நற்பண்பு நன்மையேத் தரும்

ஸென் துறவி ஹாகுய்ன் தன் இளவயதில் நடந்த கதையாக அடிக்கடி தன்னுடைய மாணவர்களுக்கு கூறும் கதையே இன்றைய ஸென் கதையாகும்.

மனதில் வெறுமை நிலையை அடைவதற்காக ஸென் துறவிகள் தியானம் புரிவது வழக்கம். உள்ளுணர்வுகளின் மனக்கற்பனைகளை அழித்து புலனுணர்வுகளால் தூண்டப் படாத உண்மையான மெய்ஞானத்தினை அடைவதே ஸென் தியானத்தின் நோக்கமாகும்.

வாலிபனாக இருந்த போது ஸென் ஆசிரியர்களை சந்திப்பதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஹாகுயன் செல்வது வழக்கம். ஒரு சமயம் ஹாகுயன் மற்ற இரண்டு புத்தத் துறவிகளுடன் மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அதில் ஒரு துறவியானவர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் களைப்படைந்து சோர்வடைந்திருந்தார். அவர் தன்னுடைய தோலில் தொங்கிய பயண மூட்டையையும் ஹாகுயினை எடுத்துக் கொண்டு வருமாறு வருந்தி வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

வாலிபனான ஹாகுய்ன் உடனே வேண்டுகோளை ஏற்று அவருடைய மூட்டையையும் தானே எடுத்துக் கொண்டார். மனதினை வெறுமையில் ஒரு முகப் படுத்தி இன்னொரு மூட்டை இருப்பதாகவே எண்ணிக் கொள்ளாமல் நடந்து சென்று கொண்டிருந்தார்.அவர்களுடன் வந்து கொண்டிருந்த மற்றொரு துறவி ஹாகுயினுடைய வாலிபப் பருவத்தினையும் உதவி செய்யும் ஆற்றலையும் கண்டு தானும் உடல் நிலை சரியில்லாதவன் போல் பாவனை செய்து தன்னுடைய மூட்டையையும் காகுயினை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார். மற்றவர்களுக்கு உதவும் புத்தத் தர்மத்தின் படி, மூன்றாவது பயண மூட்டையையும் தன்னுடன் எடுத்துக் கொண்ட ஹாகுய்ன், முன்பை விட ஆழமாக மனதினை வெறுமையில் மூழ்கச் செய்து கொண்டு அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

மூவரும் இனி படகில் மட்டுமே பயணத்தினை தொடர முடியும் என்ற நிலையில் ஓரிடத்தினை அடைந்தனர். படகில் ஏறி மூட்டைகளை வைத்த ஹாகுய்ன் பயணக் கலைப்பின் காரணமாக பலவீனமாகி மூட்டைகளுக்கு நடுவிலேயே படுத்து நன்றாக உறங்கி விட்டார்.

விழித்து எழுந்த போது ஹாகுயினால் தான் எந்த திசையில் இருக்கிறோம் என்பதனையேக் கண்டு பிடிக்க முடிய வில்லை. கரையை அடைந்தது போல் இருந்த அவருக்கு பயணத்தின் எந்த நினைவுமே இருக்க வில்லை. ஏதோ மிகவும் மோசமான கெட்ட நாற்றம் அடிப்பதையுணர்ந்த ஹாகுய்ன் சுற்றும் முற்றும் பார்த்தார். மற்ற அனைவரும் முகமெல்லாம் வாடி வாயெல்லாம் வாந்தியுடன் படுத்துக் கொண்டிருந்தனர். பயணத்தின் போது அடித்த பேய் சுழற்காற்றில் படகு பேயாட்டம் ஆடி கடற்குமட்டல் நோய்க்கு படகோட்டியுட்பட அனைவரும் ஆட்பட்டிருந்தனர்.

ஹாகுய்ன் மற்ற இருவரின் மூட்டைகளை எடுத்துக் கொண்டு வந்தக் களைப்பினால் தன்னிலையோ பேய்சுழற்காற்று அடித்ததோ தெரியாமல் பயணம் முழுவதும் தூங்கி விட்டிருந்தார். அதனால் கப்பல் பிரயாணத்தில் ஏற்படும் கடற்குமட்டல் நோயிலிருந்து தப்பி விட்டிருந்தார்.

இந்தக் கதையைக் தன் சீடர்களிடம் கூறிய காகுயன், "என்னுடைய வாழ்நாள் அனுபவ அறிவானது நம்மிடம் மறைந்திருக்கும் நல்லோழுக்கமானது எப்பொழுதுமே நன்மையையேத் தரும் என்ற உண்மையினை அறிய உதவியது" என்றார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts