ஜென் கதைகள்: முழு விழிப்புணர்ச்சி!


பத்து வருடகாலக் கடினப் பயிற்சிக்குப் பின்னர் டெனோ ஒரு ஜென் குருவாக ஆனார். புகழ்பெற்ற மாஸ்டரான நான்–இன்-ஐப் பார்க்க அவர் சென்றார். நான் இன், சீடரான டெனோவை வரவேற்றார். பிறகு கேட்டார்: "டெனோ! உன்னுடைய கட்டை மிதியடியையும் குடையையும் மடாலய வாசலில் விட்டு வந்தாயா?"

"ஆமாம்! குருவே" என்றார் டெனோ.

"டெனோ! உனது குடையை மிதியடியின் இடது பக்கம் வைத்தாயா அல்லது வலது பக்கம் வைத்தாயா? சொல்லேன்!" என்று கேட்டார் மாஸ்டர்.

டெனோவுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. தனக்கு இன்னும் முழுமையான விழிப்புணர்ச்சி வரவில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டார். ஆகவே, திருப்பியும் பயிற்சிக்குத் தயாரானார்.

நான்–இன் கீழ் இன்னொரு பத்து ஆண்டுக் காலம் பயிற்சியை மேற்கொண்டார் டெனோ!

நீ நான் இல்லையே!

சுவாங் ட்சு என்ற பெரிய ஜென் மாஸ்டருடன் அவரது நண்பர் ஒருவர் ஆற்றின் கரையோரமாகச் சென்று கொண்டிருந்தார். நண்பரை நோக்கிய சுவாங் ட்சு, "ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைப் பார்! அவை எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன பார்!" என்றார்.

"நீங்கள் மீன் இல்லையே! ஆகவே, அவை சந்தோஷமாக இருக்கின்றன என்பதை நிஜமாக நீங்கள் அறிய முடியாதே!" என்றார் நண்பர். சுவாங் ட்சு நண்பரை நோக்கிக் கூறினார்: "நீ நான் இல்லையே! ஆகவே, மீன்கள் சந்தோஷமாக இருக்கின்றன என்பதை நான் அறிந்திருக்கவில்லை என்பதை நீ எப்படி அறிவாய்?"

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts