ஜென் கதைகள்: இயற்கையின் அழகு

ஒரு புகழ்வாய்ந்த ஸென் கோயிலில் புதிதாக ஒரு குருக்கள் நியமிக்கப் பட்டார். இந்த குருக்கள் மரங்கள், செடி கொடிகள், பூக்களை மிகவும் விரும்பி இரசிக்கக் கூடியவராக இருந்ததால் தான் அந்த உயரிய பதவி அவருக்கு கொடுக்கப் பட்டது. அந்த புகழ் வாய்ந்த கோயிலின் அருகிலேயே மற்றொரு சிறிய ஸென் கோயில் அமைந்திருந்தது. அந்த சிறிய ஸென் கோயிலில் மிகவும் வயதான ஸென் ஆசிரியர் ஒருவர் வசித்து வந்தார்.

ஒரு நாள் புகழ் வாய்ந்த அந்த கோயிலிற்கு சிறப்பு விருந்தினர்கள் வருவதாக இருந்தது. ஸென் குருக்கள் சாதரண நாட்களிலேயே கோயிலை மிகவும் தூய்மையாகவும் சிறப்பான பூக்கள் அலங்காரத்துடன் வைத்திருப்பார். வருவது மிகவும் முக்கியமான பிரமுகர்களானதால், விடியற் காலையிலேயே எழுந்து சுற்றி இருந்த செடிகளுக்கு செல்லும் பாத்தியை நேர்த்தியாக வெட்டி விட்டு, தேவையான பூக்களை பரித்து புத்த விக்கிரத்தினை அலங்கரித்து வைத்தார். ஒழுங்கு இல்லாமல் வளர்ந்திருந்த செடிகளை கத்தரிக் கோலால் வெட்டியும், பெரிய மரங்களின் கிளைகளை நேர்படுத்தியும், சுற்றி வளர்ந்திருந்த புதர்ச் செடிகளை நெறிப் படுத்தியும் அந்த இடத்தினை மிகவும் அழகான பூங்காவாக மாற்றி அமைத்தார். இலையூதிர்க் காலமாக இருந்ததால், மரங்களில் இருந்து விழுந்த கிளைகளின் சருகுகளை பொருக்கி ஒரு இடத்தில் அழகாக அடுக்கி வைத்தார். சுற்றி விழுந்திருந்த இலைகளின் சருகுகளை அழகாக கூட்டி எடுத்து ஒரிடத்தில் அழகுபட முறைப் படுத்தி வைத்தார்.

இப்படியாக எல்லா வேலைகளையும் முடித்த ஸென் குருக்கள் தான் அழுகுபடுத்திய பூங்காவினை தானே பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார். மேலும் ஏதேனும் செய்து இன்னும் ஒழுங்கு படுத்த முடியுமா, அல்லது தன்னுடைய அலங்கரிப்பில் ஏதேனும் குறையிருக்குமோ என்று எண்ணி ஒரு முறைக்கு பல முறை எல்லாவற்றையும் சரியாக அதனதன் இடத்தில் இருக்குமாறு அமைத்தார். குருக்கள் காலையில் எழுந்ததிலிருந்து செய்த வேலைகள் அனைத்தையும் பக்கத்திலிருந்த முதிய ஸென் குருக்கள் கவனித்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் பலமுறை சரிபார்த்து தனக்குள் திருப்தி அடைந்த ஸென் குருக்கள், அடுத்த பக்கத்து சுவரிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் முதியவரைப் பார்த்தார். "ஆகா, என்ன அழகாக தோட்டமாக இன்றைக்கு இருக்கிறது, நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?" என்று முதியவரான ஸென் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.

முதியவர், "ஆமாம், எல்லாம் அழகான நேர்த்தியுடன் உள்ளது, ஆனால் ஏதோ ஒன்று குறைவது போன்று தோன்றுகிறது, என்னை இந்த சுவரின் மேலே தூக்கி அடுத்தப் பக்கத்தில் விடு, அதனை நான் சரி செய்கிறேன்" என்றார். முதலில் தயங்கிய ஸென் குருக்கள் பின்பு ஸென் ஆசிரியரை கவனமாக அடுத்த பக்கத்து சுவற்றிலிருந்து இந்தப் பக்கம் இறங்கி வருவதற்கு உதவி செய்தார்.

மிகவும் மேதுவாக நடந்து சென்ற முதிய ஸென் ஆசிரியர் அந்த பூங்காவின் நடு மத்தியில் நின்றிருந்த ஒரு மரத்திற்கு சென்று அதனை வேகமாக பலங்கொண்ட மட்டும் ஆட்டி விட்டார். இலையூதிர்க் காலமானதால், இலைச் சருகுகள் அந்த மரத்திலிருந்து எங்கும் விழுந்து பரவி முன்போல விழுந்தது. பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் இப்பொழுது காய்ந்த இலைகளின் சருகுகள் காற்றில் பறந்து ஆக்கிரமித்தன. "ஆ!! அங்கே பார்" என்று திருப்தி பட்டுக் கொண்ட ஸென் ஆசிரியர், ஸென் குருக்களை நோக்கி "என்னை இப்பொழுது அடுத்த பக்கதிற்கு செல்வதற்கு சுவரில் ஏற்றி விடு" என்றார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts