கோபமான அமிதாப புத்தா

நூயேன் என்ற பெண் அமிதாப புத்தாவின் பக்தை. "நமோ அமிதா புத்தா" என்ற ஸ்லோகத்தினை தினமும் காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்து வந்தாள். ஒவ்வொரு வேளைகளிலும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் "நமோ அமிதா புத்தா" என்று ஸ்லோகத்தினை தொடர்ந்து கூறி கடந்த 10 வருடங்களாக பாராயணம் செய்து வந்தாள். இருந்த போதிலும் அவள் தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் அன்பாக பழகாமல் அவர்களை ஏளனம் செய்வதும், கத்திப் பேசுவதும், ஏசுவதுமாக இருந்தாள். அவளுடைய குணநலன்கள் மற்றவர்கள் போற்றும் படியாக இல்லை.

ஒரு நாள் நூயேன் நறுமணப் பொருட்களை அமிதாப புத்தாவிற்கு ஏற்றி வைத்து விட்டு பூஜையை ஆரம்பித்தாள். கையில் ஒரு சிறு மணியை வைத்துக் ஆட்டிக் கொண்டு "நமோ அமிதா புத்தா" என்ற ஸ்லோகத்தினை திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தாள்.

அவளுடைய நண்பனாக இருந்த ஸென் ஆசிரியர் ஒருவர், அவளுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்த வேண்டும் என்று காத்திருந்தார், சரியாக அவளுடைய இடத்திற்கு பூஜை ஆரம்பிக்கும் நேரத்தில் வந்தார். வந்தவர் சாத்தியிருந்த கதவின் பக்கத்திலிருந்து "மிஸ் நூயேன், மிஸ் நூயேன்" என்று அவளை சத்தமாக கூப்பிட ஆரம்பித்தார்.

"நமோ அமிதா புத்தா", "நமோ அமிதா புத்தா" என்று சொல்ல ஆரம்பித்தவள் தன்னை சத்தமாக கூப்பிடுவதைக் கேட்டும், தன்னுடைய பாராயணப் பயிற்சியில் தீவிரமாக இருந்தாள். அவர் மறுபடியும் அவளுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தார். "நான் என்னுடைய கோபத்தைக் கட்டுப் படுத்த வேண்டும், அதனால் கூப்பிடுவதை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்" என்று நினைத்துக் கொண்டே "நமோ அமிதா புத்தா", "நமோ அமிதா புத்தா" என்று பாராயணத்தைத் தொடர்ந்தாள்.

ஆனால் அவரோ விடுவதாக இல்லை. "மிஸ் நூயேன், மிஸ் நூயேன்" என்று மறுபடியும் அவளை சத்தமாக கூப்பிட ஆரம்பித்தார். "நான் பாராயணம் செய்யும் நேரம் என்று தெரிந்து இருந்தும் என்னை எதற்காக தொந்திரவு செய்ய வேண்டும்" என்று மனதில் நினைத்தவள், மீண்டும் ஆசிரியரின் அழைப்பினைப் பொருட்படுத்தாமல், "நமோ அமிதா புத்தா", "நமோ அமிதா புத்தா" என்று பாராயணத்தைத் தொடர்ந்தாள். "மிஸ் நூயேன், மிஸ் நூயேன்" என்று அவளை மீண்டும் சத்தமாக கூப்பிட ஆரம்பித்தார்

அவ்வளவு தான் பொருத்து பொருத்து பார்த்தவள், அதற்கு மேல் தன்னுடைய கோபத்தினை அடக்க முடியாமல் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து குதித்து எழுந்தவள், கதவினைத் திறந்து பாலாரென சாத்திவிட்டு, ஆசிரியரை நோக்கி கோபத்துடன் சத்தமாக "நான் என்னுடைய பாரயாணத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன். எதற்காக என் பெயரைத் தொடர்ந்து சொல்லிக் கூப்பிடுகிறாய்? நான் பூஜையில் இருக்கும் நேரம் என்று தெரிந்தும் ஏன் என்னை வந்து தொந்தரவு செய்கிறாய்?" என்று சுட்ட எண்ணையில் இட்டக் கடுகாக பொரிய ஆரம்பித்தாள்.

ஆனால் ஆசிரியரோ நமட்டுச் சிரிப்புடன் புன்னகை செய்து, "நான் உன்னுடையப் பெயரை எறக்குறைய 10 நிமிடமாகத் தான் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கே நீ இவ்வளவு கோபப் படுகிறாயே, நீ அமிதா புத்தாவின் நாமத்தினை கடந்த பத்து வருடங்களாக தினமும் மூன்று வேளைகள், அரை மணி நேரத்திற்கு தொடர்ந்து கூப்பிடுகிறாயே, கொஞ்சம் யோசித்துப் பார், அவர் இந்நேரம் எவ்வளவு கோபமாக இருப்பார்?" என்று அவளை பார்த்துக் கேட்டார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts