தேனீர் விருந்து சண்டை

ஜப்பானில் தேனீர் விழாவானது மிகவும் தொன்று தொட்டு நடந்து வரும் மரபான விழாக்களில் ஒன்று. தேனீர் விழாவினை நடத்தும் ஆசிரியர்கள் சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த நிலையிலும் மதிப்புடனும் நடத்தப் பட்டனர். தேனீர் விழாவிற்கு விருந்தினர்களை வர வழைத்து, அதற்கென பிரத்யோகமாக தயாரிக்கப் பட்ட சிறிய பிங்கான் கோப்பையில் தேனீர் ஊற்றப் பட்டு விருந்தினருக்கு அளிக்கப் படும். வருகின்ற விருந்தினர்கள் மகிழ்வதற்காக தேனீர் தயாரிக்கப் படும் குடிசையானது விலையுயர்ந்த கலைப் பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். எளிமையான ஆனால் மிகவும் சிரத்தை எடுத்து பொருமையுடன் தேனீர் விழாவிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். தேனீர் விழாவினை நடத்தும் ஆசிரியர் மிகவும் பொருமையும் நிதானமும் கொண்டவராகவும், குறைந்தது பத்து வருடங்கள் இதற்கான பயிற்சியினை முறையான ஆசிரியரிடம் பயின்று விட்டே தாங்களாக தேனீர் விழாவினை நடத்தவோ, விருந்தினர்களை அழைக்கவோ முடியும். ஜப்பானில் மிகவும் புகழ்பெற்ற பச்சை இலைத் தேனீரைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருந்தால் உங்களுக்கு முன்பே ஜப்பானின் தேனீர் விருந்து பற்றியும் கேள்வி பட்டிருக்கக் கூடும். தேனீர் விழாவினைப் பற்றி மற்றொரு சமயம் இன்னும் விரிவாக பார்ப்போம். தற்போது கதைக்குச் செல்வோம்.

ஒரு சமயம் நடந்த தேனீர் விழாவில் வந்திருந்த சமுராய் போர் வீரன் ஒருவனை தேனீர் ஆசிரியர் சரியாக கவனித்து உபசரிக்கத் தவறிவிட்டார். ஆனால் அதனை சற்று நேரத்தில் உணர்ந்த ஆசிரியர், போர் வீரனிடம் சென்று தன்னுடைய தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இயற்கையிலேயே போர்க் குணமும், வெறியும் கொண்ட அந்த சமுராய் போர் வீரன் ஆசிரியரை மன்னித்து விடத் தயாராய் இல்லை. மிகவும் கோபத்துடன் தேனீர் ஆசிரியரிடம் "நாளை என்னுடன் வாள் சண்டைக்கு வந்து மோது, அதில் எனது மனக்கசப்பைத் தீர்த்துக் கொள்ளலாம்" என சவால் விட்டு விட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.

தேனீர் ஆசிரியர் வாள் வீச்சில் எந்த விதமான பயிற்சியும் எடுத்தவர் இல்லை. அதணால் விருந்திற்கு வந்திருந்த வாள் பயிற்சியில் சிறந்த மற்றொரு விருந்தினரான ஸென் ஆசிரியரிடம் சென்று அறிவுரைக் கேட்டு விட்டு மற்றவர்களை உபசரிக்கச் சென்று விட்டார். ஸென் ஆசிரியர் தேனீர் ஆசிரியரினைக் கவனித்துக் கொண்டிருந்தார். தேனீர் ஆசிரியர் எந்த பதட்டமோ, பயமோ இல்லாமல் அங்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு கலை நயத்துடன் எப்பொழுதும் போல அதே பொருமையுடனும், கவனத்துடனும் உபசரித்துக் கொண்டிருந்தார். மற்றவர்களை உபசரித்துக் கொண்டே ஸென் ஆசிரியரிடமும் வந்து அவருக்கான கோப்பையில் பொருமையாக பச்சையிலைத் தேனீரினை கவனமாகவும் முறையாகவும் ஊற்றிக் கொடுத்தார்.

ஸென் ஆசிரியர், "நாளை சமுராய் போர் வீரனுடன் மோதும் போது, எதிரியினைத் தாக்கும் விதத்தில் உன்னுடைய வாளினை நன்றாக தலைக்கு மேல் உயர்த்தி பிடித்துக் கொள், தேனீர் விருந்தில் எவ்வளவு கவனத்துடனும் பொருமையாகவும் எந்த விதக் கவலையும் இல்லாமல் உறுதியாக தேனீரினை பறிமாறினாயோ, அதேக் கவனத்துடனும், அமைதியாகவும் உன் எதிரியை உற்று நோக்கு" என்று அறிவுரைக் கூறிவிட்டு சென்று விட்டார்.

மறு நாள் குறித்த நேரத்தில் சண்டை நடக்கும் இடத்திற்கு சென்ற தேனீர் ஆசிரியர் ஸென் ஆசிரியர் கூறிய அறிவுரையை அப்படியேக் கடைபிடித்தார். சமுராய போர் வீரன் தன்னை சண்டைக்கு தயார் செய்து கொண்டு தேனீர் ஆசிரியரை உற்று நோக்கினான். மிகவும் விழிப்புடனும் ஆனால் சாந்தமான முகத்துடன் எந்த சலனமும் இல்லாமல் நின்றிருந்த தேனீர் ஆசிரியரினை முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தான். வேகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன் ஆசிரியரிடம் எந்த மாற்றமும் தென்படாததால், ஒரு கட்டத்தில் தன்னுடைய வாளை தளர்த்தி உறைக்குள் வைத்து விட்டு தேனீர் ஆசிரியரிடம் சென்று தன்னுடைய அகங்காரமான செயலுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டு, ஒரு முறை கூட ஆசிரியரை நோக்கி வாளை வீசாமலேயே சென்று விட்டான்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts