சொர்கத்தின் வாசல் படி

சொர்கத்தின் வாசல் படி

நொபுஷிகே ஒரு திறமையான சமுராய் போர் வீரன். ஸென் ஆசிரியர் ஹாகுய்னைப் பார்க்க வந்தவன், "சொர்கம், நரகம் என்ற இரண்டும் உண்மையிலேயே உள்ளதா?" எனக் கேட்டான்.

"நீ யாருப்பா?" என்று கேட்டார் ஆசிரியர் ஹாகுய்ன்.
"நான் ஒரு சமுராய்", என்று அந்த போர் வீரன் பதில் அளித்தான்.

"நீயெல்லாம் ஒரு போர் வீரனா? எந்த மன்னன் உன்னை தன்னுடைய பாதுகாவலனாக வைத்துக் கொள்வான்? உன் முகத்தைப் பார்த்தால் தெரிவில் திரிந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரனைப் போல் இருக்கிறது" என்று ஆசிரியர் அடுக்கு மொழியில் வசை பாட ஆரம்பித்தார்.

அதைக் கேட்டு கோபமடைந்த நொபுஷிகே, தன் இடையிலிருந்த உரையிலிருந்து வாளை உருவ ஆரம்பித்தான். ஆனால் ஹாகுய்ன் நிறுத்தாமல் தொடர்ந்து, "ஓ, நீ கூட வாள் வைத்திருக்கிறாயோ? உன்னுடைய வாள் என்னுடைய தலையை வெட்டி விடுமோ? அது வாழைத்தாரைக் கூட வெட்ட முடியாத அளவிற்கு முனை மங்கி போய் உள்ளதே?" என்று மேலும் அவனை நிந்தனை செய்தார்.

உருவிய வாளை நொபுஷிகே கோபத்துடன் ஆசிரியரை நோக்கி உயர்த்திய போது "நரகத்தின் கதவு இப்பொழுது திறக்கிறது பார்" என்றார் அவன் கண்களைப் பார்த்து ஹாகுய்ன்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட சமுராய் ஆசிரியருடைய உண்மையான நோக்கத்தினை புரிந்து கொண்டு வாளினை உரையிலிட்டு அமைதியாக தலை வணங்கினான்.

"இப்பொழுது சொர்க்கத்தின் கதவு திறக்கிறது பார்" என்றார் ஹாகுய்ன்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts