நுவா

சீனப் பெரு நிலமெங்கும் பல்வேறு இனக் குழுக்களிலும் மொழிச் சமூகங்களிலும் (சீன நாடு நம் நாட்டைப் போன்று பல்வேறு இனங்கள், மொழிகள் கொண்ட நாடு) நுவாவின் கதை பன்னெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. கதை மட்டுமின்றி பாடல் வடிவிலும் நுவா பிரபலமான ஒரு பெயர். சீன இலக்கியத்தில் மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரமும்கூட.

உலகமெங்கும் ஓர் ஊழிப் பெருவெள்ளம் ஏற்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நோவா என்ற இறைத் தூதர் காலத்தில் ஏற்பட்ட இந்தப் பெருவெள்ளம் கடவுளின் சீற்றத்தால் ஏற்பட்டது. மனிதர்கள் மிருகங்களைவிடத் தாழ்ந்தவர்களாக, கேவலமானவர்களாக, கொடியவர்களாக, கயவர்களாக மாறிவிட்டதைத் தொடர்ந்து கடவுள் கோபம் கொண்டு வெள்ளத்தை ஏற்படுத்தினார். ஓயாத பெருமழையால் உலகம் முழுவதையும் மூழ்கடித்து மனித இனத்தையே முற்றிலும் அழிக்கச் செய்தான் கடவுள். அதிலே சில நல்லவர்கள், இறைத்தூதர் நோவாவின் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தலை ஏற்று நோவா கட்டிய கப்பலில் தப்பிப் பிழைத்தார்கள். பின்னர் இவர்களிடம் இருந்துதான் மனித இனம் மீண்டெழுந்தது.

இதே ஊழிவெள்ளம் நுவாவின் கதையிலும் நடக்கிறது. வானம் உடைந்தது போல மழை பெய்துக்கொண்டே இருந்தது. பகலா இரவா என்று அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்துகொண்டது. ஒருவருடைய முகம் இன்னொருவருக்குத் தெரியவில்லை. எங்கிருக்கிறோம், எங்கு போகிறோம் எதுவும் புரியவில்லை. மழையோடு காற்றும் சேர்ந்து பேயாட்டம் ஆடுகிறது. வெள்ளச் சுழலில் மனிதர்கள் சிக்கி இறந்தார்கள்.

வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்தது. உயிர்கள் அனைத்தும் அழிந்துவிட்டநிலையில், தூரத்திலே மலை உச்சியில் கைகளைக் கோர்த்தவாறு இரண்டு பேர் செல்கிறார்கள். அவர்கள், நுவா, அவர் அண்ணன் ப்யுக்ஸி. எப்படியோ இந்த இருவர் மட்டும் உயிர் தப்பிவிட்டார்கள்.

அண்ணனும் தங்கையுமாக குன்லுன் என்ற மலைப் பகுதியில் அவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். வேறு மனிதர்கள் இல்லை. உயிரின் வாசனையே இல்லை.

வேறு துணை கிடைக்காததால் அண்ணன், தம்பி இருவரும் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார்கள். ஆனாலும் ஒரு குற்றவுணர்வு. அண்ணனும் தங்கையும் எப்படி மணம் செய்து கொள்வது? இது முறைகேடல்லவா?

ஊழிவெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் அவர்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கின்றனர். தந்தையோடும் தாயோடும் உடன்பிறப்புகளோடும் பாசத்தில் திளைத்து பரவசத்தில் மிதந்த அந்தச் சின்னஞ்சிறு பருவத்தை நினைக்கும்போதெல்லாம், இழந்த சொந்தங்களை எண்ணும்போதெல்லாம் அவர்கள் கண்களில் மற்றொரு வெள்ளம் பெருக்கெடுக்கும். அந்தச் சின்னஞ்சிறு பருவத்தைக் கடக்கும் முன்னே இயற்கை அவர்களை வஞ்சித்துவிட்டது. உறவுகள் இன்றி அவர்கள் தனிமைப்பட்டுப்போனார்கள்.

தனிமை அவர்களைக் கொல்லாமல் கொன்றது. இந்நிலையில்தான் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்கள். குழந்தைகள் பிறந்தால் தனிமை தொலையும் அல்லவா? இந்த நினைப்பை முதலில் யார் சொல்வது? தங்கையிடம் சொல்ல அண்ணன் தயங்கினான். அண்ணனிடம் தலையாட்ட தங்கை கூசினாள். மௌனப் போராட்டம் தொடர்ந்தது. கடைசியில் அண்ணன் எப்படியோ தங்கையிடம் சொல்லிவிட்டான். அதற்கு பின்வான் உலகத்திலுள்ள கடவுளிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பது நியதி. இருவரும், கடவுளிடம் அனுமதி வாங்கிவிட்டு திருமணம் புரிய உறுதிப் பூண்டார்கள்.

ஒரு நாள் அண்ணன் தன் தங்கையை அழைத்துக்கொண்டு குன்லுன் மலை மேல் சென்று கடவுளிடம் தங்கள் கோரிக்கையை முன்வைத்தான். “கடவுளே, உலகில் இப்பொழுது அண்ணன் தங்கையாகிய நாங்கள் மட்டும் மிஞ்சி இருக்கின்றோம். எங்கள் மனித இனம் பெருகவேண்டும். எங்களுக்குத் துணையாக மனிதர்கள் இருக்கவேண்டும். அதற்கு நாங்கள் இருவரும் மணம் புரிந்துகொள்ளவேண்டும். அதன்மூலம் எங்களுக்குக் குழந்தைகள் பிறக்கும். எங்கள் இனம் தழைக்கும். எங்கள் வாழ்வு சுவைக்கும். ஆகவே உன்னுடைய அனுமதியை வேண்டி நிற்கின்றோம். எங்கள் திருமணத்துக்கு நீ அனுமதி அளித்தால் அதற்கு அடையாளமாக நாங்கள் மூட்டும் புகைமூட்டம் அடர்ந்து கலையாமல் இருக்கவேண்டும். காற்றிலே பரவிப்போகாமல் இருக்க வேண்டும்.  உன் அனுமதி இல்லையென்றால் அந்தப் புகைமூட்டம் கலைந்து போகட்டும்” என்றான்.

புகை கலையவில்லை. நெடுநேரம் ஆகியும் காற்றில் கலக்கவில்லை. இருவரும் மகிழ்ந்தனர். கடவுளின் அனுமதி கிடைத்துவிட்டு என்று குதூகலித்தனர். மகிழ்ச்சி பொங்கும் முகங்களோடு அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்தனர். நுவா அங்கேயே கோரைப் புற்களால் ஒரு விசிறி செய்தாள். திருமண வெட்கம் அவளுக்கு ஏற்பட்டது. அதனால் அந்த விசிறியைக் கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு ப்யுக்சியோடு சேர்ந்து நடந்தாள். திருமண நாளின்போது மணப்பெண் ஒரு விசிறியைக் கொண்டு முகத்தை மறைத்துக்கொள்ளும் மரபு இதற்குப் பிறகே தொடங்கியது.

நுவாவும் ப்யுக்சியும் தம்பதிகள் ஆகிவிட்டனர். குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டனர். ஒராண்டு ஓடியது. ஒரு குழந்தை பிறந்தது. இன்னொரு ஆண்டு ஓடியது. மற்றொரு குழந்தை பிறந்தது. ஆனால் இந்த வேகம் அவர்களுக்குப் போதவில்லை. அவர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. களிமண்ணால் மனிதர்களையும் மனிதர்களுக்கு உதவக்கூடிய  மிருகங்களையும், மனிதர்களோடு பழக பறவைகளையும் படைத்தால் என்ன? நுவா களிமண்ணால் இப்பொழுது உருவங்களை வடிக்கத் தொடங்கினாள்.

நுவா முதல் நாளில் கோழிகளைப் படைத்தாள்.

இரண்டாவது நாளில் நாய்களைப் படைத்தாள்

மூன்றாவது நாளில் செம்மறி ஆடுகளைப் படைத்தாள்

நான்காம் நாள் பன்றிகளைப் படைத்தாள்

ஐந்தாவது நாள் பசுக்களைப் படைத்தாள்

ஆறாவது நாளில் குதிரைகளைப் படைத்தாள்

ஏழாவது நாளில் அவள் மஞ்சள் களிமண்ணைக் கொண்டு மனிதர்களைப் படைத்தாள்.

இப்படியே நூற்றுக்கணக்கில் களிமண் உருவங்களை செய்து குவித்தாள். இந்தப் பணியின் பளுவிலே அவளுக்கு களைப்பு ஏற்பட்டது. ஆனால் உற்சாகம் குன்றவில்லை.

களிமண் உருவங்கள் உறுதியாக இல்லை. ஈரம் உலருமுன் அவை வழிந்து உட்கார்ந்தன. எனவே அவற்றை மறுபடி சீர்செய்து,  நிமிர்த்தி, வழிந்து உட்காராமல் இருக்க சின்னஞ்சிறு கயிறுகளால் சுற்றி வைத்தாள். மனித உருவங்களில் சில கீழே சாய்ந்துவிட்டன. அப்படி சாய்ந்துவிட்ட உருவங்கள் பொதுமக்களாக, ஏவலர்களாக பின்னர் மாறின. நிமிர்ந்து நிலைத்து நின்றவை பிரபுக்களாக, அதிகாரம் செலுத்துபவர்களாக ஆயின.

இப்படியாக, நூற்றுக்கணக்கில் மனிதர்கள், மிருகங்கள், பறவைகளின் உருவங்களைத் தாங்கிய களிமண் பொம்மைகளுக்கு உயிர் கொடுக்கும்படி நுவா இறைவனை வேண்டிக்கொண்டாள். கடவுளுக்கு அவளது வேலை பிடித்திருந்தது. எனவே கடவுள் அந்தக் களிமண் உருவங்களுக்கு உயிர் கொடுத்துவிட்டான். ஆம் அவை உயிர்பெற்றெழுந்தன. மஞ்சள் களிமண்ணால் படைக்கப்பட்ட மனித உருவங்கள் இப்பொழுது மஞ்சள் நிற மனிதர்களாக மாறிவிட்டார்கள்.

ஒரு வழியாக மனிதர்களும் மிருகங்களும் பறவைகளும் பெருகிவிட்டன. நுவா மகிழ்ந்தாள். ஒவ்வொரு உயிரிடத்திலும் பாசத்தைப் பொழிந்தாள். அந்த உயிர்களும் நுவாவையும் அவள் கணவனையும் தங்களுடைய தாய் தந்தையாகப் போற்றினர். அவர்களை நென்ஹுவாவ் என்று அழைத்தனர். இதற்கு மனித குலத்தின் பெற்றோர் என்பது பொருளாகும்.

ஒரு சமயம் சீனர்களின் கடவுள்களுக்கிடையே பெரும் சண்டை மூண்டது. ஒண்டிக்கு ஒண்டியாக இரண்டு கடவுளர்கள் மோதிக்கொண்டார்கள். தண்ணீருக்கான கடவுள் நீர் தேவன் எதிரியிடத்தில் தோற்கப்போகும் நிலைக்கு உள்ளானான். எனவே அவன் வெறிகொண்டான். அந்த வெறியோடு தனது தலையை புஷாவ் மலையில் மோதினான். அவ்வளவுதான், மலை கிடுகிடுத்தது. ஆட்டம் கண்டது. இந்த மலைதான் வான மண்டலத்தைத் தாங்கி நின்ற தூண்களில் ஒன்றாகும். இப்படித் தூணாக இருந்த மலை அவன் மோதியதால் குப்புற விழுந்தது. அதனால் வானம் வட மேற்காகத் தாழ்ந்தது. பூமி தென் கிழக்காகச் சாய்ந்துபோனது. இதனால் எத்தனையோ பேரிடர்கள் பூமியிலே நிகழலாயிற்று.

நாட்டிலும்கூட காட்டுத்தீ போலத் தீப்பிடித்துக்கொண்டது. இன்னொரு புறத்திலே வெள்ளம் பெருக்கெடுத்து ஊர்களை மூழ்கடித்தது. மூர்க்கமான அரக்கர்கள் தோன்றி பெரிய மிருகங்களைக்கூட விழுங்கினார்கள். கொடிய சீற்றங்கொண்ட கோரமான விலங்குகள் மக்களைத் தாக்கின. வானத்திலே அச்சந்தரும் பறவைகள் ஆலவட்டம் போட்டன.

நுவா வானத்தில் உடைப்பைச் சரிசெய்ய எண்ணினாள். சாய்ந்து போன வானப்பகுதியை நிமிர்த்தவும், உடைந்துப் போன வான முகட்டினை மீண்டும் ஒட்டவும் முயற்சித்தாள். ராட்சஷ ஆமைகளின் கால்களை வெட்டி, முட்டுக்கொடுத்து சாய்ந்து கிடந்த வானத்தைக் கொஞ்சம் நிமிர வைத்தாள். வானமுகட்டிலே காணப்பட்ட ஓட்டையை ஏழு வகையான நிறங்களைக் கொண்ட கற்களைக் கொண்டு மூடினாள். (இது முதல் தான் ஏழு வண்ணங்களில் வானவில் தோன்றியதாம்). ஆனாலும் அவளால் வானத்தை முழுமையாகச் சரிசெய்ய முடியவில்லை.

ஏனெனில் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் போகின்ற பாதை வடமேற்கு. எனவே அதை முழுதும் மறைக்கும்படி சுவர் வைத்துவிட்டால். இவற்றுக்குப் பாதை இருக்காது. மேலும் சீனாவில் பாய்கின்ற நதிகள் எல்லாம் தென்கிழக்குப் பகுதியிலிருந்து புறப்படுகிறது. எனவே என்ன நுவா முகடுவரை ஏறி வடமேற்கிலிருந்து, தென்கிழக்கு வரை தன்னுடைய உடலால் அந்த ஒட்டை ஏற்பட்ட இடைவெளியை மறைத்தாள். கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்த வெள்ளத்தைத் தடுத்தாள். இதன் நினைவாக ஆண்டுதோறும் ஒரு தினத்தை ஒருவர்மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து கொண்டாடுகிறார்கள். நுவாவை வானத்தின் திருமகளாக நினைத்து இன்றுவரை வழிபடுகின்றனர். சீன மக்கள்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts