மலை மீது நிற்கும் துறவி


ஒரு சாலையில் மூன்று நண்பர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தனர். மாலை வேளை. சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கிய சமயம். அருகிலிருந்த குன்றின் மேல் ஒரு துறவி நின்றுகொண்டிருப்பதை அப்போதுதான் அந்த நண்பர்கள் கவனித்தனர். அந்தத் துறவிக்குக் குன்றின் உச்சியில் என்ன வேலை என்று அவர்களுக்கு வியப்பு.

“அவர் தனது நண்பர்களுக்காகக் காத்திருக்க வேண்டும். மடாலயத்திலிருந்து நண்பர்களுடன் நடைப்பயிற்சி வந்தபோது, அவரது நண்பர்களை இவர் தவறவிட்டிருக்கலாம்” என்றார் ஒரு நண்பர்.

இன்னொரு நண்பரோ முதலாமவரின் கூற்றை மறுத்தார். “அப்படி இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஒருவர் இன்னொருவருக்காகக் காத்திருக்க வேண்டுமெனில், அவர் பின்னால் தான் போய்ப் பார்த்துக்கொண்டிருப்பார். அவரோ முன்னால் பார்த்து நிற்கிறார். அவர் தான் மேய்த்துவந்த பசுவைத் தொலைத்திருக்க வேண்டும். சூரியன் வேறு சீக்கிரத்தில் சாயப்போகிறது. இருண்டுவிடும். அதனால் அவர் அவசரத்தில் இருக்கிறார்.”

மூன்றாவது நண்பரோ மற்ற இருவரின் கருத்தை மறுத்தார். துறவி அமைதியாகக் குன்றின் மேல் நிற்பதாகவும், அசையாமல் கண்களை மூடிப் பிரார்த்தனையில் இருப்பதாகவும் கூறினார்.

அவர்களால் ஒருமித்த கருத்துக்கு வர இயலவில்லை. அவர்கள் அந்தத் துறவியிடமே காரணத்தைக் கேட்டுவிடலாமென்று முடிவுசெய்தனர்.

அவர்கள் குன்றின் மீதேறி, துறவியிடம் சென்று, “நண்பர்களுக்காகக் காத்திருக்கிறீர்களா?” என்று கேட்டனர். அவர் இல்லையென்று மறுத்தார். நான் காத்திருப்பதற்கென்று எனக்கு எதிரிகளோ நண்பர்களோ இல்லையென்றார். அவர் மீண்டும் கண்களை மூடி ஏகாந்தமாக இருந்தார்.

இன்னொரு நண்பர் தனது சந்தேகத்தைக் கேட்டார்.

“ உங்கள் பசுவைத் தவறவிட்டு விட்டீர்களா?”

“நான் எதையும் தேடவில்லை. என்னைத் தவிர எதன் மீதும் எனக்கு நாட்டம் இல்லை.”

தியானம் அல்லது பிரார்த்தனையைத்தான் துறவி செய்துகொண்டிருக்க வேண்டுமென்று மூன்றாவது நண்பர் முடிவுக்கே வந்துவிட்டார். அதை உறுதி செய்துகொள்ளத் துறவியிடம் வினவினார்.

துறவி்யோ தன் கண்களைத் திறந்து, “நான் எதையுமே செய்யவில்லை. நான் சும்மா இங்கே இருக்கிறேன். எதையும் செய்யாமல் சும்மா இங்கே இருக்கிறேன்” என்றார்.

இதுதான் தியானம் என்று பவுத்தர்கள் சொல்கிறார்கள். எதையாவது செய்துகொண்டிருந்தால், அது தியானம் அல்ல. அதிலிருந்து வெகுதொலைவுக்குச் சென்றுவிடுகிறீர்கள். நீங்கள் ஜெபிப்பதும் தியானம் அல்ல. அங்கே வாய் ஆடுகிறது. நீங்கள் ஒரு வார்த்தையை உச்சரித்தால், அது பிரார்த்தனையோ தியானமோ அல்ல. ஏனெனில் மனம் அங்கே நுழைந்துவிடுகிறது.

அதைத்தான் அந்தத் துறவி சொன்னார்.

‘நான் எதுவும் செய்யாமல், சும்மா இருக்கிறேன்.”

1 comment:

Powered by Blogger.

Popular Posts