ஜென் கதைகள்: புத்தாவினை உடைத்துக் கொடு

ஒரு வேலையில்லாத மனிதன் வெடவெடக்கும் குளிர்கால இரவில் புத்தருடைய கோயிலிற்கு வந்தான். கோயிலில் இருந்த புத்த விக்கிரத்திற்கு முன்பு மண்டியிட்டு அமர்ந்து தன்னுடைய பிரார்த்தனையை செய்தான். பிரார்த்தனையை முடித்தவன், கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிய சத்தமாக அழுது புலம்ப ஆரம்பித்தான். அந்த கோயிலின் தலைமைக் குருவாக தர்மா ஆசிரியரியராக இருந்தவர் விங்ஸி (அர்த்தம், புகழ்வாயந்த கிழக்கு), அழுகின்றவனைப் பார்த்து "என்ன ஆயிற்று?, எதற்காக அழுகிறாய்?" என்று விசாரிக்க ஆரம்பித்தார்.

அந்த எழை மனிதன், "ஐயா, மேன்மை பொருந்திய ஆசிரியரே, என்னுடைய மனைவியும், குழந்தைகளும் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. நானும் என்னால் முடிந்தவரை உழைத்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தேன், ஆனால் இந்த நகரத்தில் என்னால் ஒரு வேலையையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தக் குளிர்காலத்தில், போதிய உணவோ, சரியான உடையோ இல்லாததால் நானும் மூட்டு வலியாலும் மற்ற பிற வியாதிகளாலும் துன்பப் படுகிறேன். என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் பட்டினியுடன் இன்னும் எத்தனை நாளைக்கு உயிருடன் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதணால் தான் நான் புத்தரிடம் வந்து என்னுடைய துன்பங்களை நீக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். என் நிலையை நினைத்து எனக்கே வருத்தமாக இருந்தது. அதணால் என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு அழுது விட்டேன்" என்று விங்ஸியைப் பார்த்து பதில் அளித்தான்.

விங்ஸி மனதிற்குள், "புத்த பிக்ஷுக்களாகிய நம்மிடம் பணம் கிடையாது, இவனுடைய அவசரத்திற்கு எதாவது உதவி செய்ய வேண்டும், ஆனால் என்ன செய்வது என்றும் ஒன்றும் புரியவில்லையே" என்று நினைத்தவர், தன் எதிரே இருந்த தங்க மூலாம் பூசிய புத்த விக்கிரகத்தினைப் பார்த்தார். உடனே தன்னுடைய சீடர்களைக் கூப்பிட்டு, "புத்தருடைய ஒரு கையினை அந்த விக்கிரத்திலிருந்து பிரித்து எடுத்து. அதில் இருக்கும் தங்க மூலாமினை சேகரித்து வேலையில்லாத அந்த எழை மனிதனிடம் கொடுங்கள்" என்று கூறிவிட்டு. அந்த எழை மனிதனைப் பார்த்து, "ஒரு பொற்கொல்லனிடம் சென்று, இந்த தங்கத்தினை விற்று, வரும் பணத்தினைக் கொண்டு உன்னுடைய அவசர தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்" என்றுக் கூறினார்.

அங்கிருந்த சீடர்களும் மற்ற பிக்ஷுக்களும் கோபமடைந்து, "எப்படி நீங்கள் புத்தர் சிலையை உடைத்து மற்றவர்களுக்கு கொடுக்கலாம்?" என்று கேட்டு புத்தருடைய விக்கிரகத்திலிருந்து கையை எடுத்துக் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆசிரியர் விங்ஸி அமைதியாக, "உங்களுக்கு தர்மம் என்றால் என்ன என்று இன்னும் புரியவில்லை, நான் இதனை செய்வதே புத்தருக்கு செய்யும் மரியாதையாகும்" என்று பதில் அளித்தார்.

எல்லாரும் குழப்பம் அடைந்து, "நீங்கள் புத்தருடைய சிலையை அக்குவேறு ஆணிவேறாக உடைக்க சொல்லுகிறிர்கள், அது எப்படி புத்தருக்கோ, புத்தமதத்திற்கோ மரியாதை செய்வதாகும்?" என்று திருப்பிக் கேட்டனர்.

குரு விங்ஸி, "நானும் உங்களைப் போல நம்முடைய மதத்தினையும், அதனை தோற்றுவித்த புத்தாவினையும் மதிக்கிறேன். இந்தக் காரியத்தினை செய்வதற்காக நான் நரகத்திற்கு செல்வதானாலும், செல்லத் தயாராக இருக்கிறேன். உங்களால் முடியாவிட்டால், நானே கையினை உடைத்து கொடுக்கிறேன்" என்றார்.

வேறு வழியில்லாத சீடர்கள் ஆசிரியருடைய கட்டளையின்படி கையினை உடைத்து அதிலிருந்த தங்கத்தினை சேகரிக்க ஆரம்பித்தனர். இருந்த போதிலும் அவர்களுக்குள் "நாம் உடைப்பது புத்தர் சிலையை, அதனுடைய பாகங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது எப்படி புத்தருக்கு மரியாதை செய்வாதாகும். ஆசிரியர் சரியான முட்டாள். புத்த மதத்தின் எதிரி" என்று முனுமுனுத்தனர்.

அதனைக் கேட்ட விங்ஸி அதற்கு மேல் பொருத்துக் கொள்ள முடியாமல் சத்தமாக, "நீங்கள் புத்தருடைய போதனைகளைப் படித்ததில்லையா?, அவர் புத்தராவதற்கு முன்பு, தன்னுடைய மூன்று முன்பிறவிகளில் இளவரசர் சித்தார்த்தர், ஒன்றில் தன்னையே புலிக்கு உணவாக கொடுத்தார், மற்றொன்றில் தன்னுடைய உடலேயே வெட்டி பருந்து ஒன்றிற்கு ஆகாரமாக அளித்தார், அடுத்த படியாக குருடன் ஒருவனுக்கு தன்னுடைய கண்களை தானம் செய்தார். புத்தர் மற்றவர்களுக்காக எல்லாப் பொருட்களையும் மட்டும் அல்லாமல் தன்னுடைய உடலேயேக் கொடுத்தார். நீங்கள் அவருடைய போதனைகளை இன்னுமா புரிந்து கொள்ளவில்லை" என்று கேட்டார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts