பரம்பரையான ஞானம்

தலைமை ஸென் ஆசிரியர் முயூநானின் சிறந்த சீடனாக இருந்தவர் ஸொஜு. ஸொஜு ஸென் பற்றிய பல அரியக் கருத்துக்களை முயூநானிடம் இருந்து கற்றுத் தேர்ந்தார். முயூநான் தன்னுடைய வாரிசாக ஸொஜுவை நினைத்தார். தனக்குப் பின் ஸென் கருத்துக்களை பரப்புவதற்கு ஸொஜுவைவிட சிறந்த சீடன் வேறு ஒருவரும் இல்லாததால் ஸொஜுவைத் தன்னுடைய அறைக்கு அழைத்தார். "எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. எனக்கு பின்பு இந்தப் போதனைகளைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு உன்னைவிட சிறந்த சீடன் வேறு ஒருவரும் இல்லை. இதோ பார் இந்தப் புத்தகத்தை, பல ஸென் குருக்கள் பரம்பரை பரம்பரையாக இந்தப் புத்தகத்தை தங்களுடைய வாரிசாக வரும் குருக்களுக்கு விட்டுச் சென்றனர். இது மிகவும் அரிய சிறந்த புத்தகம். நானும் இதனைப் படித்து என்னால் உணர்ந்த கருத்துக்களை இந்தப் புத்தகத்தில் சேர்த்து எழுதி உள்ளேன். எனது குரு எனக்கு விட்டுச் சென்றது போல் நான் இதனை உனக்கு விட்டுச் செல்கிறேன்" என்றார்.

ஸொஜு, "இந்தப் புத்தகம் அவ்வளவு முக்கியமானது என்றால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றுக் கூறிய விட்டு, மேலும் தொடர்ந்து, "இதுவரை ஸென் தத்துவங்களை உங்களிடம் இருந்து எழுதாமலேயே கேட்டுக் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் நான் திருப்திப் பட்டுக் கொள்கிறேன்" என்றார்.

முயூநான், "எனக்குத் தெரியும், இருந்த போதிலும், இதுவரை எழு பரம்பரையாக இந்தப் புத்தகம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வந்து உள்ளது. இங்கு நீ கற்றதின் ஞாபகச் சின்னமாக இந்தப் புத்தகத்தை வைத்துக் கொள், இந்தா!!" என்று ஸொஜுவின் கையில் திணித்தார்.

ஸொஜுவிற்கு பொருட்களின் மீது எந்தவிதமான பற்றுதலும் கிடையாது. பற்றற்று இருப்பதே பலத் துன்பங்களிலுருந்து விடுதலை பெற வைக்கும் என்றுக் கற்றுத் தெளிந்தவர். புத்தருடைய போதனைகளை கற்பதினால் ஒன்றும் பலன் இல்லை. ஒருவன் புத்தத்தன்மையை உணர்வதே, தன்னொளியைப் பெறுவதே ஸென் என்று அறிந்தவர். கையில் கிடைத்தப் புத்தகத்தை அப்படியே பக்கத்தில் குளிர்காய்வதற்காக திகுதிகுவென எரிந்து கொண்டிருந்த அடுப்பில் போட்டார்.

என்றுமே கோபமடையாத முயூநான், "என்னச் செய்கிறாய்?" என்று ஆத்திரமாக படபடப்புடன் கத்தினார்.

ஸொஜு "என்ன சொல்கிறாய்?" என்று அதே வேகத்தில் திருப்பிக் கத்தினார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts