வெள்ளிச் சாணமும் நெருப்பு டிராகன் சட்டையும்

முன்னொரு காலத்தில் கிராமம் ஒன்றில் ஒரு பெரிய மிராசு இருந்தான். இரண்டு மூன்று கிராமங்களின் விளைநிலங்களுக்கு அவன் சொந்தக்காரன். இந்த உலகத்தில் பணத்தைவிட வேறு எதுவும் பெரிதல்ல என்று வாழ்பவன். ஒரு சல்லிக்காசு கூட யாருக்கும் தர்மம் செய்ததில்லை. ஒரு மணி தானியத்தைக்கூட விரையமாக்காது காசாக்கிவிடுவான்.

அந்தக் கிராமத்தில் வாழ்பவர்களெல்லாம் ஏழை விவசாயிகள். இவன் பண்ணைகளில் கூலிக்கு வேலை செய்து பிழைப்பவர்கள். இவனுடைய நிலத்தை நம்பியே வாழ்பவர்கள். இவன் கொடுக்கும் கூலிப்பணம் குறைவென்றபோதிலும் வேறு வழியின்றி வாழ்பவர்கள்.

ஒரு சமயம் அவர்களது நிலப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. சாதாரணப் பஞ்சம் அல்ல: மூன்று நான்கு ஆண்டுகள் மக்களை, ஏழை விவசாயிகளை அது பாடாய்படுத்தியது. கால்நடைகள் மடிந்தன: மரங்கள்கூட காய்ந்த விறகுகளாக மாறி நின்றன.

உணவுக்காக எல்லோரும் படாதபாடு பட்டார்கள். ஆனால் இந்தக் கஞ்ச மிராசு மட்டும் வற்றாமல் வாடாமல் சற்றும் குறைவில்லாமல் இருந்தான். ஆண்டுதோறும் அறுவடையின்போது அவன் நிலத்தில் விளையும் தானியங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலை அவனுக்குக் கிடைத்துவிடும். ஆம், இந்தக் கஞ்சனுக்குப் பஞ்சகாலத்திலும் அறுவடைதான். காரணம் அவனுடைய தானியக் களஞ்சியத்தில் ஆறெழு ஆண்டுகளுக்கு வேண்டிய தானியங்களை அவன் தன்னுடைய நிலங்களிலிருந்து முன்கூட்டியே சேமித்துவைத்துவிட்டான். அவனுக்கு இப்போது பஞ்சத்தின்மூலம் பெரும் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. வழக்கத்தைவிட மூன்று, நான்கு மடங்கு விலை வைக்கலாம் அல்லவா?

ஊரைச் சேர்ந்தவர்கள், இவனது நிலத்தில் பணியாற்றியவர்கள், ஏன் சொந்த பந்தங்களுக்குக்கூட இவன் உதவி செய்யமறுத்துவிட்டான். கல்லான மனத்தோடு விலையைக் கறாறாகக் கறந்துவிடுவான். அது மட்டுமா? களஞ்சியத்தில் வீணாகின்ற தானியங்களைக்கூட யாருக்கும் கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. எந்த நேரமும் ‘பணம் பணம்’ என்று அலையும் இந்த மனித மிருகத்துக்கு எப்படியாவது பாடம் புகட்டவேண்டும் என்று விவசாயிகள் முடிவெடுத்தார்கள். கடைசியில் ஒர் எண்ணம் தோன்றியது. அதன்படி திட்டம் ஒன்றைத் தீட்டி, ஊரிலே எதையும் அதிகமாகப் பேசுகின்ற ‘பெரியவாய்’ அண்டப்புளுகனிடம் பேசினார்கள்.

அண்டப்புளுகனின் திறமை அலாதியானது: அவன் இல்லாத பொருளைக்கூட இருக்கிறது என்று தன் பேச்சால் நம்பவைத்துவிடுவான்; எதையுமே பெரிதாகக் காட்டிக் கொள்வான்; பெரிதாகப் பேசிக் கொள்வான். இப்படிப்பட்டவனைப் பிடித்துத்தான் ஒரு தந்திர நாடகத்தை நடத்த முன்வந்தார்கள் அந்த ஊர் மக்கள்.

இந்தத் தந்திர நாடகத்துக்குக் கொஞ்சம் செலவும் பண்ண வேண்டியிருந்தது. சிறிய மீனைப் போட்டுத்தானே பெரிய மீனைப் பிடிக்கமுடியும். கொஞ்சம் வெள்ளித் துண்டுகளை வாங்கினார்கள். கொஞ்சம் பஞ்சும் தேவையாக இருந்தது. அதன் பின்னர் ஊரிலே யாரிடமோ இருந்த அல்லது எங்கிருந்தோ பிடித்து வந்த ஓர் இளம் குதிரை குட்டியைக் கொண்டு வந்தார்கள். அதன் மலங்கழிக்கும் பின் துவாரத்திலே மூன்று அல்லது நான்கு தோலா எடையுள்ள வெள்ளித் துண்டுகளை உள்ளே செலுத்தினார்கள்: அதிலே பஞ்சைக் கொஞ்சம் மொத்தமாக கயிறுப்போல திரித்து உள்ளே திணித்தார்கள். இப்பொழுது அண்டப்புளுகனிடம் ஒப்படைத்தார்கள்.

அண்டப்புளுகன் அந்தக் கஞ்ச மகாப் பிரபுவின் பெரிய மாளிகைக்குச் சென்றான். அந்த மாளிகை ஒரு பெரிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது. மரங்கள் அடர்ந்திருக்கும் தோப்பில், வீட்டைவிட்டுச் சற்று தூரத்தில் தானியக் களஞ்சியங்களைக் கொண்டிருக்கும் கட்டடங்கள் அமைந்திருந்தன. அருகில் குதிரை லாயங்கள் இருந்தன. அண்டப்புளுகன் அந்தத் தோப்பில் நுழைந்து கஞ்சமகாப் பிரபுவின் கண்ணில் படும் வகையில் அவன்  மாளிகையின் முன் வாசலுக்கு நேரே தன் அருமை குதிரைக் குட்டியுடன் போய் நின்றான்.

எலும்புகள் துருத்திக் கொண்டு இரண்டு அடி எடுத்து வைக்கக்கூட திராணி இல்லாதது போல பார்க்க கொஞ்சம் அருவருப்பானதாகத் தோன்றுகின்ற அந்த குதிரைக் குட்டியையும், அதைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற அண்டப்புளுகனையும் பார்த்தவுடனே கஞ்ச மகாப்பிரபுக்கு எரிச்சல் வந்தது. “யாருய்யா அது? உனக்கு இங்கே என்ன வேலை? எதுக்காக இங்கே வந்தாய்?” என்று கத்தினான். அண்டப்புளுகன் பேச முயன்றான். “ஏய்… என்னுடைய பண்ணை வீட்டை அசிங்கம் பண்ண வந்திருக்கிறாயா… ஓடி விடு” என்று கஞ்ச மகாப்பிரபு சத்தம் போட்டான்.

அண்டப்புளுகன் தெனாவெட்டாக அப்படியே நின்று அவனைப் பார்த்தான். “யோவ் முதலாளி, எதுக்காக இப்படி கத்தி என் அருமைக் குதிரைக்குட்டியை பயப்பட வைக்கிறாய். நீ என் குதிரைக் குட்டியை பயமூட்டினால் அது மலங்கழிக்கும். அதைக் கொண்டு பணம் பார்க்கலாம் என்று நினைக்கிறாயா?” என்றாள்.

அண்டப்புளுகன் என்ன பேசுகிறான் என்பது ஒரு கணம் கஞ்ச மகாப்பிரபுக்கு புரியவில்லை: இருந்தாலும் ‘பணம்’ என்று ஏதோ சொல்கிறானே, என்னவென்றுதான் கேட்போம் என்று நினைத்து அருகில் சென்றான். அண்டப்புளுகன் சொன்னான். “இது என்ன சாதாரண குதிரைக் குட்டின்னு நினைச்சியா? இது போடும் சாணம் அவ்வளவும் வெள்ளி, தெரியுமா? சில சமயம் தங்கம்கூட வரும்”.

கஞ்ச மகாப்பிரபுவுக்கு மயக்கமே வரும் போலிருந்தது. இது உண்மையாக இருக்குமா? எப்படி குதிரை தங்கமும் வெள்ளியுமாகச் சாணம் போடும்? இருந்தும் மனமில்லாமல் கேட்டான். “எங்கிருந்து இந்தக் குதிரைக் குட்டியைப் பிடிச்சுட்டு வந்தே? நீ சொல்வதை எப்படி நம்புவது?” என்றான்.

மகா புளுகன் ‘அளக்க’ ஆரம்பித்தான்! “ஒரு நாள் என் தூக்கத்தில் நீண்ட வெள்ளைத் தாடியோடு கூடிய பெரிய மகான் ஒருவரைப் பார்த்தேன். பணக்கடவுளுக்கு வான மண்டலத்தில் தங்கம், வெள்ளி எல்லாம் சுமந்து போகும் குதிரை இது: இப்பொழுது வயசானதாலே இதை வேண்டாம் என்று பூமிக்கு அனுப்பி விட்டார்கள். மேலோகத்திலே இருந்ததால் இது சாணம் போட்டால் அது அசிங்கமல்லவா? அதனால் தங்கமும் வெள்ளியும் வருவதுபோல் தேவலோகவாசிகள் மாற்றிவிட்டார்கள். இதைப் பற்றி அந்த வெண்தாடி மகான் சொல்லி, என் தூக்கத்திலிருந்து எழுப்பி அதைப் பிடித்துக்கொண்டு போகச் சொன்னார். நான் நம்பால் தூங்கிவிட்டேன். மறுபடி சாமியார் கனவில் வந்து, “தாமதிக்காதே மகனே… நீ அந்தக் குதிரையைப் பிடித்து கொள்ளாவிட்டால் வேறு யாராவது கொண்டுபோய் விடுவார்கள்” என்றார். நான் உடனே எழுந்து வெளியில் சென்றேன். ஏகாந்த மலையருகே ஒரு நெருப்புப் பந்தம் போல் ஏதோ தெரிந்தது. அதன் அருகே நான் போனேன். போகப் போகத்தான் தெரிந்தது அது தகதகக்கும் குதிரைக் குட்டி! அதைப் பிடித்துக்கொண்டு வந்தேன். இந்த உலகத்துக்கு வந்த பின்னர் அது கொஞ்சம் சாதாரண குதிரைபோல் ஆகிவிட்டது. மறுநாள் குதிரைக்கு கொஞ்சம் சாம்பிராணி போட்டு எடுத்துக்கொண்டு போனேன். சட்டியில் இருந்த நெருப்பை ஊதி சாம்பிராணி போட்டவுடன் உடனே இது ஒரு துள்ளு துள்ளி சாணம் போட்டது. சாணமா அது? தங்கமும் வெள்ளியும்தான் வந்தது.” என்றான்.

பேராசை பிடித்த அந்தக் கஞ்ச மகாப்பிரபுவின் வாய் ஆச்சரியத்தில் பிளந்துவிட்டது. “நீ இங்கேயே இரு. இன்னொருமுறை எனக்காக சாணம் போடச்செய்” என்றவாறு வீட்டுக்குள் ஓடி, ஒரு சிறிய கனப்புச் சட்டியில் கொஞ்சம் நெருப்பும் சாம்பிராணியும் கொண்டுவந்தான் அந்தக் கஞ்ச சாம்பிராணி!

கஞ்ச மகாப்பிரபு வீட்டுக்குள் போன உடனேயே அண்டப்புளுகன் குதிரைக் குட்டியின் ஆசன வாயில் திணிக்கப்பட்டிருந்த பஞ்சு உருளையை இழுத்துவிட்டான்.

இப்போது சாம்பிராணியைக் குதிரைக் குட்டியிடம் கொண்டுப் போய்க் காட்டினார்கள். குதிரை உடனே கழுதையைப் போல செருமி கனைத்தது. அப்பொழுது அதன் சாணம் வெளியே வந்து விழுந்தது. ஏற்கெனவே திணிக்கப்பட்டிருந்த வெள்ளிய வெளியே வந்து கொட்டியது.

கஞ்ச மகாப்பிரபுவுக்கு சொல்லமுடியாத ஆச்சரியமும் பேராசையும் ஏற்பட்டது. அண்டப்புளுகனிடம் அவன் கேட்டான்,  “ஏனய்யா. ஒரு நாளைக்கு இது சாணமாக எவ்வளவு போடும்?”

“என்ன? என்னை மாதிரி ஆசாமி என்பதால் ஒரு நாளைக்கு மூணு அல்லது நாலு தோலா வெள்ளியை கழிக்கிறது. உங்களை மாதிரி, உம்ம்… பெரிய எஜமானர் என்றால் ஒரு நாளைக்கு முப்பது அல்லது நாப்பது தோலா வரைக்கும் கழிக்கும்; அந்தச் சாமியார் அதைத்தான் சொன்னாரே!” என்றான்.

கஞ்ச மகாப்பிரபு கணக்குப் போட ஆரம்பித்தான்: ஒரு நாளைக்கு முப்பது தோலாவா, சரி இருபது தோலாவாக இருந்தால்கூட ஒரு மாதத்துக்கு 600 தோலா. அப்படியானால் ஓர் ஆண்டுக்கு 7200 தோலா ஆகிறது. மலைத்துவிட்டார் அந்த மகாபிரபு. எப்படியாவது, என்ன விலை கொடுத்தாவது இந்தக் குதிரைக் குட்டியை தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு கஞ்ச மகாப்பிரபு வந்துவிட்டான். எனவே அண்டப்புளுகனிடம் பேச்சைத் தொடங்கினான்.

ஆனால் அண்டப்புளுகன் உடனடியாக அந்தக் குதிரைக் குட்டியை விற்பதற்கு உடன்படவில்லை.  முரண்டுப் பிடித்தான். கஞ்ச மகாப்பிரபு திரும்பத்திரும்ப அவனிடம் பேசினான். உண்மையில் சொல்லப்போனால் மன்றாட ஆரம்பித்துவிட்டான். உடனே அண்டப்புளுகன் முகத்தை வாட்டமாக வைத்துக் கொண்டு, “சரி, உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கணுமே. எனக்குக் கொடுப்பினை இவ்வளவுதான் போலும்.  சரி, உங்களுக்கே விற்றுவிடுகிறேன். இதுவரை இந்தக் குதிரைக் குட்டி எனக்குக் கொடுத்த பொன்னும் வெள்ளியும் இன்னும் பத்து தலைமுறைக்கு போதும்! ஒன்று செய்யுங்கள், எனக்கு தானிய மூட்டைகளை இதற்குப் பதிலாகக் கொடுத்துவிடுங்கள். முப்பது வைக்கோல் வண்டி கொள்ளுமளவுக்கு தானிய மூட்டைகளை கொடுத்தால் போதும்” என்றான்.

கஞ்ச மகாப்பிரபுக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது: தான் நினைத்ததைவிட மிகவும் மலிவாகவே விலை சொல்கிறானே என்று நினைத்து, உடனே ஒப்புக் கொண்டார். முப்பது வைக்கோல் வண்டி நிரம்பும் அளவுக்கு தானியங்களைக் கொடுக்கச் சொல்லிவிட்டு குதிரைக் குட்டியை வாங்கிக்கொண்டார். பிறகு குதிரையை எங்கே கட்டி வைத்தால் பத்திரமாக இருக்கும் என்று ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்து கடைசியில் தான் வாழும் மாளிகையில், அதுவும் ரத்தினக் கம்பளம் விரித்த தன் படுக்கை அறையில் குதிரைக் குட்டியை கட்டிப்போட்டான். அதையே பார்த்துக்கொண்டு இடத்தைவிட்டு அசையாமல் இருந்தான். அவன் குடும்பத்தினரும், குதிரைக் குட்டி சாணமாக தங்கத்தையோ, வெள்ளியையோ போடப்போகிறது என்ற ஆவலுடன் காத்துக்கிடந்தனர்.

சாம்பிராணி சட்டியை எடுத்துக்கொண்டு போய் குதிரைக் குட்டிக்கு ‘தூபம்’ போட்டான். நடு இரவு வரை ஒன்றும் நடக்கவில்லை: திடீரென்று குதிரை செறுமியது. ஒரு குதி குதித்து தன்னுடைய வாலைத் தூக்கிக் கொண்டது. ஆஹா! கஞ்சன் குதிரையின் வால் பக்கமாகப் போய் உற்றுப் பார்த்தான். அவ்வளவுதான்! குதிரை சாணத்தைப் பீய்ச்சியடித்தது. அவன் அணிந்திருந்த பட்டு உடைகள் எல்லாம் அசிங்கமாகிவிட்டது. அவன் தலை, முகம் முழுவதும் சாணம் மூடியிருந்தது. ஒரே நாற்றம். ரத்தினக் கம்பளமும் பாழ்!

கஞ்ச மகாப் பிரபுவின் படுக்கையறை குதிரை லாயத்தைவிட மோசமாக இப்போது  காட்சியளித்தது. அவன் வெட்கத்தாலும் வேதனையாலும் துடித்தான். அவனுடைய மனைவியும் மக்களும் பெரும் அவமானத்துக்குள்ளானது போல் காட்சியளித்தனர்.

அண்டப்புளுகனைக் கொன்று போடவேண்டுமென்று அவனுடைய ஆள்கள் அவனை ஊரெங்கும் வலைவீசித் தேடினர். அண்டப்புளுகன் எங்கே போய் பதுங்கினான் என்றே யாருக்கும் தெரியவில்லை. அவனை ஊர்மக்கள் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தார்கள்.

ஊர் முழுவதும் கஞ்ச மகாப்பிரபு குதிரையின் கழிச்சல் குறித்து கேலி பேசப்பட்டது. இந்நிலையில், தலை மறைவாக எங்கோ இருந்த அண்டப்புளுகன்  ஒரு பனிக் காலத்தில் கஞ்ச மகாப் பிரபுவின் ஆள்களிடம் பிடிபட்டுவிட்டான். அவனைப் பிடித்து இழுத்து வந்து கஞ்ச மகாப் பிரபுவின் மாளிகை முன் நிறுத்தினர் அவனை கஞ்ச மகாப்பிரபுவும் அவன் ஆட்களும் கடுமையாகத் தாக்கினர். அவனைப் பிடித்து இழுத்துப் போய் திறந்த வெளியில் இருந்த அரிசி ஆலையில் நடுப்பகுதியில் வைத்து அவன் அணிந்திருந்த உடைகளை எல்லாம் உரித்தெடுத்தார்கள். ஒரேயொரு பருத்தி சட்டை மட்டுமே எஞ்சியிருந்தது. இரவு முழுவதும் அங்கே இருந்தால் பனிக் காற்றில் உறைந்து செத்துவிடுவான் என்று கணக்குப்போட்டு வெளியேறினார்கள்.

அண்டப்புளுகன் தவியாகத் தவித்தான். திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. உடம்பைச் சூடாக வைத்துக் கொள்ள பின்னோக்கி நடந்து கொண்டே இருக்கவேண்டும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த ஆலையைச் சுற்றி பின்னோக்கி நடக்கத் தொடங்கினான். அவன் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் ஏற்பட்டது. அவன் ரத்த நாளங்களில் இப்பொழுது சீரான ரத்த ஓட்டம் பாய்ந்தது. வேகமாகவும் பிறகு கொஞ்சம் வேகத்தைக் குறைத்தும் என்று பின்னோக்கி நடந்தபடியே இருந்தான். இரவு எப்படியோ கழிந்தது.

மகா புளுகனின் இறந்த உடலைக் காண வந்த கஞ்ச மகாப்பிரபுவும் அவனுடைய ஆள்களும் திகைத்துப் போனார்கள். வியர்வை வடிய உயிரோடு அவன் நின்றுகொண்டிருந்தான். அது மட்டுமா? கஞ்ச மகாப் பிரபுவைப் பார்த்தது, “முதலாளி, மிகவும் கொதிக்கிறது. காற்று இல்லாவிட்டால் நான் செத்தே விடுவேன். காற்றோட்டமான இடத்துக்கு உடனே என்னைக் கூட்டிச் செல்லுங்கள்” என்று கெஞ்சினான்.

“இந்தக் கடும் குளிரில் உனக்கு மட்டும் எப்படி வியர்க்கிறது?” என்று கேட்டான் கஞ்ச மகாப்பிரபு.

“இதோ நான் அணிந்துள்ள இந்தச் சட்டைதான் என்னை இந்தக் கடும் குளிரில் இருந்து காப்பாற்றியது. இது விலைமிக்க ரோமத்தால் ஆன பின்னலாடை” என்றான்.

“நீ என்ன தான் சொல்லுகிறாய்… கொஞ்சம் விளக்கமாகச் சொல்; சட்டை எப்படி உனக்கு வெப்பம் ஏற்படுத்தும்! புரியாத புதிராய் உள்ளதே!” என்றான் கஞ்ச மகாப்பிரபு.

“முதலாளி, இது நெருப்பு டிராகனின் ரோமத்திலிருந்து எடுத்து நெய்யப்பட்டது. இது சாதாரணமாக யாருக்கும் இங்கே கிடைக்காது. ஒரு நாள் மேலோகத்தில் சொர்க்க ராணிக்கு அதிகம் குளிரடித்தது. அப்போது டிராகன்களின் தேவன் அங்கே சென்றான். அவனை ஒரு போடு போட்டு, அவன் தோலை உரித்து இந்த மேல் சட்டையைத் தயார் செய்தார்கள். அதனால்தான் எனக்கு ஒரே உஷ்ணமாக இருக்கிறது” என்றான்.

அண்டப்புளுகன் தொடர்ந்தான்.

“எப்படியோ என் மூதாதையர்கள்மூலமாக இது என் கைக்கு வந்து சேர்ந்தது. அது எப்படி என் மூதாதையர்களிடம் வந்து சேர்ந்தது என்பதற்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன. சரி, அதெல்லாம் இப்போது எதற்கு? எப்படியோ என் உயிர் பிழைத்ததே” என்றான்.

கஞ்ச மகாப்பிரபுவால் அமைதியாக இருக்கமுடியுமா? உடனே பேரம் பேசத் தொடங்கிவிட்டார்.

“சரி, நான் உன்னை விட்டுவிடுகிறேன். எனக்கு இதைக் கொடுத்துவிடு. நான் அடிக்கடி பனி இரவுகளில் பயணம் செய்கிறேன். எனக்கு இது உபயோகமாக இருக்கும்” என்றான்.

“அதெப்படி, இது என் பரம்பரைச் சொத்து அல்லவா?” என்றான் கஞ்ச மகாப்பிரவு.

“உனக்குத் தேவையான பணம் தருகிறேன்.”

அண்டப்புளுகன் ரொம்பவும் பிகு செய்துகொண்டான். முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டான். கடைசியில் கஞ்ச மகாப்பிரபு தன்னுடைய விலையுயர்ந்த நரித் தோலால் ஆன நீண்ட ஃபர் அங்கியை அவனுக்குக் கொடுத்தான். அண்டப்புளுகன் தன்னுடைய மங்கிய சட்டையை ஒப்படைத்தான்.

கஞ்ச மகாப்பிரபு உடனே யோசிக்கத் தொடங்கிவிட்டார். மாமனார் பிறந்த நாள் விழா வரப்போகிறது. இந்த டிராகன் சட்டையைப் போட்டுக்கொண்டு எல்லாரையும் அசத்திவிட வேண்டியதுதான். வழக்கமாக குளிர் ஆடைகள் அனைத்தையும் விட்டுவிட்டு இதை மட்டும் அணிந்துகொண்டார்.

பயணம் ஆரம்பமானது. மாமனாரின் ஊர் மிகத் தொலைவில் இருந்தது. வழியில் எங்கேயும் தங்கிச் செல்வதற்கு சந்திரங்களோ சாவடிகளோ கிடையாது. கொட்டும் பனி. கடுமையான குளிர். கஞ்ச மகாப்பிரபுக்கு உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது. தாக்குப்பிடித்து முன்னேறினார். முடியவில்லை. ஒரு மரத்தடியில் ஒதுங்கினார். பலனில்லை. சிறிது நேரத்தில் இதயம் நின்றுவிட்டது.

மீண்டும் அண்டப்புளுகன் ஏமாற்றிவிட்டான் என்று அனைவரும் பேசிக்கொண்டார்கள். அவனைக் கொல்லவேண்டும் என்று கோபம் கொண்டார்கள். ஒரு நாள் அவனைப் பிடிக்கவும் செய்தார்கள்.

அண்டப்புளுகன் இதற்கெல்லாம் பயந்துவிடுவானா? சாவகாசமாகச் சொன்னான்.

“நீங்கள் எப்படி என்னைக் குற்றம் சொல்லமுடியும்? நான் கொடுத்த சட்டையைப் போட்டுக் கொண்டு மரத்தடியில் நின்றிருக்கிறார். சட்டையில் வெப்பம் அதிகரித்திருக்கிறது. அப்படியே தொடர்ந்து நின்றுகொண்டிருந்ததால் வெப்பம் அதிகரித்து மரத்தில் தீ பற்றிக்கொண்டுவிட்டது. இவர் இறந்திருக்கிறார். அதோ, பாதி எரிந்து கிடக்கும் அந்த மரத்தைப் பாருங்கள்.”

என்ன சொல்வது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. சரி போ என்று விட்டுவிட்டார்கள்

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts