மழையை அழைத்து வருபவன்

நான் கேள்விப்பட்ட அழகிய புராதனமான கதை ஒன்றை உங்களிடம் பகிர்கிறேன். ஒரு கிராமத்தில் வெகுகாலமாக மழையே பெய்யாமல் இருந்தது. கிணறுகள், குளங்கள் எதிலும் துளி நீர் இல்லை. அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கடைசியாக மழையை வருவிப்பவனை தங்கள் கிராமத்துக்கு அழைத்து வரலாம் என்று முடிவுசெய்தனர். மழையை வருவிக்கும் சக்தி கொண்டவன் தூரத்து நகரமொன்றில் வசித்துவந்தான். அவனுக்குத் தூது அனுப்பி செய்தி சொல்லப்பட்டது. மழையின்றி நிலங்கள் எல்லாம் தரிசாகக் கிடக்கிறதென்றும், முடிந்தவரை சீக்கிரம் வரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மழையை வருவிப்பவரும் உடனடியாக கிராமத்திற்கு வர ஒப்புக்கொண்டார். அவரோ பழுத்த முதியவராக இருந்தார். அந்தக் கிராமத்தில் தனக்கென்று தன்னந்தனியாக ஒரு குடிசை வேண்டுமெனவும், மூன்று நாட்கள் தன்னை அங்கே யாரும் தொந்தரவு செய்யக்கூடாதென்பதுமே அவர் இட்ட நிபந்தனை. உணவு, தண்ணீர் எதுவுமே தேவையில்லை என்றும் அவர் கூறிவிட்டார். அவரது நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மூன்றாம் நாள் மாலையில் அந்தக் கிராமத்தின் மீது மேகங்கள் கருத்துத் திரண்டன. சடசடவென்று மழைபெய்யத் தொடங்கியது. அடிஅடியென்று துவைத்த மழையில் கிராமமே மகிழ்ச்சியில் திளைத்தது. மழையை வருவித்த முதியவர் தங்கியிருந்த குடிசை முன்பாக நன்றியுடன் அந்தக் கிராமத்து மக்கள் கூடினர்.

“இந்த அற்புதத்தை எப்படி சாதித்தீர்கள்? எங்களிடம் சொல்லுங்கள்” என்றனர்.

அது மிகவும் எளிமையானது என்று மழையை வருவித்த முதியவர் கூறத்தொடங்கினார். “கடந்த மூன்று நாட்களாக நான் என்னை ஒழுங்கில் வைத்திருந்தேன். நான் ஒழுங்கிற்குள் வந்தால், இந்த உலகம் ஒழுங்கிற்குள் வரும் என்றெனக்குத் தெரியும். வறட்சி போய் மழை வரும் என்றெனக்குத் தெரியும்” என்றார்.

நீங்கள் ஒழுங்குக்குள் இருக்கும்போது, முழு உலகமும் உங்களுக்காக ஒழுங்குக்கு வரும். நீங்கள் இசைவுடன் திகழும்போது, உங்களைச் சுற்றியுள்ள முழு இருப்பும் உங்களுக்காக இசைந்து வரும். உங்கள் ஒழுங்கு குலையும்போது, முழு உலகின் ஒழுங்கும் குலையும் என்று தாந்தரீகம் சொல்கிறது.

1 comment:

Powered by Blogger.

Popular Posts