டோன் யோங்கின் மனைவி

ஹான் மன்னன் பரம்பரை ஆட்சி நடைபெற்ற காலத்தில் க்யான்செங் என்னும் ஊரில் டோன் யாங் என்றொருவன் இருந்தான். குழந்தையாக இருந்தபோதே இவன் தாய் இறந்துவிட்டாள். தந்தைதான் அவனை வளர்த்து வந்தார். டோன் யாங் வயல்களிலே வேலை செய்து தந்தையைக் காப்பாற்றி வந்தான். டோன் யாங் கடுமையான உழைப்பாளி. அவன் எங்கு வேலைக்குப் போனாலும் தந்தையை ஒரு தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருவான். தந்தை இருக்கும் வண்டியை ஓரிடத்திலே நிற்கவைத்துவிட்டு இவன் வேலைகளைச் செய்வான். ஒரு நாள் பாவம், அவன் தந்தை இறந்துவிட்டார்.

சவ அடக்கம் செய்வதற்கு கையிலே சல்லிக்காசு இல்லை. என்ன செய்வது, பாவம், டோன் யாங் தன்னையே அடிமையாக விலைக்கு விற்க முடிவெடுத்தான். டோன் யாங் ஒரு நேர்மையாளன் என்பதை உணர்ந்து ஒரு பணக்காரன் பத்தாயிரம் காசுகள் கொடுத்து அவனை விலைக்கு வாங்கிக்கொண்டான்.

அந்த ஊரின் வழக்கப்படி இறந்தவனுக்காக மூன்று ஆண்டுகள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். இந்த மூன்று ஆண்டுகளும் டோன் யாங் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. இதையறிந்த அடிமை கொண்டவனும் மூன்று ஆண்டுகள் கழித்து அவனை வேலையில் அமர்த்தலாம் என்று முடிவு செய்தான்.

மூன்று ஆண்டுகள் கழிந்தன. டோங் யாங் தன்னை விலை கொடுத்து வாங்கிய எஜமானனிடம் வேலைக்குப் போவதற்குப் புறப்பட்டான். போகின்ற வழியில் ஒரு பெண்ணை அவன் பார்க்க நேரிட்டது. அந்தப் பெண் இவனிடம் “உன்னை மணமுடிக்க எனக்கு விருப்பம்” என்றாள். இவனுக்கும் அது சரி எனப்பட்டது. எனவே அவளையும் அழைத்துக்கொண்டு தன் அடிமை முதலாளியிடம் போனான்.

டோங் யாங்கைப் பார்த்து எஜமானன் மகிழ்ந்தான். அவனிடம், “உன்னிடம் பணம் கொடுத்தேன், அதை என்ன செய்தாய்?” என்றான்.

“ஐயா! நீங்கள் பெருந்தன்மையோடு எனக்குச் செய்த நன்மையினால் நீங்கள் அளித்த அந்தத் தொகை என் தகப்பனின் ஈமச் செலவுகளுக்கு சரியாக இருந்தது. இப்பொழுது நான் எப்பொழுதும்போல ஒன்றுமில்லாதவன். மேலும் கீழ்ச்சாதிக்காரன். ஆகவே என்னால் கடுமையான உழைப்பை நன்றிக் கடனாகச்  செலுத்த முடியும்” என்றான்.

“சரி… அப்படியானால் நீ வாங்கிய தொகைக்காக எனக்கு உழைக்கவேண்டும். அது முடிந்தவுடன்தான் நீ என்னைவிட்டுப் போக முடியும். நீயும் உன் மனைவியுமாக எனக்காக வேலை செய்தால் உன் கடனைச் சீக்கிரம் அடைக்கலாம். உன் மனைவிக்கு என்ன வேலைத் தெரியும்?”

“அவள் ஆடை நெய்வதில் கெட்டிக்காரி”.

“அப்படியானால் எனக்கு நூறு சுருள்கள் உயர் ரகப் பட்டுத் துணிகள் நெய்து தரட்டும்.”

எஜமானன் டோங்கின் மனைவிக்குப் பட்டு நூல்கள் மற்றும் உயர் ரக பட்டுத் துணி தயாரிப்புக்கான பொருள்கள் போன்றவற்றை அனுப்பினான். எப்படியும் நூறு சுருள்கள் பட்டுத் துணி என்றால் அதை  நெய்து முடிப்பதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளாவது ஆகும். (1 சுருள் என்பது 100 பேர்களின் ஆடைகள் தைக்க பயன்படும்). எனவே மூன்று ஆண்டுகளுக்கான தன் தேவையை அவள் மூலம் பெற்றுவிடலாம், அதன் வழியே கிடைக்கப்போகின்ற லாபம் பெரியது என்று எஜமானன் நினைத்துக்கொண்டான்.

டோங்கின் மனைவி நெசவுப் பணியைத் தொடங்கினாள். பத்து நாள்களுக்குள் நூறு சுருள்கள் உயர் ரகப் பட்டுத் துணி தயார் செய்துவிட்டாள். டோங் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனான். இவ்வளவு வேகத்தில் இப்படியொரு வேலையைப் பார்க்க முடியுமா? அதை அவளிடமே கேட்டான்.

அவள் நிதானமாகக் கூறினாள்.

“நான் மேலுலகத்துப் பெண். சுவர்க்கத்தில் நெசவு செய்பவள். ஆகவே வேகமாக என்னால் பணியாற்ற முடியும். உன்மேல் இரக்கப்பட்டு எங்கள் சுவர்க்கலோகத்தின் பேரரசர், என்னை உனக்கு உதவும்படி இங்கே அனுப்பி வைத்தார். உன்னுடைய இந்தப் பணிவும், மரியாதையும் எங்கள் மாமன்னரை நெகிழச் செய்தது. உன் துன்பத்தை, அடிமைத்தனத்தை என் உழைப்பின் வழியாகப் போக்கிவிட்டு நான் போகவேண்டும். அதை செய்துவிட்டேன். நான் போகிறேன்”.

சொன்னதொடு நில்லாமல் காற்றில் கரைந்து விண்ணகம் ஏறினாள்.


0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts