போதிமரம் எங்கே?

ஹுய் நெங் சைனாவின் ஆறாவது சா'ன் புத்த மடாதிபதியாக ஐந்தாவது குலபதியான குங் ஜென்னிடமிருந்து மனத்தின் மூலமாக தீட்சை பெற்றார். அவர் மடாதிபதியாக பொருப்பேற்றது ஒரு சுவையான நிகழ்ச்சியாகும். அதனை இன்றைய தினம் ஒரு ஸென் கதையில் பார்க்கலாம்.

ஹுய் நெங் படிக்காத ஏழையான குடியானவன் குவாங்டங்கிலிருந்த ஸின் சோவில் வளர்ந்தவன். ஒரு நாள் அடுப்பு எரிக்கும் கட்டையை கொடுத்து விட்டு வரும் போது "வைர சூத்திரத்தில்" இருந்து "ஒன்றுமில்லாததிலிருந்து உன் மனதினைக் கண்டறிய வேண்டும்" என்ற வரியினை யாரோ ஓதிக் கொண்டிருக்க கேட்டான். கேட்டவுடன் தன்னொளியினை அடைந்தான். சூத்திரத்தை ஓதிக் கொண்டிருந்தவன் ஐந்தாவது வம்சாவழியான குங் ஜென்னினைச் டூங் சியான் மடத்தில் சென்று சந்திக்கச் சொன்னான்.

ஹுய் நெங் மடாதிபதி குங் ஜென்னைச் சந்தித்து, "நான் குவாங்டங்கிலிருந்த ஸின் சோவிலிருந்து பயணம் செய்து உங்களை பார்ப்பதற்காக வந்துள்ள சாதரண ஏழைக்குடியில் பிறந்தவன். உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவிப்பதற்காக இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருக்கிறேன். புத்தத்தன்மை அல்லாமல் வேறோன்றையும் அறிய உங்களிடம் வரவில்லை" என்றான். "குவாங்டங்கிலிருந்து வந்துள்ள நாட்டுப்புறத்தானான உன்னால் எப்படி புத்தாத்தன்மையை அடைய முடியும்" என்றார் மடாதிபதி. "வடக்கிலிருந்து வந்தவன், தெற்கிலிருந்து வந்தவன் என்பதில் வடக்கு, தெற்கு என்ற பேதம் இருக்கிறதே தவிர, வந்தவனுடைய புத்தத் தன்மையில் எந்தவிதமான பேதமும் இல்லை. தெய்வத்தன்மை வாய்ந்தவரே நாட்டுப்புறத்தானுக்கும் உங்களுக்கும் உடலளவில் வேற்றுமை இருக்கலாம், ஆனால் புத்தத்தன்மைக்கு பெறுவதில் எந்த வேற்றுமையும் இல்லை" என்றான்.

ஹுய் நெங்கினை தன்னுடைய சீடனாக உடனடியாக ஏற்றுக் கொண்ட மடாதிபதி, அவனை சமையல் அறையில் வேலையில் இருக்கச் செய்தார். சா'ன் புத்தமதம் அந்த சமயத்தில் திடிரென தன்னொளி பெறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. கற்றலும், மனோத்தத்துவயியலும் மட்டுமே தன்னொளி பெறுவதற்கு வழி என்று கருதினர். மேற்கிலிருந்து வந்திருந்த நன்கு கற்றறிந்த துறவிகள் அவனைச் சீடனாக ஏற்றுக் கொண்டதை அறிந்தால் தொல்லைகள் ஏற்படலாம் என்று கருதி அவனை மறைவாக சமையல் அறையில் உதவியாளனாக எட்டு மாதத்திற்கு இருக்கச் செய்தார்.

ஒரு நாள் ஐந்தாவது மடாதிபதி தன்னுடையச் சீடர்களை அழைத்து யார் ஒருவர் புத்தத்தன்மையின் உண்மையான நிலையைப் பற்றி உணர்ந்து பாடலாக எழுதுகிறார்களோ அவர்களுக்குத்தான் ஆறாவது மடாதிபதியாகும் தகுதி உள்ளது, என்னுடைய அங்கியையும், திருவோட்டையும், தர்மாவையும் அவர்களுக்கேத் தருவேன் என்று கூறினார்.

சீடர்களுக்கு எல்லாம் கற்றுத் தரும் தலைமைக் குருவாக இருந்த அனைத்தும் கற்று அறிந்த ஸென் ஷூ ஒரு பாடலைத் அங்கிருந்த சுவற்றில் எழுதினான்.

உடலே விவேகத்தின் மரம் - மனமே
ஒளிவிசும் கண்ணாடியைத் தாங்கும் சட்டம்
தூய்மையாக துடைத்து வை - அதனைத்
தூசியடையாமல் பார்த்துக் கொள்.

இந்தக் கவிதையானது சிறந்ததாக இருந்ததாக எல்லாராலும் சொல்லப் பட்டது. மடாதிபதி ஸென் ஷூவினைப் பார்த்து, "நீ தன்னொளியை அடையும் தூரத்தில் இருக்கிறாய், ஆனால் மனத்தின் இயற்கையானக் குணத்தினை இன்னும் உன்னால் பார்க்க முடியவில்லை" என்று கூறி வேறு ஒரு கவிதையை எழுதி வருமாறு கூறினார்.

எழுதவோ, படிக்கவோத் தெரியாத ஹுய் நெங் கவிதைப் போட்டியினைக் கேட்டு அங்கு வந்திருந்த லூ என்பவனிடம் சுவறில் எழுதியிருந்ததைப் படித்துக் காட்டச் சொன்னான். படித்ததைக் கேட்டவன், தனக்கும் கவிதை ஒன்றுத் தெரியும் அதனை மற்றொரு சுவரில் எழுதும்படியும் கேட்டுக் கொண்டான்.

உண்மையில் விவேகமரம் என்று ஒன்றில்லை
கண்ணாடியின் தாங்கியும் ஒளி வீசவில்லை
தன்மையில் அனைத்துமே சூன்யம் - இதில்
கண்டுபிடித்து துடைக்க புழுதி எங்கே?

நுண்மையான கருத்தினைக் கொண்ட கவிதையைப் பார்த்த் மற்றச் சீடர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மடாதிபதி எல்லாருடைய எதிரிலும் கவிதை நன்றாக இல்லை என்று கூறிய போதிலும் நள்ளிரவில் தன்னுடைய இடத்திற்கு வரவழைத்து அங்கியையும், திருவோட்டையும் கொடுத்து, மனத்தின் மூலமாக தர்மாவையும், "வைர சூத்திரத்தின்" உட்பொருளையும் உணர்த்தி இரவோடு இரவாக அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்லுமாறு பணித்தார். தகுந்த நேரம் வரும் வரையில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கவும், பின்பு புத்த தருமத்தை மற்றவர்களுக்கு உபதேசிக்கவும் வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts