நாக தேவதை

ஒரு காலத்தில் வெள்ளை பாம்பு, பச்சை பாம்பு இரண்டும் இர்மை (Er-mei) என்ற மலையில் வாழ்ந்து வந்தன. அங்கு வாழ்ந்த காலத்தில் இந்த இரண்டு பாம்புகளுக்கும் மந்திர ஆற்றல் கிடைத்தது. அதனால் அவை தங்களை இரண்டு அழகிய இளம் பெண்களாக மாற்றிக்கொண்டன. இள மங்கையர்கள் இருவரும் ஹேங்ஷோன் என்ற நகருக்கு வந்து வசிக்கலானார்கள்.

அந்த நகரின் அழகான ஓரிடம் மேற்கு ஏரி. அங்கு இருவரும் அடிக்கடி சென்று பொழுதைக் கழிப்பது வழக்கம். ஒரு நாள் அதே இடத்துக்கு வந்திருந்த ஹ்சுஷெங் என்னும் ஆணழகன் இவர்களைக் கண்டான். அவனைக் கண்டு வெள்ளை பாம்புப் பெண் உடனே காதல் வயப்பட்டாள்.

ஒருநாள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  தன் கணவனுக்கு வருவாய் இல்லை என்பதை உணர்ந்த வெள்ளை நாக மங்கை மூலிகை மருந்தகம் ஒன்றைத் தொடங்க அவனுக்கு உதவினாள். காடுகளிலும் மலைகளிலும் பாம்பாகச் சுற்றியிருந்ததால் எந்தெந்த செடிகள், தாவரங்கள் எந்தெந்த நோய்களைத் தீர்க்கும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. கூடுதலாகத் தன் மந்திர சக்தியையும் அவள் பயன்படுத்தினாள்.

இந்த மூலிகை மருந்தகத்தின் மருந்துக்கள் பெருமளவுக்கு மக்களால் விரும்பப்பட்டது. அவர்களுடைய நோய்கள் இந்த மருந்துகள்மூலம் குணமடைந்ததால் அவர்கள் மகிழ்ந்தனர். குணமே ஆகாது என்று கைவிடப்பட்ட நோய்களும்கூட இவளுடைய மந்திர சக்தியினால் குணமானது. எப்பொழுதும் இவர்களுடைய மருந்தகத்தில் கூட்டம் அலை மோதியது. ஏழை, எளியவர்களுக்காக இன்னொரு பக்கம் இலவச மருந்து உதவி மையமும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மொத்தத்தில், இவர்களுடைய மருந்தகத்தின் பெயர் நாடெங்கும் பரவிப் பிரபலமாயிற்று.

ஒரு நாள் முதிய துறவி ஒருவர் இந்த மருந்தகத்துக்கு வந்தார். மாயத் தோற்றங்களையும் மெய்தோற்றங்களையும் கண்டறியும் தவ ஆற்றல் கொண்டவர் அவர். பெயர், பஹாய். இவருடைய கண்களிலே நாக மங்கை பட்டுவிட்டாள். இவர் ஹ்சுசெங்கிடம் சென்று அவன் மனைவி மானிடப் பெண் அல்லள், மாய ஆற்றல் கொண்ட நாக மங்கை, எனவே அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.

இந்நிலையில், அந்த ஊரில் ஒரு விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறுகின்ற டிராகன் படகு விழா அது. இள வயதுடைய ஆண்களும் பெண்களும் போட்டிகள், கேளிக்கைகள் என்று மகிழ்ந்திருக்கூடிய சமயம் அது. விழா சமயத்தில் மக்கள் தங்கள் வீடுகளை நறுமண  நீர்ச்செடிகளைக் கொண்டு அலங்கரிப்பது வழக்கம். ஆங்கங்கே நீர் குடுவைகளைக் கட்டித் தொங்கவிடும் வழக்கமும் இருந்தது. இவ்வாறு செய்தால் கெட்ட ஆவிகள் நெருங்கி வராதாம்! இருக்கும் ஆவிகளும் அவர்கள் எழுப்பும் புகை மற்றும் விருந்துகளால் வெகுண்டோடுமாம்.

ஹ்சுஷெங்கின் வீடும் இதேப்போன்று அலங்காரம் செய்யப்பட்டது. வீட்டிலிருந்து இரண்டு நாக மங்கையர்க்கும் இது மிகவும் துன்பத்தையும் நெருக்கடியையும் கொடுக்கக்கூடியது. என்றாலும் ஏதும் தெரியாதவர்கள் போல் அவர்கள் இருவரும் விருந்தில் பங்கேற்றனர்.

வெள்ளை நாக மங்கை அப்போது கர்ப்பம் தரித்திருந்தாள். இந்த நேரத்தில் அவளுடைய மந்திர சக்தி எடுபடாது. ஒரு நாள், தன் கணவனையும் அவனுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் திருப்திபடுத்த, அவள் மது அருந்த நேரிட்டது. மது அருந்த அருந்த அவள் தன் கட்டுப்பாட்டை இழந்தாள். சுயநினைவு இல்லாததால் தன் சுய உருவை எடுத்தாள்! யாருக்கும் தெரியாமல் தன் படுக்கையறையில் போய் விழுந்தாள்.

பெரிய பாம்பு வடிவில் அவள் படுக்கையறையில் கிடந்தாள். கணவன் ஹ்சுஷெங் அறைக்கு வந்தான். அவளுடைய கோலத்தைக் கண்டான். அதுவரை அப்படியோர் வெள்ளை நிறப் பாம்பை அவன் பார்த்ததில்லை. அவனுக்கு அச்சமேற்பட்டது. அச்சத்தில் மயங்கினான். அச்சம் அவனை மரணம் வரை இழுத்துக்கொண்டு போனது.

வெள்ளை நிற நாக மங்கை தன் கணவனின் நிலைமையைத் தெரிந்துகொண்டாள். அவன் உயிரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டுமென்று உறுதி எடுத்தாள். அவளுக்குத் தெரியாத மருந்து வகைகளா? இதற்கு மருந்து எங்கே கிடைக்குமென்று அவள் அறிந்தாள். ஆம், பெரு வெள்ளத்துக்குப் பின்னர் மனித குலம் மீண்டும் தோற்றமெடுப்பதற்கு காரணமான நுவா தம்பதிகள் வாழ்ந்த குன்லான் மலையிலே அந்த மூலிகை கிடைக்குமென்று தெரிந்துகொண்டாள்.

ஆனால் குன்லான் மலையிலே அலைந்தும் அந்த மூலிகை கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தவித்துப்போனாள். அவள் காதல் உதவிக்கு வந்தது. தன் கணவன்மீது அவள் கொண்டிருந்த அன்பின் ஆற்றலால் அந்த மூலிகை இடம் பெயர்ந்து இவளிடம் வந்தது. அதைக் கொண்டு சிகிச்சை செய்து கணவனை அவள் மீட்டெடுத்தாள்.

ஏற்கெனவே அவனை எச்சரித்திருந்த அந்தத் துறவி மீண்டும் குறுக்கிட்டார். அந்தப் பாம்புகளை நான் பார்த்துக்கொள்கிறேன், நீ துறவறம் பூண்டுவிடு என்று அவர் உத்தரவிட்டார்.

தன்னை பஹாய் ஒழித்துக் கட்டிவிடுவான் என்று தெரிந்து வெள்ளை நாக மங்கை பஹாயைத் தாக்க முடிவெடுத்தாள். நீருக்கடியே வாழும் உயிரினங்களைக் கொண்டு ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட வைத்து பொன் மலைக் கோயிலை மூழ்கடிக்கவும், பாஹாயுடன் போர் தொடுத்து அவனை ஒழிக்கவும் திட்டமிட்டாள். பாஹாய் தன்னுடைய மாய ஆற்றலைக் கொண்டு வானுலக வீரர்களை வரவழைத்து தன் கோயிலை தற்காத்துக் கொண்டான்.

வெள்ளை நாகப் பெண்ணுக்குப் பேறு காலம் நெருங்கியது. எனவே போரிடுவதிலிருந்து விலகிக்கொண்டாள். குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இதற்குத் தீர்வு காணலாம் என்று அமைதி கொண்டாள்.

அழகிய ஆண் குழந்தைப் பிறந்தது. ஹ்சுஷெங் தன் மகனைப் பார்க்கச் சென்றான். அப்பொழுது தன்னிடம் பாஹாய் தந்த ஒரு மந்திரத் தொப்பியைக் கொண்டு தன் மனைவி வெள்ளை நாகப் பெண்ணை அவன் சிறைப்பிடித்தான். பாஹாய் அந்த வெள்ளை நாகப் பெண்ணைத் தன்னுடைய கோயிலிலேச் சிறை செய்தான்.

பச்சை நாகப் பெண்ணால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன்னுடைய மந்திர ஆற்றலைக் கொண்டு பஹாயிடமிருந்து தப்பிப்பதே போதும் போதும் என்றாயிற்று அவளுக்கு!

வெள்ளை நாகப் பெண்ணின் மகன் வளர்ந்தான். இப்பொழுதுதான் பச்சை நாகப் பெண் அவனுடன் சேர்ந்து தன் வெஞ்சினத்தைத் தீர்த்துக் கொண்டாள். பொன்மலைக் கோயிலைத் தரை மட்டமாக்கினாள். வெள்ளை நாகப் பெண்ணை விடுவித்தாள்.

வெள்ளை நாகப் பெண் தன் கணவனுடனும் மகனுடனும் ஒன்று சேர்ந்தாள். வெள்ளை நாகப் பெண்ணின் காதலையும்அன்பையும் அறிந்த ஹ்சுஷெங் மனம் மாறினான்.  மனைவியோடும் மகனோடும் மகிழ்ச்சியோடு சேர்ந்து வாழ்ந்தான்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts