசாப் நீதிக் கதைகள் – கெட்டிக்காரன் புளுகு

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.

இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,

“சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்” என்றது
.
நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

இதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது.

அதற்கு சேவல்,

அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்பதைக் கவனிக்கிறேன்

அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது.

சேவல், “அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது”

நரி “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்”.

இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.

சேவல் “யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது” என்று கூறி சிரித்தது.

கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.

1 comment:

Powered by Blogger.

Popular Posts