நல்லதும் கெட்டதும்

ஒரு காலத்தில் பாலைவனத்தில் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். மிகவும் நல்லவராக, எதுவும் எச்செயலும் ஏதோ ஒரு நன்மையின் பொருட்டே நிகழ்கிறது என்ற நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அவரிடம் குதிரைகள் நிறைய இருந்தன.

ஒருநாள் தன்னுடைய நிலத்திலே வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்; அப்பொழுது அவருடைய குதிரைகளில் ஒன்று, அதுவும் பெண் குதிரை  காணாமல் போனது தெரிந்தது. அவருடைய வீட்டினர், அக்கம்பக்கத்து மனிதர்கள் என்று எல்லாருமே எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஓடிப்போன குதிரை கிடைக்கவே இல்லை. எல்லோரும் அவரிடம் சென்று, “குதிரை காணாமல் போனதால் உங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு ஒரு துரதிஷ்டம்தான்!” என்று தங்கள் அனுதாபத்தை அல்லது வருத்தத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர், “குதிரை காணாமல் போனதை ஏன் துரதிஷ்டம் என்று நினைக்க வேண்டும். அதுவே அதிர்ஷ்டத்தை கொண்டு வரலாம், அதற்கு நேரம் வாய்க்கும், வரவேண்டும்” என்றார்.

மறுநாள் அதிகாலைஅடிவானத்தின் பக்கமிருந்து இரண்டு குதிரைகள் ஓடி வருவதை அந்தப் பாலைவனத்துப் பாமரக் கிழவர் பார்த்தார். ஆம், அவரை விட்டு ஓடிய அந்த இளம் பெண் குதிரை ஒரு பொலி குதிரையுடன் திரும்பி வந்து கொண்டிருந்தது. தூரத்திலிருந்து பார்க்கும்போது அந்தப் புதிய குதிரையின் பொலிவும் உடல் வலிவும் ஒரு போர்க் குதிரையாகவும் இருக்கும் என்று நினைக்க வைத்தது.

இரண்டும் இவருடைய இடத்துக்கு வந்து சேர்ந்தது. வந்தவுடன் பார்த்தால் நல்ல வாளிப்பான உடல் வாகுடன் அந்தப் புதிய குதிரை தோற்றமளித்தது. சந்தேகத்துக்கு இடமில்லால் இது போர்க்குதிரைதான் என்றறிந்து, ‘யாரேனும் படை வீரர் ஒருவருடைய குதிரையாகவே இது இருக்கவேண்டும். அவரிடமிருந்து தப்பி ஓடி வந்திருக்கவேண்டும். ஆகவே இது குறித்து விசாரித்து அதை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று ஓர் கோரிக்கையை அப்பகுதியின் மாஜிஸ்டிரேட்டிடம் இவர் வைத்தார். மாஜிஸ்டிரேட்டும், உரியவர் வந்து கோரும்வரை இவரிடமே வைத்திருக்கச் சொல்லி, பொறுத்திருந்து பார்க்கச் சொன்னார்.

ஓடிப் போன குதிரை கிடைத்ததற்காகவும்,  ஒரு புதிய குதிரை உடன் வந்ததற்காகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு சிறு விருந்து நிகழ்ச்சி இவருடைய குடும்பத்தினராலும், அண்மையிலுள்ள குடும்பங்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இவரை அழைத்து இவரது மகிழ்ச்சியைக் குறித்து பேசவும் கோரினார்கள்.

முதியவர் அமைதியாக இருந்தார். அவர் முகத்தில் எந்த மகிழ்ச்சியின் அறிகுறிகளும் இல்லை. அவர் சொன்னார், “புதிய துடிப்பான இளங்குதிரை கிடைத்தற்காக நான் மகிழ்ச்சியடையவில்லை. இது நல்லது என்று எடுத்துக்கொள்ளவும் கூடாது. இதன் விளைவு என்ன என்பது காலம் வரும்போது தெரியும்” என்றார்.

ஒருவாரம் சென்றது, முதியவரின் மைந்தன் ஒரு நாள் புதிய குதிரையின் மேல் ஏறி சவாரி செய்தான். ஒரு போர்க்குதிரையின் மேல் ஏறி சவாரி செய்யும் அளவுக்கு அவனுக்குப் பயிற்சியோ திறமையோ கிடையாது. அடங்காத போர்க்குதிரை கீழே தள்ளிவிட்டு ஓடியது. பாவம், மைந்தனின் கால் உடைந்தது.

இப்பொழுது எல்லோரும், “ஐயோ பாவம் இந்தப் போர்க்குதிரை  துரதிஷ்டத்தை அல்லவா கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது. இவருடைய பிள்ளையின் கால் முடமாயிற்றே” என்றனர். அப்பொழுது இவர், “என் மகனுக்கு ஏற்பட்ட விபத்து கெட்டது என்று ஏன் நினைக்க வேண்டும். நன்மையையும் குறிக்கலாம், காலம் வரும்போது தெளிவாகும்” என்றார்.

கொஞ்ச காலத்துக்குப் பின்னர், முதியவர் வாழ்ந்த நாட்டின் அரசன் பக்கத்து நாட்டுடன் வீண் சண்டைக்குப் போனான். அவன் போர் தொடுத்ததில் கொஞ்சமும் நியாயம் கிடையாது. அவன் கொடிய குணத்தையே அது பிரதிபலித்தது. அவன் தன் நாட்டு மக்கள் அனைவரையும் போரில் கட்டாயமாகக் கலந்து கொள்ளவேண்டுமென்று ஆணையிட்டான். நாடு முழுவதும் ஒரு குக்கிராமம் கூட விடாது ராணுவ அதிகாரிகள் இளைஞர்களைக் கட்டாயமாக இழுத்துச் சென்றனர். வீடு வீடாகச் சென்று சோதித்து யாரையும் விட்டுவிடாமல் பிடித்தனர். முதியவருக்கோ ஒரே பிள்ளைதான், இவனும் ராணுவத்திற்கு போய்விட்டால் அது அந்தக் குடும்பத்துக்கு பெரும் இழப்பாகவும் முடியலாம்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக முதியவரின் மகன் இப்போது முடவன் ஆகிவிட்டான் என்பதால் ராணுவத்தில் பணியாற்றுகின்ற தகுதியை இழந்திருந்தான்.  அதனால் அவர்களுக்கு அது வசதியாகப் போய்விட்டது.  ராணுவத்தினர் வீட்டில் நுழையும்போதே, அதன் வாயிலில் கட்டியிருந்த கம்பீரமான அந்தப் போர்க்குதிரையைப் பார்த்தனர். “ஓ. . . இதோ இங்கே ஒரு விலை மதிப்புள்ள போர்க்குதிரை கட்டிக்கிடக்கிறது. எனவே இந்த வீட்டிலுள்ளவர் பெரிய ராணுவ வீரனுடைய வீடாகவே இருக்கும்” என்று பேசிக்கொண்டனர்.

உள்ளே நுழைந்து வீட்டிலுள்ளோரைப் பார்த்தப்போது அந்த வீட்டில் முதியவரும், அவர் மனைவியும், முடவனான அவருடைய மைந்தனுமே இருந்தனர். “பாவம் ஏதோ போரில் இவனுக்கு கால் போயிருக்கிறது. இந்தக் குடும்பத்திலிருந்து ராணுவத்துக்கு யாரையும் எடுக்க முடியாது” என்று சொல்லி அகன்றனர்.

அக்கம்பக்கமுள்ளவர்கள் சொன்னார்கள், “நல்ல வேளை! இவருடைய மைந்தனைக் குதிரைத் தள்ளி விட்டது.  பெரியவர் சொன்னபடி இதுவே அதிர்ஷ்டமாகிவிட்டது! ஒவ்வொன்றையும் நல்லது எது, கெட்டது எது என்று அறிவுப்பூர்வமாக பார்வையிடுகின்ற இந்தப் பெரியவரின் அறிவாற்றல் சாதாரணமானதல்ல!” என்று பாராட்டினர்.

வாழ்வில் அவ்வப்பொழுது நடைபெறுகின்ற நிகழ்வுகளைக் கொண்டு நல்லது, கெட்டது என்று தீர்மானித்துவிடக்கூடாது. காலம்தான் ஒவ்வொரு நிகழ்வின் விளைவையும் தோலுரித்துக் காட்டக்கூடியது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts