ஆயிரம் நாளும் போதை

சோன்ங்ஷான் (Zhongshan) என்ற ஊரில் டிக்ஸி (Di Xi) என்பவர் இருந்தார். அவர் மது தயாரிப்பதில் கெட்டிக்காரர். அதிக போதையில் ஒருவரை நிறுத்தி வைக்கின்ற வகையில் புதுவகை மதுவை தயாரிக்கின்ற முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அதாவது, ஒரு கோப்பை மதுவின் தாக்கம் ஆயிரம் நாள்களுக்கு நீடிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்.

அதே ஊரில் லியூக்ஸாவான்ஜி என்பவன் இருந்தான். அவனொரு மொடாக்குடியன். எவ்வளவு குடித்தாலும் அவனுக்குப் போதை ஏறாது. ஒருநாள் அவன் இவரிடத்தில் மது குடிக்க வந்தான்.

இவர் அவனிடம் “மது எதுவும் மிச்சமில்லை, ஒரு புதிய மது ரகம் ஒன்றை இப்பொழுதுதான் காய்ச்சிக் கொண்டிருக்கிறேன். அதை உனக்குத் தர முடியாது. நீ போகலாம்” என்றார்.

அவனோ பிடிவாதமாகத் தனக்கு அந்த மதுதான் வேண்டுமென்று கூறிக்கொண்டு நின்றான்.

“இந்த மது உனக்குச் சரியாக இருக்காது. நீயோ அதிகமாகக் குடிக்கக் நினைப்பவன். இந்த மதுவோ ஒரு கோப்பைக்கு மேல் அருந்தக்கூடாது” என்றார்.

“சரி. . . அந்த ஒரு கோப்பையாவது கொடு. நான் இப்பொழுது குடித்தே ஆகவேண்டும்” என்று உட்கார்ந்துவிட்டான்.

டிக்ஸி தனது முதல் பரிசோதனையை இவனிடம் மேற்கொள்ள முடிவெடுத்தார். தனது புதிய கண்டுபிடிப்பை அவனுக்கு முதன் முதலாக ஊற்றிக் கொடுத்தார்.

ஒரு கோப்பையை அவன் அருந்திய பிறகு, மீண்டும் மது கேட்டு கெஞ்சினான். டிக்ஸி மறுத்துவிட்டார். “இனிமேல் கொடுக்கமுடியாது, இந்த ஒரு கோப்பை மதுவே உன்னை மூன்று ஆண்டுகள் மயக்கத்தில் கிடத்திவிடும். . . . நீ முதலில் இடத்தைக் காலி செய்” என்றார்.

லியூ வேறு வழியில்லாமல் கிளம்பினான். அவன் வீடு பக்கத்தில்தான் இருந்தது. ஆனால் என்னவோ நடக்க நடக்க வீடுவெகு தூரமாக தெரிந்தது. எப்படியோ ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தான். வீட்டுக்குப் போய் படுக்கையில் வீழ்ந்தான். அப்படியே கட்டையோடு கட்டையாகிவிட்டான்.

அவனை அவன் வீட்டினர் பார்த்தார்கள். அவனது முகத்தின் நிறமே மாறிப்போய் இருந்தது. சாராயம் விஷமாகி இவனைச் சாகடித்து விட்டது என்று நினைத்தனர். அவனுக்கு எந்த உணர்வும் இல்லை. அவன் இறந்துவிட்டாக எண்ணி, இடுகாட்டில் புதைத்தனர்.

மூன்று ஆண்டுகள் கடந்தன. டிக்ஸி தன்னுடைய புது வகை மதுவின் வேலையைப் பற்றி தெரிந்துகொள்ள நினைத்தார். அதைக் குடித்துவிட்டுப் போன லியூவைத் தேடத்தொடங்கினார்.

லியூவின் வீட்டை விசாரித்து அவனது வீட்டுக்குச் சென்றார். விசாரித்தபோது விட்டிலிருந்தபவர்கள்,  “அவன் இறந்து ஆண்டுகள் ஓடிவிட்டனவே!” என்றனர்.

“இல்லை; அவன் இறந்திருக்கமுடியாது. நானொரு சிறப்பு வகை மதுவைப் பரிசோதனையாக அவனுக்குக் குடிக்கக் கொடுத்தேன். அந்த மது மூன்று ஆண்டுகளுக்குப் போதையில் இருத்தும். அந்த மதுவின் தாக்கத்தில் உணர்விழந்து கிடந்தவனை நீங்கள் உயிரற்றவன் என நினைத்து அடக்கம் செய்துவீட்டீர்கள். இன்றுதான் அவன் கண்விழித்து எழவேண்டிய ஆயிரமாவது நாள். ஆகவே இப்பொழுதே நாம் போய் அவனது புதைக் குழியைத் தோண்டிப் பார்க்க வேண்டும்” என்றார் டிக்ஸி.

அவரை நம்புவதற்கு அவர்கள் தயங்கினார்கள். டிக்ஸி மிகவும் வலியுறுத்தி லியூவின் கல்லறையை உடைக்கவும் தோண்டவும் செய்தார். கல்லறையை உடைத்து மண்ணைத் தோண்டிய போது, சவப்பெட்டி அருகே மண்ணிலிருந்து வியர்வையின் வாசம் அடித்தது. இது எல்லோருக்கும் வினோதமாக பட்டது. மண்ணை முழுவதும் எடுத்து சவப்பெட்டியை மேலே கொண்டுவந்து திறந்தபோது லியூ தூங்கி, படுக்கையிலிருந்து எழுவதைப் போல எழுந்தான்.

கண்களைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தான். தான் எங்கிருக்கிறோம்? ஏன் இவ்வளவு பேர் தன்னைச் சூழ்ந்துகொண்டு நிற்கிறார்கள் என்பதையெல்லாம் அந்தக் குடிகாரன் கவனிக்கவில்லை. தனக்கு மதுவை ஊற்றிக் கொடுத்தவர்தான் கண்ணில் தெரிந்தார். “ஹலோ டிக்ஸி, எனக்கு ஒரு கோப்பை இன்றைக்கும் அந்த மதுவைத் தா” என்றான்.

எப்படி இருந்தது புதிய சரக்கு என்று டிக்ஸி கேட்டபோது அந்தக் குடிகாரன் சொன்னான். “அடேங்கப்பா, நானும் எவ்வளவோ குடிச்சிருக்கேன். ஆனால் உன்னுடையது பிரமாதம். சூரியன் எவ்வளவு தூரம்  ஏறியிருக்கிறான் பார்! அதுவரை நான் தூங்கி மயங்கி இருக்கிறேன் என்றால் எல்லாம் உன் புதுச்சரக்கு செய்த வேலைதான்!”

எல்லோரும் அதைக் கேட்டு சிரித்தனர்.மூன்று ஆண்டுகளாக அவன் தூங்கியது அவனுக்கே தெரியவில்லை. எல்லோரும் கல்லறைத் தோட்டத்திலிருந்து சிரித்துக் கொண்டே வீடு திரும்பினார்கள்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts