ஒன்பது திருடர்கள்

ஜப்பானில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த மக்கள் பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஸென் ஆசிரியர் ஒருவரை தங்களுடையக் கிராமத்தினைக் கொள்ளையிட்டு வரும் ஒன்பது கொள்ளைக் கூட்டத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக அழைத்து வந்தனர்.

கிராமத்திற்கு வந்த ஸென் ஆசிரியர் அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக தனக்கு ஒரு கிண்ணத்தில் அரிசி சாதத்தினை எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டும் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.

சீனர்களும், ஜப்பானியர்களும் வெட்டும் குச்சியினை உபயோகித்து தங்களுடைய உணவினை சாப்பிடுவது வழக்கம். நீங்கள் சீன/ஜப்பானிய உணவகங்களுக்கு சென்றால் நான்குகிளை முள்கரண்டியினைத் (ஃபோர்க்) தருவதற்கு பதிலாக வெட்டும் குச்சியைத் தருவார்கள். அதனை உபயோகித்து சீன/ஜப்பானிய மக்கள் மிக எளிதாக சாப்பிடுவது ஆச்சரியமாக இருக்கும். நானும் பல முறை உபயோகித்து சாப்பிட முயற்சித்திருக்கிறேன். ஆனால் அதனை உபயோகித்து நாம் இரண்டு முறை சாப்பிடுவதற்குள் நம்முடன் வந்திருந்த சீன நண்பர்கள் தங்களுடைய கோப்பை சாதத்தினை சாப்பிட்டு முடித்திருப்பார்கள். ஏன் வம்பு என்று சிறுகரண்டியாலேயே (ஸ்புனிலேயே) சாப்பிட ஆரம்பித்து விட்டேன். இல்லை என்றால் பணத்தினையும் கொடுத்து விட்டு சாப்பிடாமல் அல்லவா உணவகத்தினை விட்டு வெளியே வரவேண்டி இருந்திருக்கும். மீண்டும் கதைக்கு செல்வோம்.

கிராம மக்கள் தங்களை கொல்வதற்காக வாள்வீரன் ஒருவனை ஊதியத்திற்கு அழைத்து வந்ததை அறிந்த ஒன்பது திருடர்களும் மறைவாக ஸென் ஆசிரியர் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் அவரின் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.

ஆசிரியரின் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஸென் ஆசிரியர் தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உயர்த்தி மேலே பரந்து கொண்டிருந்த ஈயினை அடித்த போது ஒரு ஈயானது செத்து கிழே விழுந்தது. ஒன்பது முறை தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உபயோகித்து ஒன்பது ஈக்களை செத்து கிழே விழ வைத்தார். பின்பு திரும்பி பார்த்த போது, அங்கு மறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணமல் போயிருந்தனர். அன்றைக்கு சென்றவர்கள்தான் அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts