தெரியாத விலங்கு

முன்னொரு காலத்தில் குய்ஷு (Guizhoo) என்ற ஊரில் கழுதைகள் கிடையாது. ஒரு கழுதையைப் பிடித்து அரசாங்க அலுவலர் ஒருவர் அந்த ஊருக்கு அனுப்பிவைத்தார். ஆனால் அந்தக் கழுதையை எதற்கு பயன்படுத்துவது என்று தெரியாமல் அப்படியே மலை, காடு பகுதிகளில் ஊர்க்காரர்கள் விட்டுவிட்டார்கள்.

கழுதை மலையும் காடும் சேர்ந்த பகுதிகளில் தன்னிச்சையாகத் திரிந்தது. அடிக்கடி வாலைத் தூக்கிக்கொண்டு தன் கனகம்பீரக் குரலை ஒலிக்கச் செய்யும். இதன் குரலின் உரத்த ஒலியால் இதைப் பற்றி அறியாத அங்குள்ள மிருகங்கள் திடுக்கிட்டு ஓடும்.

அங்கே ஒரு புலி இருந்தது. காட்டிலிருந்து வந்த அந்தப் புலி அதுவரை கழுதையைப் பார்த்ததில்லை. கழுதையின் உருவத்தைப் பார்த்து இது சக்திவாய்ந்த மிருகமாக இருக்குமென்று நினைத்தது. கழுதையைப் பார்த்த புலி, கழுதையைப் பார்க்காதவாறு தன்னை மறைத்துக்கொண்டது. கழுதையை எங்கேனும் தூரத்தில் கண்டால், தொலைவாக இருந்து கொண்டது. இந்தப் பெரிய மிருகம் ஒருவேளை தன்னைக் கொல்லவும் கூடும் என்ற அச்சமும் அதற்கு இருந்தது.

நாளாக, நாளாக, கழுதைக்கும் புலிக்கும் உள்ள இடைவெளி குறையலாயிற்று. கழுதையைக் கொஞ்சம் கொஞ்சமாக அளந்துப் பார்க்கத் தொடங்கியது புலி. கழுதையின் உரத்த குரலொலியும் அதன் நீண்ட நேர ஆலாபனையும் திடுக்குறச் செய்தபோதிலும் கழுதையை உன்னிப்பாக புலி கவனித்துவந்தது. பிற காட்டு மிருகங்கள்கூட கழுதையைக் கண்டு அஞ்சி, அதன் காட்டுக் கத்தலைக் கேட்டு அலறியடித்துக் கொண்டு ஓடின.

ஒருநாள் புலி, கழுதையின் எதிரே இருந்தது. கழுதையின் மேல் சின்னதாக ஒரு அடிப்போட்டது. அவ்வளவுதான் கழுதைக்குக் கோபம் வந்தது. தன் இரண்டு பின்னங்கால்களைத் தூக்கியடித்தது. அடி ஒன்றும் பலமாகவுமில்லை. அது தாக்குதலாகவும் தெரியவில்லை. உடனே புலி ஒரேயடியாகப் பாய்ந்தது. கழுதையின் கழுத்தைக் கவ்வி,  பூமியில் கவிழ்த்தது. ஒரு பெரிய உறுமலுடன் அதைப் புரட்டிப் போட்டுக் கிழித்தது. திருப்தியாக கழுதை மாமிசம் உண்டது.

ஒருவருடைய உண்மை நிலையைத் தெரியாமலே நாம் ஒருவர்மீது மதிப்பும் பயமும் கொள்கிறோம். தெரிந்துவிட்டால்?

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts