ஜென் கதைகள்: கிரிசந்தமம் காதல்

கிரிசந்தமம் (Chrysanthemum) என்பது ஒரு பூவகையின் பெயர். இன்று ஏறக்குறைய 650 வகைகள் இந்தப் பூக்களில் உள்ளன. சைனாவில் தான் முதன் முதலில் இந்தப் பூக்கள் வளர்க்கப் பட்டது. இந்தப் பூவைப் பற்றி கி.மு 15'ந்தாம் நூற்றாட்டிலிருந்தே பணைத் தாள்களில் எழுதப் பட்டுள்ள சான்றுகள் உள்ளது. இந்தச் செடியின் வேர்களை போட்டு கொதிக்க வைத்து தலைவலிக்கு நிவாரணியாக பயன் படுத்தி இருக்கிறார்கள். பச்சையிலை தேனீர் போல கிரிசந்தமம் தேனீரும் பருகி இருக்கிறார்கள். விழாக் காலங்களில் மலர்ந்த கிரிசந்தமம் பூக்களின் இதழ்களை சாப்பிட்டும், பச்சடியாக மற்ற காய்கறிகளுடன் கலந்தும் உண்டு இருக்கிறார்கள். கிரிசந்தமம் பூவிற்கு "சூ (Chu)" என்று சைனிஷ் மொழியில் கூறுவார்கள். ஒரு நகரத்தின் பெயரே "சூ-ஸைன் (Chu-Hsien)- கிரிசந்தமம் நகரம்" என்று பெயர் வைத்து கௌரப் படுத்தி இருந்தார்கள்.

கி.பி 8'ஆம் நூற்றாண்டில் ஜப்பானிற்கு கொண்டு செல்லப் பட்டது. கிரிசந்தமம் பூவானது வெகு விரைவிலேயே ஜப்பானில் மிகவும் புகழ் பெற்று விட்டது. ஜப்பான் அரசரின் முத்திரையில் கிரிசந்தமம் பூவை அடையாளமாக உபயோகப் படுத்தி கௌரப் படுத்தி இருக்கிறார்கள். புனிதத் தன்மை வாய்ந்த விழாக்களில் ஒன்றாக "தேசிய கிரிசந்தமம் நாள்" என்று ஒரு நாளை மகிழ்ச்சி திருநாளாக ஒவ்வொரு வருடமும் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை வைத்திருக்கிறார்கள். இன்று இந்தப் பூ உலகம் முழுவதும் காணப்படுகிறது. இந்தப் பூவைப் பற்றி ஜப்பானில் பல கதைகளிலும், ஹைக்கு கவிதையிலும் முதன்மையாக வைத்து எழுதி இருக்கிறார்கள்.

இன்றைய தினம் ஒரு ஸென் கதையில் கிரிசந்தமம் பூவின் மீது காதல்வெறி கொண்ட பரான் (baron) (பிரபு) (ஜப்பானின் உயர்குடி பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள்) ஒருவனைப் பற்றிய கதையைப் பார்ப்போம்.

ஒரு சமயம் ஜப்பானில் வாழ்ந்த பிரபு ஒருவன் கிரிசந்தமம் பூக்களின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தான். தன்னுடைய மனைவி குழந்தைகளை விட அவனுக்கு பூக்களின் மீது மிகுந்த பற்றும், காதலும் வைத்திருந்ததான். தன்னுடைய பண்ணை வீட்டின் பின்புறம் முழுவதும் கிரிசந்தமம் பூக்களை வைத்து வளர்த்து வந்தான். ஆனால் அந்த அன்பு ஒரு எல்லைக்குள் நில்லாமல் அளவு கடந்து மற்றவர்களை இம்சிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது. வேலை ஆட்களோ (அ) மற்றவர்களோ தெரியாமல் அந்தப் பூக்களை பறித்து விட்டாலோ, அல்லது செடியின் கிளைகளை உடைத்து விட்டாலோ அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.

ஒரு சமயம் வேலையாள் ஒருவன் கவனம் இல்லாமல் மலர்ந்த செடியின் கிளையினை உடைத்து விட்டதை அறிந்த பிரபு அவனை சிறையிலிட உத்தரவிட்டான். அதனைக் கேள்வி பட்ட வேலைக்காரன் மனம் உடைந்து ஜப்பான் போர் வீரர்கள் தேர்ந்தெடுக்கும் முறையான தன்னைத் தானே வாளை தலைக்கு மேலே வீசி தற்கொலை செய்து கொள்ளும் முறையில் உயிர் விட்டாலும் விடுவேனே தவிர சிறைக்கு செல்ல மாட்டேன் என்று சபதம் எடுத்தான்.

இந்தச் செய்தியைக் கேள்விப் பட்ட ஸென் ஆசிரியர் ஸென்காய், பிரபுவின் கிரிசந்தமம் பூவின் மேல் உள்ள வெறிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று உறுதி பூண்டார். மழைப் பெய்ந்த ஒரு நாள், பூக்கள் நன்றாக மலர்ந்திருந்த தோட்டத்திற்கு சென்ற ஸென்காய் அரிவாளால் அனைத்து செடிகளையும் ஒன்று விடாமல் வெட்ட ஆரம்பித்தார்.

தோட்டத்தில் புதிய சத்தம் கேட்பதை அறிந்த பிரபு, யாரென எட்டிப் பார்க்க ஏதோ ஒரு உருவம் கையில் அரிவாளுடன் தெரியவே, தன்னுடைய வாளை எடுத்துக் கொண்டு ஆசிரியரை நோக்கி ஓடி வந்தான். வந்தவன் தன்னுடைய வாளை கவனமாக பிடித்துக் கொண்டு, ஆசிரியர் ஸென்காயைப் பார்த்து "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று பதில் சொல்லுமாறு கட்டாயப் படுத்தினான்.

ஸென் ஆசிரியர் அமைதியாக, "களையான இந்தச் செடியை இப்பொழுது களை எடுக்காவிட்டால் நாளடைவில் அதற்கும் அந்தஸ்தும் கௌரமும் கிடைத்து முதன்மை பெற்று விடும்" என்று இரண்டு அர்த்தத்தில் (செடிகளில் களையானது கிரிசந்தமம், மக்களில் களையானவன் பிரபு) அந்தப் பிரபுவைப் பார்த்து பதில் கூறினார்.

அப்பொழுதுதான் பிரபு தான் எந்த மாதிரியான தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதனை உணர்ந்தான். கனவிலிருந்து நிஜ உலகத்திற்கு வந்தவனைப் போல் உணர்ந்தான். அது முதல் கிரிசந்தமம் பூக்களை வளர்ப்பதை விட்டு விட்டான்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts