தொட்டிக்காரன்

ஸென் ஆசிரியர்கள் தன்னுடைய மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தனியறையில் மற்றவர்கள் இல்லாதபோது விவாதித்து பதில் தருவதுண்டு, அப்படி ஒருவருக்கு பதில் தந்து கொண்டிருக்கும் போது மற்ற மாணவர்களோ, வேறு விருந்தினர்களோ அந்த அறைக்கு வருவதற்கு அனுமதி கொடுப்பதில்லை.

ஜப்பானில் உள்ள கியோடோவில் இருந்த கெனின் கோயிலில் மொகுராய் என்ற ஸென் ஆசிரியர் இருந்தார். மொகுராய் தன்னுடைய மாணவர்கள் மட்டும் அல்லாமல் வியாபாரிகள், செய்தித்தாள் போடுபவன் என்று யாரக இருந்தாலும் சிறிது நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை விரும்புபவர். ஒரு குளியல் தொட்டி செய்யும் தொட்டிக்காரன், சிறிதும் படிப்பறிவு இல்லாதவன், ஸென் ஆசிரியர் மொகுராயை பார்ப்பதற்கு அடிக்கடி வருவதுண்டு. ஏதாவது குருட்டுத் தனமான கேள்விகளை ஆசிரியரிடம் கேட்டுவிட்டு, பச்சையிலை தேனீரினை அருந்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் செல்வான்.

ஒரு முறை தொட்டிக்காரன் வந்திருந்த போது மொகுராய் அங்கு வந்திருந்த தன்னுடைய மாணவன் ஒருவனுக்கு தனிப்பட்ட முறையில் யாருடைய தொந்திரவும் இல்லாமல் பதில் அளிக்க விரும்பினார். அதணால் தொட்டிக்காரனிடம் அருகில் இருக்கும் ஒரு அறைக்கு சென்று காத்திருக்கச் சொன்னார்.

ஆசிரியர் தன்னை வேறு ஒரு அறைக்கு சென்று காத்திருக்கச் சொன்னதை விரும்பாத தொட்டிக்காரன், ஆசிரியரைப் பார்த்து "நீங்கள் உயிருடன் வாழும் புத்தர் என்பது எனக்குப் புரிகிறது" என்று அழுத்தமாக கூறிவிட்டு, மேலும் அவரைப் பார்த்து மறுப்பு தெரிவிக்கும் விதமாக, "கோயிலில் இருக்கும் கல்லால் செய்யப் பட்ட புத்தரே, கூட்டம் கூட்டமாக வந்து தன்னை வணங்கிச் செல்லும் மக்களையும், தன்னையே எப்போது சுற்றிக் கொண்டும், அமர்ந்து பார்த்துக் கொண்டும், தியானித்துக் கொண்டும் இருக்கும் பிக்ஷுக்களையும் கூட, ஒரே ஒரு தடவை கூட வெளியே அனுப்பியது இல்லை, அப்படி பட்ட கல் புத்தரே அமைதியாக இருக்க, நீங்கள் மட்டும் ஏன் என்னை இங்கிருந்து வெளியேறச் சொல்ல வேண்டும்?" என்று கேட்டான்.

வேறு வழியில்லாமல் மொகுராய் தன்னுடைய மாணவனை அழைத்துக் கொண்டு பக்கத்து அறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts