புலிமுகச் சப்பாத்துகள்

புலிமுகச் சப்பாத்துகளை சீனாவின் கிராமங்களில் சிறுவர்கள் அணிந்துச்செல்வதை இப்பொழுதுகூட நாம் பார்க்கலாம். இந்தச் சப்பாத்துகள் துணியினால் செய்யப்படுபவை. ஆனால் அதன் முகப்புப் பக்கம் அதாவது கால் விரல்கள் வைக்குமிடத்தின் வெளிப்புறத் தோற்றம் தோலினால் புலிமுகத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தச் சப்பாத்துகளுக்கு அவ்வளவு கிராக்கி. இதற்குப் பின்னால் விறுவிறுப்பான கதை ஒன்று இருக்கிறது.

முன்னொரு காலத்தில் சீனாவில் பிரபலமாக அறியப்பட்ட சீமைகளில்  ஒன்று யாங்ஷு. பழமையான இந்த நகரத்தில் பிங்யாங் என்ற படகோட்டி வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் பெருந்தன்மையும் பிறருக்கு உதவும் உள்ளமும் கொண்டவன். ஒரு தடவை தன் படகில் பயணம் செய்த பெண் பயணி ஒருத்தி அவனுக்கு அன்பளிப்பாக ஓவியம் ஒன்றைக் கொடுத்துச் சென்றாள். அந்த ஓவியம் மிகவும் அழகாக வரையப்பட்டிருந்தது.

அச்சித்திரத்தில் பேரழகியான ஒரு பெண், ஒரு புலிமுகச் சப்பாத்துக்கு அதன் முகத்தை உருவாக்குவது போல வரையப்பட்டிருந்தது. படகோட்டி இந்த ஓவியத்தை தன் படுக்கையறையில் தன் தலைக்கு நேராக மாட்டி வைத்துக் கொண்டான். காலையில் கண் விழிக்கும்போது, அன்பு மனைவியைப் பார்ப்பது போல அந்த ஓவியத்திலுள்ள பெண்ணை காதல் ததும்பப் பார்ப்பான். அவன் நெஞ்சில் ஆசை அலைகள் எழும்பும். வேலை முடித்து வீடு திரும்பியதும் அச்சித்திரத்தைப் பார்ப்பான். உறங்கும்போதும் அந்தச் சித்திரத்தைப் பார்த்துக் கொண்டே உறங்குவான்.

ஒரு நாள் இரவு கவிந்த வேளையில் பிங்யாங் வீட்டிலே ஓய்வாக தன் படுக்கையிலே படுத்த வண்ணம் அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது ஓவியப் பெண் உயிர் பெற்று வந்தாள். பிங்யாங் வியப்பிலும் உவகையிலும் ஆழ்ந்தான். அந்தப் பெண் அவனருகே வந்தாள். பனி கொட்டும் பூவைப் போல இருந்தாள். தண்ணீரில் மீன்கள் புரள்வது போல அவள் கண்கள் புரண்டன. நீண்ட கூந்தல் ஒரு பேரலையைப் போல எழுந்து அவனைப் புரட்டிப்போட்டது. அவன் காமச் சாகரத்தில் அடித்துச் செல்லப் பட்டான்.

ஒவ்வொரு நாள் இரவும் அவள் ஓவியத்திலிருந்து எழுந்து வருவாள். இரவு முழுவதும் அவனோடு இருந்து அவனை ஆட்கொண்டாள். புதிதாக அரிந்தெடுத்த அத்திப் பழ இதழ்களால் அவள் முத்தங்கள் பதிப்பாள். அவள் அவனின் ஒவ்வொரு அசைவிலும் ஆலிங்கத்திலும் ஒரு குழந்தையைப் போல மகிழ்வான். தன்னை மறந்து உறங்கி போவான்! காலை விடிவதற்கு முன்பு அவளும் இவனிடமிருந்து பிரிந்து மீண்டும் ஓவியத்தில் போய் அமர்ந்து விடுவாள்.

இருவரின் இன்ப உறவில் ஒவியப் பெண் கர்ப்பம் தரித்தாள். ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றுக்கொடுத்து, பிங்யாங்கை வளர்க்கச் செய்தாள். இரவு வந்தால் ஓவியப் பெண் வந்து தன் குழந்தையைக் கொஞ்சுவாள், சீராட்டுவாள். குழந்தை தன் தாயோடு ஒட்டிக்கொண்டு மகிழ்ச்சியுறும்; தன் தாயின் முகம் பார்த்து குதூகலிக்கும். இவ்வாறு காலங்கள் ஓடின. குழந்தையாய் இருந்தவன் இப்பொழுது இளஞ்சிறுவனாகிவிட்டான்.

அவர்களுடைய இன்ப வாழ்க்கையில் ஒருவன் குறுக்கிட்டான். அவன் அந்த நகரத்தில் அதிகாரம் கொண்ட அதிகாரி. பிங்யாங் ஓவியம் பற்றி கேள்விப்பட்டு அதை அவன் கைப்பற்றிக்கொண்டான். பாவம், பிங்யாங் மிகவும் துயரப்பட்டான். தன் ஆசை மனைவியை இழந்து தத்தளித்தான். அவனுடைய அருமை மகனும் தாயைப் பிரிந்து துடியாய் துடித்தான். தனது தாயைக் கண்டுபிடித்துத் தீரவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தான். அம்மா வெளியூர் சென்றிருக்கிறாள் என்று சொல்லிப் பார்த்தான். ஆனால் மகன் விடுவதாகயில்லை. சரி, எதையாவது சொல்லி வைப்போமென்று அவள் மேற்கு எல்லைக்கு போனதாக சொன்னான் பிங்யாங்.

மகன் உடனே தன்  தாயைப் பார்ப்பதற்கு மேற்கு எல்லைக்கு புறப்பட்டுச் சென்றான். மிக நீண்ட பயணம். பல பகல்கள், இரவுகள் கழிந்தபிறகு, எத்தனையோ ஊர்களை, நதிகளை, வயல்வெளிகளை, காடுகளைக் கடந்தபிறகு மேற்கு எல்லையில் ஒரு காட்டுப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அங்கே தன் தாயை அவன் கண்டுகொண்டான். ஆம், அவள் அங்குள்ள தாமரைக் குளத்தில் அவளைப் போன்ற தேவதைப் பெண்களுடன் நீராடிக் கொண்டிருந்தாள்.

தன் தாயிடம் ஓடோடிச் சென்றான். தன் தாயை அப்படியே தழுவிக் கொண்டாள். தாயும், “என் அருமை மகனே என்னைத் தேடி எவ்வளவு பெரிய பயணத்தை மேற்கொண்டு இங்கே வந்திருக்கிறாய்?” என்றாள். இதைச் சொல்லும்போது அவளையறியாது அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அது மகனின் கன்னங்களில் உருண்டது.

“மகனே. . . . நீ ஊருக்குப் புறப்பட்டுப் போ. உன்னைப் பிரிந்திருப்பது எனக்கு எவ்வளவு துன்பமானது என்பதை நீயறிவாய். நாம் மறுபடியும் சேரவேண்டுமானால் நான் சொல்கிறபடி நடந்துக்கொள்” என்றார். மகனும் “அம்மா. . . என்ன செய்ய வேண்டும்… சொல்லுங்கள்” என்றான்.

“நீ நேராக அந்த அதிகாரியின் படுக்கையறைக்குச் செல். அங்கு தான் அந்த ஓவியம் உள்ளது. அந்த ஓவியத்தில் நான் உனக்காக செய்து வைத்த ஒரு ஜோடி சப்பாத்துகள் இருக்கும். அவற்றை நீ எடுத்து அணிந்துக்கொள். அதுவரை நீ என்னை பார்க்கமுடியாது. இப்பொழுது நீ உன் கண்களை மூடிக்கொள். வீட்டுக்கு உன்னை அனுப்பிவைக்கிறேன்” என்றாள்.

மகன் கண்களை மூடி நின்றான். மீண்டும் கண்களைத் திறந்தபோது வீட்டில் இருந்தாள்.

அதன் பிறகு, அவன் அந்த அதிகாரிக்குச் செய்தி அனுப்பினான். அவனால் அந்த ஓவியத்திலுள்ள அழகுப் பெண்ணை உயிர் உருவமாக எழுப்பச் செய்ய முடியும் என்று கூறினான். இதைக் கேட்ட அந்த அதிகாரி ஆர்வத்தோடு அவனை அழைத்து வரச் சொன்னான். அந்த அதிகாரியின் வீட்டுக்கு மகன் நுழைந்து நேராக அவனுடைய படுக்கையறைக்குச் சென்றான். அங்கே அந்த ஓவியம் இருந்தது. அந்த ஓவியத்தில் காட்சியளித்த தன் தாயைப் பார்த்தான். பின்னர் தன் தாய் செய்து வைத்திருந்த சப்பாத்துக்களை கை நீட்டி எடுத்துக் கொண்டான். தாமதமின்றி அணிந்துக்கொண்டான். தன் தாயின் உயிர்ச்சித்திரத்தையும் பார்த்து, “அம்மா, வாங்க, போய் விடலாம்” என்றான். அவனது தாய் அந்த ஓவியத்திலிருந்து எழுந்து வந்தாள்.

அதிகாரி அவளைப் பார்த்ததும் அப்படியே மலைத்துப் போனான். உடனே அவர்களைத் தடுத்து நிறுத்தினான். மங்கையும் மகனும் அவனிடமிருந்து விலகிச்செல்ல முயன்றனர். அவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. வலுக்கட்டாயமாக அவளைப் பற்றி இழுத்திடப் பாய்ந்தான். ஆனால், அவளது மகனோ, அவனைக் குப்புறத் தள்ளிவிட்டான். சின்னஞ் சிறியவன் தன்னை என்ன செய்யமுடியுமென்று திமிரோடு அந்த அதிகாரி எழுந்தான். மகனைத் தாக்கினான். மகன் அணிந்திருந்த மாய சப்பாத்துகள், ஆம் அந்தப் புலிமுக சப்பாத்துகள் அவனுக்கு இந்தச் சண்டையில் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் உதவின. சப்பாத்துகள் சட்டென்று பெரிய உருவமெடுத்தது. சிறுவனுடைய கால்களுக்குக்கீழே ஒரு பெரிய புலி கர்ஜனை செய்தபடி அந்த அதிகாரி மேல் பாய்ந்தது. அவ்வளவுதான், அந்த அதிகாரி வீழ்ந்தான்.

நகரம் முழுவதும் அந்த அதிகாரி உதவிக் கேட்டு கெஞ்சிய ஈனக்குரலும், புலியின் பயங்கரமான உறுமல் ஓசையும் கேட்டது. மக்கள் திகைத்தனர். திகிலோடு ஓடிவந்தனர். உண்மையைத் தெரிந்துக் கொண்டார்கள். பெண்ணைக் காப்பாற்றிய அந்தப் புலியை அவர்கள் புகழ்ந்தார்கள்.

இருவரும் வீடு திரும்பினார்கள்.  பிங்லாங் தனக்கு மிகவும் வினோத ஆற்றல் வாய்ந்த மனைவியும், பராக்கிரம மகனும் கிடைத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியில் திளைத்தாள்.

அதுமுதல் அந்த நகரத்து மக்கள் புலி முகம்கொண்ட சப்பாத்துகளை அணியலானார்கள். அப்படி அணிவதால் தங்களின் குடும்பத்துக்கு,  குடும்பப் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்படும் என்று நம்பிக்கைக் கொண்டார்கள்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts