சுவர்க்கத்துக்கு ஒரு பயணம்

சீனாவில் ஏதோ ஒரு காலத்திலே, எங்கோ ஒரு ஊரில் மூன்று பேர் இருந்தார்கள்; இந்த மூன்று மனிதர்களின் பெயர்களும் ஒன்றே! ஆம், மூவரின் பெயரும் ஜென்ஜியா என்பதாகும்!

ஒரு ஜென்ஜியா அங்குள்ள தொன்குடியினரின் தலைவன். அடுத்தவன் அவன் வீட்டு சமையற்காரன். இன்னொருவன் அந்த ஊர் தச்சன்! தச்சனுக்கு வாய்த்த மனைவியோ பேரழகி. குணத்திலேயும் அவள் தங்கம்! ஒழுக்கத்தை உயிராக நினைக்கும் உத்தமி!

இந்தப் பேரழகி, சமையற்காரன் ஜென்ஜியா கண்ணிலே எப்படியோ பட்டுவிட்டாள். அவளை நினைத்தே இரவும் பகலும் ஏங்கினான் அந்தச் சமையற்காரன். ஆனால் அவள் அவனை அலட்சியம் செய்தாள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள்.

சமையற்காரனுக்கு வழி ஒன்றும் புலப்படவில்லை. அந்தத் தச்சனை ஒழித்துக்காட்டினால் தான் இந்தப் பேரழகியை நெருங்கமுடியும் என்று நினைத்தான். அதற்காக வாய்ப்புக்காக காத்திருந்தான்!

ஒருநாள் தொல்குடித் தலைவனான ஜென்ஜியாவின் தந்தை மரணமடைந்தான். அவனுக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடமைகளை, மறுஉலகத்துக்கு ஏற்பாடுகளை எல்லாம் தலைவன் ஜென்ஜியா மிகவும் உருக்கமாகச் செய்துக்கொண்டிருந்தான். அப்பொழுது திருமறைச் சுவடிகளை எல்லாம் சமையற்கார ஜென்ஜியா அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். அந்த கால திருமறை வசனங்களைப் படிப்பதில் இவனுக்குத் திறமை இருந்தது. தூய சீனமொழியிலே அமைந்த வாசகங்கள் பேச்சு சீன மொழிபோல் இருக்காது! நம் சங்கத் தமிழ் போல் தூய்மையாக இருக்கும்! இதில் ஒரு ஏட்டை அவன் எடுத்தபோது அவனுக்கொரு யுக்தி தோன்றியது.

ஆம், பண்டைய சீனமொழி நடையில் தொன்குடித்  தலைவனின் இறந்துபோன தந்தை எழுதுவதுப் போல எழுதி, அடுக்கி வைத்த திருமறைச் சுவடிகளில் வைத்துவிடவேண்டும். பிறகு அதை எடுத்து தலைவனிடம் காட்ட வேண்டும். அதை வைத்து அந்தத் தச்சனை மாட்டிவிட வேண்டும் என்பது அவன் திட்டம்!

இறந்துபோன தந்தை தன் மகனுக்கு எழுதுவதுபோல் எழுதியிருந்தான்.

“அருமை மகனே… நான் இறந்த பிறகு என்னைச் சுவர்க்க உலகுக்கு அழைத்துப்போனார்கள். நான் உலகில் வாழ்ந்திருந்தபோது செய்த நன்மைகளால் என்னைச் சுவர்க்க உலகில் ஓர் அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு அலுவலக மாளிகை கிடைக்கவில்லை. அலுவலக மாளிகையை நிர்மாணிக்க இங்கே கொத்தனார்கள் இருந்தாலும் கதவுகள், ஜன்னல்கள் செய்யவும், அலுவலகத்துக்கு வேண்டிய மேஜை, நாற்காலிகள், மற்றும் நான் தங்கும் இடத்தில் சாப்பாட்டு மேஜை, கட்டில் என்று எதுவும் செய்ய ஆள் இல்லை! என்னவோ தெரியவில்லை, தச்சர்கள் யாருமே சுவர்க்கத்துக்கு வருவதில்லை போலும்! அதனால் என் அருமை மகனே, எனக்காக நமது ஊர் தச்சன் ஜென்ஜியாவை இங்கே அனுப்பி வை, வேலை முடிந்ததும் திருப்பி அனுப்பிவிடுகிறேன்.” என்று அந்த ஏட்டில் எழுதி வைத்தான்.

ஒருநாள் சமையற்காரன் தலைவன் ஜென்ஜியாவிடம் “ஐயா, நான் இந்த திருமறை ஏடுகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது புதியது போல தோன்றிய ஏடு ஒன்றும் இருந்தது. ஆனால் அதன் மொழிநடை புரியவில்லை. ஏதேனும் முக்கியமாக இருக்குமோ என்று உங்களுக்கு காட்ட வந்தேன்” என்றான்.

தலைவன் ஜென்ஜியா அதை வாங்கிப் பார்த்தான். தொல்சீர் மொழி நடையில் இருந்ததால் அவனுக்குப் புரியவில்லை. சரி, இதன் பொருள் என்னவென்று தெரிந்துகொள்ள இதையெல்லாம் படிக்கத் தெரிந்த தன் செயலாளருக்கு அனுப்பி வைத்தான். அவர் இவனிடம் வந்து வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் பொருள் கூறி இந்தக் கடிதத்தை ஒப்படைத்தார்.

தலைவன் ஜென்ஜியாவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது, தன்னுடைய தந்தை சுவர்க்க உலகில் நல்ல நிலையில்தான் உள்ளார் என்பதை அறிந்துகொண்டதிலும், அவர் தன்னிடம் ஒரு தச்சனை அனுப்ப கோரிக்கை விடுத்ததிலும் உற்சாகம் கொண்டான். உடனே அந்த ஊரிலேயே இருந்த ஒரே தச்சனான ஜென்ஜியாவை அழைத்துவரச் சொன்னான். அவனிடம் தனது தந்தையின் அழைப்பின்படி சுவர்க்க உலகுக்கு அவன் செல்லவேண்டும் என்று கட்டளை இட்டான்.

தச்சன் ஜென்ஜியா ஆடிப் போய்விட்டான். அதே சமயம் தங்கள் தலைவன் சொல்வதைத் தட்டவும் முடியாது. என்ன செய்யலாம்? கொஞ்ச நாள் அவகாசம் கேட்டு வைக்கலாம். அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, தலைவனான ஜென்ஜியாவிடம், “ஐயா… உங்கள் உத்தரவை எப்படி மறுப்பேன்… அதுவும் உங்கள் தந்தையாருக்குப் பணிசெய்வதற்கு தயங்குவேனோ? இல்லை… எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. ஏழு நாள்கள் மட்டும் பொறுங்கள். அதற்குள் என் குடும்பத்துக்காக செய்ய வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன். ஏழு நாட்கள் கழிந்த பின்னர் நமது ஊரில் வழக்கமாகப் பலி கொடுக்கின்ற இடத்தில் என்னை சுலர்க்கலோகம் அனுப்புவதற்கு நெருப்பு மூட்டுவதற்காக விறகுகளைத் தயார் செய்யுங்கள்; வந்து விடுகின்றேன்” என்றான். தலைவனும் அவன் பேச்சில் திருப்தியுற்று அவனை ஒரு வாரம் கடந்ததும் வரச்சொல்லி அனுப்பிவிட்டான்.

ஜென்ஜியா வீட்டுக்கு வந்தான். தன் மனைவியிடம் நடந்ததைச் சொன்னான். யாரோ தனக்கெதிரானவரின் சதியாகவே இதை நினைத்தான். இது குறித்து துப்பறிந்தான். அவனுக்குக் கிடைத்த செய்தியில் அவன் மனைவிமேல் சமையற்காரன் பித்துப்பிடித்துக் கிடப்பது தெரிந்தது. தன்னை ஒழித்துக்கட்ட அவனே இந்தச் சூழ்ச்சியைச் செய்திருக்கிறான் என்பதை ஜென்ஜியா தெரிந்துகொண்டான். ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள திட்டம் வகுத்தான்.

தன் மனைவியிடம் ஜென்ஜியா திட்டத்தை விவரித்தான். தன் வீட்டிலிருந்து பலி கொடுக்கும் இடம் வரை ரகசியமாக ஒரு சுரங்கவழியைத் தோண்ட வேண்டும். அதற்கே இந்த ஒரு வாரம் ஓடிவிடும். அதன் பின் பலிகொடுக்கும் இடத்தில் புகை அடர்த்தியில் யாரும் சரியாகப் பார்க்கமுடியாத நிலையில் இவன் அதே இடத்திலுள்ள ரகசியமான சுரங்கவாயிலில் நுழைந்து அதை அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடவேண்டும். வீட்டிலும் தங்கி விடாமல் வீட்டின் கீழ் உள்ள சுரங்கப் பகுதியிலே அடைப்பட்டுக்கிடக்க வேண்டும். ஓராண்டுக்குப் பிறகு மற்றதைப் பார்த்துக்கொள்ளலாம் என்றான்.

திட்டமிட்டப்படி அவனும் அவன் மனைவியும் அவர்கள் படுக்கை அறையின் தரைப் பகுதியிலிருந்து தோண்டி மண்ணை எடுத்து, வழி ஏற்படுத்தினார்கள். சரியான திசையில் சுரங்கம் தோண்டப்பட்டது. மிகச் சரியாக “பலிகொடுக்கின்ற இடம்” வரை சுரங்கம் தயார் ஆனது.

பலி கொடுக்கின்ற நெருப்பு வளர்க்கின்ற பெரிய குழி இருக்கும் பகுதியில் சற்று தள்ளி புதர்கள் மண்டிக் கிடந்தன. அந்தப் புதர்கள் உள்ள இடத்தில்தான் இவன் சுரங்கத்தின் ஒரு வாயிலை ஏற்படுத்தியிருந்தான். புதர்களின் மறைவில் அந்தக் குழி தெரியவில்லை!

குறிப்பிட்ட தினம் வந்தது. சமையற்காரனிடம் எச்சரிக்கையாக நடந்துகொள் என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு தலைவன் ஜென்ஜியாவிடம் வந்தான். தலைவன் ஜென்ஜியா அவனை அன்புடன் வரவேற்றான். தன் தந்தைக்காக ‘சுவனம்’  செல்பவன் என்று அவனை எண்ணித் தழுவிக்கொண்டான். பின்னர் இருவரும் ஊர் மக்கள் திரண்டிருந்த பலி கொடுக்கும் இடத்துக்கு வந்தார்கள். அங்கே சமையற்காரன் ஜென்ஜியாவும் இருந்தான். அவன் கண்களில் மகிழ்ச்சி தென்பட்டது.

விறகுகள் கொழுந்துவிட்டு எரிந்தன. மேலோகம் போவதற்காக ‘சுலோகங்கள்’ சொல்லப்பட்டன. தலைவன் ஜென்ஜியா தச்சு வேலைக்குரிய கருவிகள் கொண்ட பெட்டியை தச்சன் ஜென்ஜியாவிடம் கொடுத்து அவன் தோளிலே மாட்டிக்கொள்ளச் சொன்னான். இன்னொரு பையிலே அவனது ஆடைகளை வைத்து கையிலே எடுத்துக்கொள்ளச் சொன்னான். பின் பற்றி எரிகின்ற விறகுகளினிடையே அமைக்கப்பட்ட இருக்கையில் போய் படுக்கச் சொன்னான்.

சுற்றி எரியும் நெருப்பைப் பார்த்தப்படி கொஞ்சம் பயத்தோடு தச்சன் ஜென்ஜிஜா முன்னேறினான். இப்பொழுது மந்திரங்கள் வேகமாக முழங்கின. விறகுகளை கொண்டுவந்து நெருப்பில் போட்டனர். நெருப்பு ‘திகுதிகு’ என்று எரிந்தது. புகை அடர்த்தியாகப் பரவியது. ஒவ்வொருவரும் கண் எரிச்சலில் கண்களைக் கசக்கிக்கொண்டனர். தச்சன் ஜென்ஜியா யாரும் அறியாமல் சட்டென்று அந்த இடத்தைவிட்டு அகன்றான். புதரில் போய் படுத்தான். அப்படியே உருண்டுக்கொண்டே சுரங்கக் குழியில் விழுந்தான். அவனை யாருமே பார்க்கவில்லை!

நெருப்புக்கொழுந்துகள் நீண்ட நாக்குகளை நீட்டி நீட்டி உயர்ந்தன. யாருமே எட்டிப்பார்க்கக்கூட முடியாத அளவுக்கு வெப்பமும் நெருப்பின் உக்கிரமும் இருந்தது. சமையற்காரன் தயாராக இருந்தான். ஒருவேளை தச்சன் அழுது புலம்பி தன்னை விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டால் என்ன செய்வது என்று முன்னெச்சரிக்கையுடன் அவன் ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தான். அவன் அழுகையோ குரலோ கேட்கமுடியாதபடி முரசுகளை ஓங்கி ஒலிக்கச் சொன்னான். அவனோ மேலுலகம் செல்கிறான். அவனுக்கு அப்படித்தான் ஒரு மரியாதை செய்யவேண்டும் என்று அங்குள்ள கூட்டத்தாரிடம் விளக்கம் சொன்னான்.

நின்றெரிந்த நெருப்புத் தணிந்தது. நெருப்பை அணையவிட்டு அந்த இருக்கையை ஓடிப்போய் பார்த்தார்கள். இருக்கை முழு சாம்பலாக இருந்தது. சரி… தச்சன் சுவர்க்கம் போய்விட்டான் என்று மக்கள் நம்பி வீடு திரும்பினர். சமையற்காரன் ஜென்ஜிஜா முழு உற்சாகத்தோடு, தன் திட்டம் வெற்றிபெற்ற மகிழ்வில் வீடு சென்றான்.

திட்டப்படி, தச்சன் ஜென்ஜிஜா சுரங்க அறையில் பதுங்கியிருந்தான். அவன் மனைவி அவனுக்குச் சமைத்து எடுத்துக்கொண்டு போய் தங்களின் படுக்கையறைக்குக் கீழுள்ள சுரங்கப் பகுதியில் தன் கணவனுக்கு உணவளிப்பாள். யாரும் இதை அறியவில்லை. இப்படியே ஓராண்டுகள் ஓடின.

இந்த ஓராண்டில் சமையற்காரன் பலமுறை தச்சன் பெண்டாட்டியைத் தேடிச் சென்றான். பசப்பு வார்த்தைகள் பேசினான். பாசத்தைக் கொட்டினான். சில சமயங்களில் காதல் மொழிகளையும் பேசினான். ஆனால் அவளோ தொடர்ந்து அவனை வெறுத்து ஒதுக்கி வந்தாள். சில சமயம், தொந்தரவு கொடுக்கின்ற கோழிகளையோ வாத்துக்களையோ மிரட்டுவதாக பாவனை பண்ணிக்கொண்டு, “என்கிட்டே ஏதாவது வச்சிக்கிட்டே உன் தலையை அறுத்துப்புடுவேன்” என்று அரிவாளைக் காட்டுவாள்!

ஓராண்டு முடிந்த பிறகு ஒரு நாள் தச்சன் ஜென்ஜியா ஊர்த் தலைவன் ஜென்ஜியாவிடம் சென்றான். சுரங்கத்துக்குள்ளேயே ஓராண்டு முழுவதும் இருந்ததால் வெளியே சென்று வேலைகள் எதுவும் செய்யாததனால் இப்பொழுது தச்சன் ஜென்ஜியா வெயில் படாமல் வெளுத்திருந்தான். சதைப் போட்டு ஜம்மென்று இருந்தான். ஊர்த் தலைவன் ஜென்ஜியா அவனிடம், “உங்கள் தகப்பனாருக்கு குறை எதுவுமில்லை. நன்றாக இருக்கின்றார். நான் அவருடைய வீட்டுக்கு ஆக வேண்டிய எல்லா தச்சு வேலைகளையும் செய்து கொடுத்துவிட்டேன். ரொம்பவும் திருப்தி என்றார். ஆனால் என்ன குறையென்றால். அவர் உங்கள் வீட்டு சாப்பாட்டுக்காக ஏங்குகிறார். அங்கே அதுப்போல சமைக்க ஆளில்லை. உங்களிடத்தில் சொல்லி ஒரு சமையற்காரனை, அட நம்ம சமையல் ஜென்ஜியாவை அனுப்பிவைக்கச் சொன்னார்” என்றான்.

தலைவன் ஜென்ஜியாவுக்கும் சமையற்காரன் ஜென்ஜியாவுக்கும் அவன் சொல்வது உண்மையாகப்பட்டது. தச்சன் ஜென்ஜியா தளதளவென்று தக்காளி மாதிரி வந்திருக்கிறான். சுவர்க்கத்தின் புஷ்டி உணவும் வானிலையும் காரணமாக இருந்திருக்குமோ?

எப்படியோ, சமையல்காரன் ஜென்ஜியாவை அனுப்ப முடிவெடுத்தான் தலைவன் ஜென்ஜியா. முன்பு போலவே ஒரு நாள் குறிக்கப்பட்டது. தாரை தப்பட்டங்கள் முழங்கின. விறகுகள் நெருப்பைக் கக்கின. புரண்டெழுந்த நெருப்பு ஜுவாலைகளுக்கிடையே சமையற்காரன் ஜென்ஜியா போனான். சில விநாடிகள்தாம். பலி இருக்கையில் எரிந்த சமையற்காரனின் எலும்புகள் கரியாகிக் கிடந்தன!

சமையற்காரன் ஓராண்டில் திரும்பிவிடுவான் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால் அவன் வரவேயில்லை. தச்சன் தன் மனைவியுடன் பழையபடி மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவரத் தொடங்கினான்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts