நாய் முகத் தொப்பி

சீனாவில் நாட்டுப்புறப் பகுதிகளில் சிறுவர்கள் அணிகின்ற தொப்பி அது. ஆனால் கொஞ்சம் விசித்திரமானது, வேடிக்கையானது. அந்தத் தொப்பியை குழந்தைகள் அணிவதற்கு என்ன காரணம்?

சீன மக்கள் அனைவருக்கும் அந்தக் கதை தெரியும். வெகு காலத்துக்கு முன்னர் ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து, இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். இதிலே மூத்த சகோதரரும் அவரது மனைவியும் நேர்மையானவர்களாகவும், நிதானமும் பொறுமையும் கொண்டவர்களாகவும், தாராள நெஞ்சுடையவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கோ குழந்தை கிடையாது. அக்காலத்தில் சீன மக்கள் குழந்தைப்பேறு இல்லையென்றால் பெரிய குறையென்று கருதுவார்கள். வாழ்க்கை பொருளற்றது என்று நினைத்து வருந்துவார்கள். இந்தத் தம்பதியரும் அதே போல் வாட்டமுற்றார்கள். குழந்தையில்லா வெறுமையிலே கவலைக்கொண்டார்கள். தன்னுடைய குடும்பத்தில் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள்.

மூத்த சகோதரரின் தம்பிக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். இந்த இருவரில் ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். ஒரு பிள்ளை அண்ணன் குடும்பத்துக்கும் இன்னொரு பிள்ளை தம்பி குடும்பத்துக்கும் வாரிசாகத் திகழ்வார்கள் அல்லவா? இந்த எண்ணத்தைத் தன்னுடைய தம்பியிடம் தெரிவித்து அவனது ஒப்புதலைப் பெறலாம் என்று எண்ணினார் அண்ணன்.

ஒருநாள் அண்ணன் தனது தம்பியிடமும் தம்பி மனைவியிடமும் தன்னுடைய தத்து எடுக்கின்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். தம்பி அதை விரும்புவான், ஏற்றுக்கொள்வான் என்று அண்ணன் நினைத்தார். ஆனால் நேர்மாறாக தம்பியும் தம்பி மனைவியும் தங்கள் விருப்பமின்மையை சொல்லாமல் சொல்லிப் போனார்கள். தம்பியின் போக்கு அண்ணனுக்குப் புரியவில்லை. எதனால் அவர்கள் மறுக்கிறார்கள் என்று அவர் குழம்பிப்போனார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு தம்பி ஒரு நாள் திடீரென்று மரணமடைந்தான். அவருடைய மனைவியால் தன் இரண்டு குழந்தைகளை வளர்க்கமுடியாமல் போனது. வருமானம் இல்லாமல் போனதால் அவள் திண்டாடினாள். இந்த நிலைமையை அறிந்த மூத்த சகோதரர் திரும்பவும் அவளிடம் சென்று அவன் குழந்தைகளில் ஒன்றைத் தான் தத்து எடுத்துக்கொண்டு வளர்க்க விருப்பம் என்று கூறினார். அப்பொழுதும் அவள் மறுத்துவிட்டாள். இப்போதும் காரணம் தெரியவில்லை.

ஆண்டுகள் ஓடின. தம்பி, மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளை வளர்த்துவந்தாள். ஆச்சரியமூட்டும் வகையில், அண்ணனின் மனைவி கர்ப்பம் தரித்தாள். அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தன் மனைவியை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். அக்காலத்தில் ஊருக்கு ஒரு மருத்துவச்சிதான் இருப்பாள். அவளை மனைவியின் பேறு காலத்துக்கு முன்கூட்டியே சொல்லி வைத்தான். அதே நேரத்தில் தன்னுடைய வியாபார தொடர்பு காரணமாக அடிக்கடி வெளியூர்களுக்கு அவன் செல்லக்கூடியவன் என்பதால் பிரசவ நேரத்தில் தான் வெளியூருக்கு செல்ல நேரிட்டால் என்ன செய்வது என்று கவலையும்கொண்டான். ஆனால் அவனுக்கு ஆறுதலாக தம்பியின் மனைவி தானாக முன்வந்து அவன் இல்லாதபோது அவளைக் கவனித்துக் கொள்வதாகக் கூறினாள்.

பேறுகாலம் வந்தது. அண்ணன் வியாபார விஷயமாக வெளியூரில் இருந்தான். இடுப்பு வலி எடுத்தவுடன், தம்பி மனைவி ஓடோடிப்போய் மருத்துவச்சியை அழைத்துவந்தாள். உண்மையில் தம்பியின் மனைவி இப்படியெல்லாம் உதவிகரமாகச் செயல்பட்டதற்கு ஓர் உள்நோக்கம் இருந்தது. தன் கணவனின் அண்ணனுக்கு வாரிசு இல்லாமல் போகவேண்டும், அவர்களுடைய முழு சொத்தும் தன் கைக்கு வரவேண்டும் என்பதுதான் அவளுடைய கெட்ட எண்ணம். இதனைச் செயல்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு அல்லவா? பிரசவத்துக்கு உதவுவதுபோல நடித்து எப்படியாவது குழந்தையைத் தொலைத்துக்கட்டிவிடுவது என்று முடிவெடுத்தாள்.

தன் பிள்ளைகளில் ஒன்றைத் தத்துக்கொடுக்க அவள் மறுத்ததற்குக் காரணமும் அதுதான். தத்து கொடுத்த குழந்தை அவர்களோடு போய்விட்டால் சொத்தை அனுபவிக்கமுடியாதே! இப்போது அவளுடைய திட்டம், பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியைக் கையில் போட்டுக்கொண்டு, குழந்தையை அப்புறப்படுத்துவது.

எதிர்பார்த்தபடியே ஒரு நாள் குழந்தை பிறந்தது. பெற்றெடுத்தவள் சற்று நேரம் மயக்கமுற்றாள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இருவரும் அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டுபோய் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், யாரும் காணாத இடத்தில் போட்டுவிட்டுத் திரும்பிவிடுகின்றனர். இரண்டு கண்கள் இதையெல்லாம் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. திரும்பியவுடன் ஒரு குட்டி நாயைப் பிடித்து தோலை முழுமையாக உரித்து அதைத் துணியிலே நன்றாகச் சுற்றிக்கொண்டு வந்து மயக்கமாக இருக்கும் பெண்ணுக்கு அருகில் வைத்து விடுகிறார்கள். சின்னஞ்சிறு நாய், தோல் உரித்தெடுத்தப் பின்னர் குறைமாதக் குழந்தையைப் போலத் தோன்றும் போலும்.

மயக்கம் தெளிந்து எழுந்தவள், தனது அருமைக் குழந்தையைக் காணும் ஆவலுடன் திரும்பினாள். பேரதிர்ச்சியடைந்தாள். துயரத்தில் மூழ்கி கண்ணீர் வடித்தாள். கதறி அழுதாள். குழந்தை பிறந்த செய்தி கேட்டு வீடு திரும்பிய கணவனும் உடன் சேர்ந்து அழுது தீர்த்தான். பாவம், இருவரும் உடைந்துபோனார்கள்.

அந்தத் துயரமான வேளையில் அவர்கள் வீட்டு வாசலிலே ஒரு பழுப்பு வண்ண நாய் வந்து நின்றது. துயரில் தலை கவிழ்ந்துக் கிடந்த கணவனுடைய அருகில் சென்று தன் முன் கால்களால் அவனைப் பற்றி இழுத்தது. அது அவனை வெளியே கூப்பிடுகிறது என்று தெரிந்து அவனும் அதன் கூடவே சென்றான். நாய் அவனது வீட்டுக்குப் பக்கத்திலே உள்ள ஒரு தோப்பின் இடையில் உள்ள தன் தங்குமிடமான ஒரு மர இடுக்கின் இடையில் ஓடியது. அங்கே ஓர் அழகிய குழந்தை கை, கால்களை ஆட்டி உதைத்து அழுதுக்கொண்டிருந்தது. அண்ணன் ஆசையுடன் அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டான். அவனுக்கு உண்மைப் புலப்பட்டுவிட்டது. தன் குழந்தையைத் தன் தம்பி மனைவியும், மருத்துவச்சியும் சேர்த்து சதி செய்து போட்டு விட்டிருக்கிறார்கள். நாய்தான் அதைக் கண்டெடுத்து காப்பாற்றியிருக்கிறது.

வீடு திரும்பினான். தானும் தன் மனைவியும் எப்பொழுதாவது சிறிதளவு உணவு கொடுக்கும் அந்த நாயை நினைத்து நன்றியால் கண்கள் வழிந்தான். நாலு கால் பிராணிக்கு உள்ள நேயமும் நேர்மையும் தன் தம்பி மனைவிக்கு இல்லையே என்று கொதித்தான். ஊர் நாட்டாண்மையிடம் சென்று புகார் உரைத்தான். ஊரே இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தது. அவளையும் மருத்துவச்சியையும் தண்டிக்க குரல் கொடுத்தது. அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட்டார்கள். நன்றியுடன் குழந்தையை மீட்டெடுத்துக்கொடுத்த அந்த நாயை ஆச்சரியத்துடன் போற்றிப் புகழ்ந்தார்கள்.

குழந்தை மறுபடி கிடைக்கப்பெற்ற தாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தங்கள் குடும்பத்துக்கு ஒரு வாரிசு வந்துவிட்டது. தங்கள் வீட்டில் ஓர் ஒளிவிளக்கு ஒளிரத் துவங்கிவிட்டது. தங்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்துவந்த இருளும் இறுக்கமும் மறைந்து விட்டது என்று மகிழ்ந்தாள். அனைத்துக்கும் காரணமான அந்த நாயை நினைத்து நினைத்து நெகிழ்ந்தாள். அந்த நாய்க்கு தான் காட்டும் நன்றியின் அடையாளமாகத் தன்னுடைய குழந்தைக்கு ஒரு தொப்பி செய்தாள். அந்தத் தொப்பியின் வடிவம் நாய்முகத் தோற்றத்தில் அமைந்திருந்தது. அந்தத் தொப்பியை அணிந்த அந்தப் பிள்ளை எங்கு சென்றாலும் அதைப் பார்த்தவர்கள். “அதோ… நாய் மீட்டெடுத்த குழந்தை” என்று கூறுவார்கள்.

பின்னர் அக்குழந்தை அணிந்த தொப்பிக்கு ‘மவுசு’ ஏற்பட்டு விட்டது. எல்லாக் குழந்தைகளும் அதைப் போன்ற தொப்பியை அணிய ஆசைப்பட்டனர். எல்லாக் குழந்தைகளும் இப்பொழுது “நாய்த் தொப்பியை” அணிந்துக் கொண்டு மகிழ்ச்சியோடு உலா வருகின்றார்கள். நாயின் நன்றியுணர்ச்சிக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக இன்று அந்தத் தொப்பி மாறிவிட்டது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts