நானும் ஒரு பயணிதான்

வாழ்க்கை ஒரு விந்தை. ஆனால் அதை ஒரு பிரச்சினையாக நம்மால் மாற்றிவிட முடியும். ஒரு விந்தையை ஒரு பிரச்சினையாக ஆக்கியவுடன் சிக்கல் தொடங்கிவிடும். ஏனெனில் அதற்குத் தீர்வு கிடையாது. ஒரு விந்தை விந்தையாகவே இருக்கிறது; அது தீர்க்க முடியாதது. அதனால்தான் அதை விந்தை என்கிறோம். வாழ்க்கை பிரச்சினைக்குரிய ஒன்றல்ல.

நாம் செய்யும் அடிப்படைத் தவறுகளில் ஒன்று இது. நாம் உடனடியாக ஒரு கேள்விக்குறியைப் போட்டுவிடுகிறோம். ஒரு விந்தைக்கு முன்பாகக் கேள்விக்குறியை வைத்துவிட்டால், வாழ்க்கை முழுக்க அதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும். அது கிடைக்கவும் போவதில்லை. அது மிகுந்த விரக்தியையும் கொண்டுவரும்.

அதனால் எதையும் பிரச்சினையாக ஆக்காமல் சந்தோஷமாக இருங்கள். எதனையும் சொந்தம் கொண்டாடாமல் இருப்பது வாழ்க்கையின் மகத்தான அனுபவங்களில் ஒன்று. எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருப்பதும், எதன் அங்கமாகவும் உணராமல் இருப்பதும் கடந்துபோகும் பேருணர்வைத் தருவதாகும்.

ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி தனக்கு விருப்பமான சூபி துறவியைச் சந்திக்கச் சென்றார். பல ஆண்டுகளாக அவருடைய செய்திகளால் அவர் வசீகரிக்கப்பட்டிருந்தார். சூபி துறவியின் அறைக்குள் நுழைந்தார். அறைக்குள் நுழைந்த அவருக்கோ பெரும் வியப்பு. அந்த அறை முற்றிலும் காலியாக இருந்தது! சூபி துறவி அறையின் மூலையில் உட்கார்ந்திருந்தார். அங்கே அறைகலன்கள் எதுவும் இல்லை. ஒரு அமெரிக்கரால் நாற்காலிகள் இல்லாத அறையைக் கற்பனையே செய்ய இயலாது.

“இங்கே உட்கார்வதற்கு ஒரு அறைகலன்கூட இல்லையே?” என்றார் அமெரிக்கப் பயணி.

அந்த வயதான துறவி சிரித்துக்கொண்டே, உன்னுடையது எங்கே? என்று கேட்டார்.

“நான் இங்கே பயணியாக அல்லவா வந்தேன். நான் எப்படி நாற்காலியை எடுத்துவர முடியும்” என்று கேட்டார்.

சூபி துறவி பதிலளித்தார். “நானும் இங்கே சில நாட்களுக்குப் பயணியாகவே வந்துள்ளேன். அதற்குப் பிறகு போய்விடுவேன். உன்னைப் போலவே” என்றார்.

இந்த உலகம் சிறந்த யாத்திரைத் தலம். அவ்வளவுதான். சொந்தம் கொண்டாடுவதற்குரிய இடம் அல்ல. கபீர் சொல்வது போல தாமரை இலையாக இரு.

1 comment:

Powered by Blogger.

Popular Posts