குழலூதும் ஆட்டிடையன்

ஒரு காலத்தில் சீனாவில் முஸ்லிம்கள் வாழும் பகுதியான உய்கர் என்ற மாகாணத்தில் ஒரு நிலச்சுவான்தார் ஆடுகள் மேய்க்கவும் பண்ணையில் எடுபிடி வேலைகளை பார்ப்பதற்காகவும் ஒரு ஆட்டிடையனை வேலைக்குச் சேர்த்துக்கொண்டான். அந்த ஆட்டிடையனின் பெயர் அனீஸ். பார்ப்பதற்கு மிகவும் துடிப்பாகவும் துருதுருப்பாகவும் இருப்பான். அவன் கையில் ஒரு மூங்கில் குழல்! வேலைகளை முடித்துவிட்டு அவன் குழலிசைப்பான். அவன் இசையிலே எல்லோரும் மயங்கிவிடுவார்கள். பண்ணையில் வேலை செய்பவர்கள், பண்ணைக்கு வந்துப் போகிறவர்கள், பறந்து வரும் பறவைகள், பால் சுரக்கும் கறவைகள் என்று எல்லா ஜீவன்களையும் அவன் இசை சுண்டி இழுக்கும். ஒரு சுகலயத்தில் அவர்களை எல்லாம் கட்டிப்போடும்!

ஒரு சாண் அளவுள்ள மூங்கிலில் எப்படித்தான் இன்ப ஒலி எழுப்புகின்றானோ, என்ன இது வித்தை என்று எல்லோரும் வியந்தார்கள். அவனைப் பாராட்டினார்கள்; அன்பு மழைப் பொழிந்தார்கள். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் அவனைக் கண்டு எரிச்சலுற்றார். அவனது வேணுகானத்தை வேண்டாம் என்றே வேம்பாக வெறுத்தார். அவனை அதற்காக கடித்துக்கொண்டார்.

ஆட்டிடையன் அனீசுக்கு எப்பொழுதெல்லாம் வேலை இல்லாமல் இருக்குமோ அப்பொழுதெல்லாம் தன் வேய்க்குழலை எடுத்து ஊதுவான்; அதைக் கேட்பதற்காக ஒரு கூட்டம் காத்திருக்கும்; அவன் குழல் ஊதப் போகின்றான் என்று தெரிந்தால், அவர்கள் அவனைச் சுற்றி வட்டமாக அமர்ந்துக்கொள்வார்கள்; அனிஸ் தானாகக் கற்ற கலையை, தன்னுயிர் இயற்றிய இசையை, தேனாக காதுகளிலே பாய்ச்சுவான். கேட்டவர்கள் எல்லாம் கிறங்கிக்கிடப்பார்கள்!

நாளுக்குநாள் இதனால் எரிச்சலடைந்த நிலச்சுவான்வான் அனீஸ் மீது ஆத்திரம் கொண்டான். அவனை எத்தனையோ தடவை எச்சரித்தும்கூட, அவன் மாறவில்லை; குழலூதுவதை அவன் விட்டுவிடவில்லை. அதே சமயம், தன் வேலைகளில் எதையும் அனீஸ் குறை வைக்கவுமில்லை. தனக்கிட்ட பணிகளைக் கொஞ்சம் அதிகமாகவே செய்துவிடுவான். அதன் பிறகுதான் அவன் குழலெடுப்பான்; இசைத் தொடுப்பான்! எனவே நிலச்சுவான்தாரால்  அவனுடைய வேலையில் குறை எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை, என்றாலும் அவனை, அவன் குழலை ஒழித்தே ஆக வேண்டுமென்ற ஒரு வெறியோடு, வெஞ்சினத்தொடு வெகுண்டெழுந்தான்.

அனீஸை நோக்கி, “அட கேடு கெட்டவனே… உன்னிடம் எத்தனை முறை உன் ஊதுகுழலை ஊதாதே என்று எச்சரித்திருப்பேன்.. நீ பண்ணை வேலைக்கு வந்தாயா… பண்ணிசைக்க வந்தாயா? உன்னுடைய திமிறை அடக்கவேண்டும். என் பேச்சைமீறி நீ நடந்துக் கொண்டாய்… உன்னைச் சும்மாவிடப் போவதில்லை” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த கோலை எடுத்து பலமாகச் சாடினான்;  தன் கோபம் தீருமட்டும், கை சலிக்கும்வரை அந்தக் கோலால் அனீஸின் உடலெங்கும் தாக்கினான். அனீஸ் வலிப் பொறுக்க மாட்டாமல் துடியாய் துடித்தான். கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அனீஸ் வைத்திருந்த அவனது வேய்க்குழலை பறித்து ஒடித்து வீசினான். அனீசை தனது பண்ணையிலிருந்து துரத்தி அடித்தான்.

அனீஸ் தன் அழுகையை அடக்கமுடியாமல் தெருவிலே கால் போன திசையிலே நடந்துப்போனான். வெள்ளை உள்ளத்தில் வீரிட்ட வேதனையும், உடலின் வலியும் அவனை தள்ளாடச் செய்தது; அப்பொழுது அங்கு வந்த ஒரு வயோதிகர், அன்பான குரலோடு அவனை அழைத்தார்.

“இளைஞனே… உனக்கு என்ன நிகழ்ந்தது? இங்கே ஏன் வந்தாய்? எதற்காக அழுகிறாய்… உன் தாய் தந்தையர்கள் யார்?” என்று கேட்டாய்.

“தாத்தா! நானொரு ஏழை ஆட்டிடையன். என் பெயர் அனீஸ்! பண்ணை முதலாளி என்னை அடித்து விரட்டி விட்டுவிட்டார். அவன் இட்ட ஏவல்களை, பணிகளை சரியாகச் செய்தேன். குற்றம் குறை செய்தேனில்லை. ஆனால் நான் செய்தது எல்லாம் ஓய்வு நேரத்தில் வேய்ங்குழல் இசைப்பது. அதற்காக அவர் கோபப்பட்டார்; என்னைத் தாக்கி துரத்தியடித்துவிட்டார். அந்த துயரிலே நான் அழுதேன். என்னுடைய வேய்ங்குழலை துண்டு துண்டாக ஒடித்து எறிந்துவிட்டார்” என்றான்.

“கலங்காதே அனீஸ்….” என்று அவன் முதுகில் வாஞ்சையோடு தடவிக் கொடுத்து விட்டு, “நீ என்னோடு வந்துவிடு; என்னுடனே தங்கிக் கொள்ளலாம்; உன்னுடைய குழலூதும் ஆசைக்கு இனித் தடையில்லை; அதைக் கொண்டே நீ உன் பண்ணை முதலாளியை பழித்தீர்த்துக் கொள்ளலாம்” என்றார். அனீஸ் ஒப்புக் கொண்டான்.

இப்பொழுது முதியவரின் வீட்டிலே அனிஸ் தங்கலானான். அங்கு அந்த முதியவர் அனீஸுக்கு நீண்ட மூங்கில்களால் ஆன குழல்களில் குழலூதக் கற்றுக் கொடுத்தார். இதுவரை அனீஸ் தனக்கு தோன்றியவாறு இசையைக் குழலில் எழுப்பினான். இப்பொழுதோ இசைப் பயிற்சியை முறையாகக் கற்றுக்கொண்டான். வேணுகான வித்தையிலே வேந்தனானான். அவன் குழலை எடுத்து ஊதினால், மனிதர்கள் முதல் எல்லா உயிரினங்களும் அவனிடம் வந்து இசை லயிப்பில், லாகிரியில் ஆழ்ந்துவிடுகின்றன. பறவைகளும் விலங்கினங்களும் அவனுடைய இசையைக் கேட்க ஓடிவரும். இப்படி வருகின்ற பறவைகளும் சரி, விலங்கினங்களும் சரி, அவனிடம் நெருங்கிப் பழகலாயின. அனீஸின் சொல்லுக்குக் கீழ்படிந்து நின்றன.

காலம் ஓடியது… ஒரு நாள் அந்த நிலச்சுவான்தார் கனவு ஒன்றைக் கண்டான். அக்கனவிலே வெண்பனியால் செய்தது போன்ற வெள்ளை வெளேர் முயலொன்று தோன்றியது. அதன் தலை அழகான கரும்புள்ளிகளோடு காட்சி அளித்தது! அதன் அழகிலே நிலச்சுவான்தார்  உள்ளத்தைப் பறிக் கொடுத்தாரன். எப்படியாவது கனவிலே கண்ட முயலை கண்டுப்பிடித்து தமக்கு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென்ற அவா அவன் உள்ளத்தில் எழுந்தது.

கண்விழித்தவுடன் தன் மைந்தர்களை அழைத்தான். தான் கண்ட கனவை எடுத்துக் கூறி, அப்படிப்பட்ட முயலை அவர்களில் யாராவது ஒருவர் பிடித்துவந்தால் தனது சொத்து முழுவதற்கும் சொந்தக்காரனாகலாம் என்றான்.

“தந்தையே… கனவில் கண்டதை எப்படி நேரிலே போய் பிடிக்க முடியும்? அதை எங்கு போய் தேடுவது? அது எந்த காட்டிலே இருக்கும்?” என்றான்.

“எனக்கு அந்த முயல் வேண்டும். அதை எப்பாடுப்பட்டாவது பிடித்து வாருங்கள். அதை விட்டுவிட்டு வீண்பேச்சு வேண்டாம்.”

மூத்த மகன், முழுச் சொத்தும் தன் தந்தைக்குப் பின்னர் முறையாக தனக்குத் தான் வருமென்று அறிவான். ஆயினும் தன்னுடைய தம்பிமார்களில் யாரேனும் ஒருவன் அந்த முயலைப் பிடித்து வந்துவிட்டால் என்ன செயவ்து என்று னித்து அந்த முயலைத் தானே பிடிக்க பக்கத்து காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான்.

போகும் வழியிலே அவன் அந்த முதியவரை பார்த்தான். தான் புறப்பட்ட காரியத்தைச் சொன்னான்.

அதற்கு அந்த முதியவர், “ அப்படியா.. சரி நீங்கள் காட்டில் உள்ளே போங்கள், அங்கே என்னுடைய செம்மறிகளை மேய்த்துக் கொண்டு ‘அனீஸ்’ என்ற என் ஆள் ஒருவன் இருப்பான். அவனிடம் சொன்னால் பிடித்துத் தருவான்” என்றார்.

புறப்பட்ட காரியம் இத்தனை எளிதாக நடக்கக் கூடுமென்று மூத்தமைந்தன் நினைக்கவே இல்லை. மகிழ்ச்சியோடு, புதிய வேகத்தோடு அவன் காட்டுக்குள் சென்றான்.விரைவில், அனீஸை கண்டுப் பிடித்து விட்டான். தன் தந்தையின் ஆசையையும் அவர் வர்ணித்து விளக்கிய முயலையும் பற்றிக் கூறி, வழியில் ஒரு முதியவர் தன்னை அவனிடம் அனுப்பிய விவரத்தையும் கூறி நின்றான்.

அனீஸ் அந்த நிலவுடமையாளரின் மூத்தப் பிள்ளைக்கு உதவுவதாக வாக்களித்தான். குறிப்பிட்ட அடையாளங்களைக் கொண்ட வெள்ளை முயலை பிடித்துத் தருவதாகவும், அப்படி அவனிடம் ஒப்படைத்தால் தனக்கு ஓராயிரம் ஸ்டிரிங்ஸ் தொகை தரவேண்டும் என்றும் அனீஸ் நிபந்தனை விதித்தான்.

அனீஸ் கேட்ட தொகை அதிகம்தான். ஆயினும் தன்னுடைய தந்தையிடமிருந்து தனக்கு வரப்போகின்ற சொத்தையும் செல்வத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால், இத்தொகை மிகவும் சொற்பம் என்பதால் ஒப்புக்கொண்டான்.

அனீஸ், அவனை அன்று மாலை நேரத்தில் வரச் சொன்னான்.

மாலை வந்தது, காடுகள் மாலை நேரத்தில் தான் மிக அழகாகத் தோற்றமளிக்கும். இரவானால் அச்சத்தை வரவழைக்கும். பொன் அந்தி மாலைப் பொழுதில் அனீஸ் இசைப்பது வழக்கம். அவன் வாசிப்பை நிறுத்தினால்தான் விலங்குகளும் பறவைகளும் தத்தம் நிலைகளுக்குத் திரும்பும்! இதை உணர்ந்திருந்த அனீஸ் வழக்கம்போல் தன் புல்லாங்குழலை எடுத்து வாசிக்கலானான். பறவைகளும் விலங்குகளும் கூடிக் குவிந்தன. வாசித்துக் கொண்டே அவன் எங்கோ கூர்ந்துப் பார்த்தான். பார்த்த இடத்திலே பனியை உருட்டிச் செய்தாற்போல ஒரு வெள்ளை முயல் குறுகுறு என்று நின்றது. அதன் தலையில் அழகுக்கு அழகுக்கூட்டும் கருமையான புள்ளிகள் இருந்தன.

அனீஸ் உடனே தன் வேய்ங்குழலை கீழே வைத்தான். சட்டென்று அந்த முயலை நோக்கிச் சென்றான். அதன் நீண்ட காதுகளைப் பிடித்துத் தூக்கி, அதை அப்படியே அந்த மூத்தச் சகோதரனிடம் அளித்தான். “இதோ, நீங்கள் தேடிய முயல், மிகவும் எச்சரிக்கையாகப் பிடித்துக் கொள்ளுங்கள். பத்திரமாக எடுத்துச செல்லுங்கள் இது உங்களை விட்டு தப்பி ஓடிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது” என்றான். அந்த மூத்த சகோதரன் மிகவும் பணிவாக நன்றிகளைக்கூறி ஆயிரம் ஸ்டிரிங் பணத்தையும் அளித்துவிட்டு அந்த முயலை இறுகப் பற்றியபடி அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

கொஞ்சம் நேரம் ஓடியதும், அனீஸ் மீண்டும் தன் குழலை எடுத்தான். காற்றை குழலில் ஊதி ஊதி,  ஓசைக்கு உருவம் கொடுத்தான். அது மறுபடியும் எல்லா உயிரினங்களையும் ஓடிவரச் செய்தது. அந்த ஒலி, காற்றிலே கலந்து மூத்தச் சகோதரன் எடுத்துச் சென்ற முயலின் நீண்ட காதுகளிலே போய்விழுந்தது. அவ்வளவுதான். அது ஒரு துள்ளல் துள்ளியது. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடுகின்ற கன்றுக்குட்டிப் போல ஒரே பாய்ச்சலில் மறைந்துவிட்டது.

மூத்த சகோதரன் செய்வதறியாது தவித்தான். கணநேரத்தில் தன்னுடைய வாழ்வின் நற்பேறுகள் எல்லாம் முயலுடன் ஓடிவிட்டது போல உணர்ந்தான்; இனி என்ன செய்வது? அனீஸிடமே மீண்டும் திரும்பினான்.

அனீஸைப் பார்த்து, “அந்த வெண்முயல் என்னைவிட்டு ஓடிவிட்டது. அதை எப்படி மீண்டும் பிடிப்பது?” என்றான்.

“நான் அப்பொழுதே எச்சரித்துவிட்டேன். நீங்கள் தான் மிக கவனமாக பிடித்துக் கொண்டு போயிருக்க வேண்டும் இதற்கு நான் பொறுப்பாக முடியாது, அது என் வேலை அல்ல!” என்றான்.

மூத்த சகோதரன் பாவம், கனத்த உள்ளத்தோடு வெறும் கையோடும் வீடு திரும்பினான்.

இப்பொழுது அந்த நிலச்சுவான்தாரின் இரண்டாவது மகனின் முறை. அவன் தன் தந்தையிடம் சென்று, “தந்தையே… கவலையை விடுங்கள்…. நான் போய் கையோடு அந்த முயலை பிடித்து வருகின்றேன்” என்று கூறிச் சென்றான். அவனும் தன் அண்ணனைப் போன்றே அதே முதியவரைச் சந்தித்து,  பிறகு அவர் சொன்னபடி அனீஸைப் பார்த்து அதே ஆயிரம் ஸ்டிரிங்ஸ் தருவதாகப் பேசினான். அனீஸ் குழல் ஊத, முயல் வந்துசேர, அதை அவன் பிடித்துக்கொடுத்தான். மீண்டும் அதேபோல் அனீஸ் இன்னொருமுறை குழல் ஊத, முயல் திரும்பவும் ஓடிவந்துவிட்டது.

பிறகு, வீட்டிலிருந்த கடைசி சகோதரன் புறப்பட்டான். அவனுக்கும் அதே போலத்தான் எல்லாம் நடந்தது. அவனும் துயரத்தோடு வீடு திரும்பினான்.

நிலச்சுவாந்தார் ஆவேசம் கொண்டான். “அட முட்டாள்களே! உங்களால் எதுவும் முடியாது. ஒரு சிறு பூச்சியைக்கூட உங்களால் பிடித்து வர முடியாது. மூன்று நாட்களில் மூவாயிரம் ஸ்டிரிங்ஸ் இழந்ததுதான் மிச்சம்” என்று சாடினான். பின் தானே அந்த முயலை பிடித்து வருவதற்காக காட்டுக்குப் புறப்பட்டான்.

காட்டில் நுழைந்த தன் பழைய எஜமானை அனீஸ் இனங்கண்டுவிட்டான். அவன் நெஞ்சிலே அவனையும் அறியாமல் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. தன்னிடம் முன்பு நடந்துக் கொண்டதற்குதக்க தண்டனையைத் தர வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அனீஸை அடையாளம் காணமுடியாத நிலச்சுவாந்தார், முயலைக் கண்டுபிடிக்கும் கோரிக்கையை அவனிடமே வைத்தார்.

அனீஸ் குழலெடுத்து இசைக்கத் தொடங்கினான். அவ்வளவுதான், காட்டிலுள்ள கொடிய மிருகங்களான ஓநாய்கள், நரிகள், கரடிகள், நச்சுமிக்க பாம்புகளள், குத்திக் கிழிக்கத் துடிக்கும் பயங்கரமான பறவைகள் என்று அனைத்தும் சூழ்ந்துகொண்டன. எந்த நேரமும் அவை நிலச்சுவாந்தார் மேல் பாய்ந்து தாக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. உடலெங்கும் வியர்வை ஓட, உடல் கிடுகிடுக்க வாய் உதற அனீஸின் கால்களிலே அவன் விழுந்தான்.

காலில் விழுந்தவனைத் தூக்கிவிட்டு, “ஐயா பெரியவரே! என்னை  யார் என்று தெரிகிறதா? பாருங்கள்” என்றான் அனீஸ். “நான்தான் ஆட்டிடையன் அனீஸ், என்னை அன்றொருநாள் அடித்துவிரட்டிவிட்டீரே, அதே அனீஸ். குழலூதக் கூடாதென்று தடுத்து என் புல்லாங்குழலை ஒடித்து எறிந்தீரே. அதே ஏழைச் சிறுவன்…”

ஒருவழியாக எச்சிலை விழுங்கி, ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிலச்சுவாந்தார் பேசத் தொடங்கினான். “ஐயா… உங்களிடம் நான் நடந்துக்கொண்டது போல என்னை நடத்திவிடாதீர்கள். ஐயோ நான் பெரிய பாவி, எத்தனை பெரிய கொடுமையை உங்களுக்குச் செய்தேன். அதற்குப் பழிவாங்க என்னை பலியாக்காதீர்கள். இனிமேல் நான் திருந்திவிடுகிறேன். நீங்கள் சொல்கிறபடி நடப்பேன்.”

“எத்தனையோ ஏழைகள் இங்கே ஒரு வேளை சோற்றுக்குத் தவியாய் தவிக்கின்றார்கள். நீ அவர்களை வேலை வாங்கிவிட்டு கூலி கொடுக்காமல் அடித்து விரட்டி இருக்கிறாய். பாவம் அவர்கள் பசியோடு இருந்தார்கள். ஆனாலும் உன்னை ஒன்றும் செய்யவில்லை. இதோ இங்குள்ள மிருகங்களும் பறவைகளும்கூட பசியோடுதான் உள்ளன. ஆனால் இவை உன்னைக் கொல்லாமல்விடாது.” என்றான்.

“நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். என் உயிருக்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் தருகிறேன்! தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்” மறுபடியும் காலில் விழுந்து கதறினான் நிலச்சுவாந்தார்.

“இனிமேலாவது திருந்து. ஏழைகளின் மேல் இரக்கம் காட்டு. நான் இந்தக் கொடிய மிருகங்களையும் பறவைகளையும் உன்னைவிட்டுப் போக வைக்கிறேன். அதற்கு ஈடாக நீ உமது சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குத் தானமாக வழங்க வேண்டும்.” என்றான் அனீஸ்.

நிலச்சுவாந்தார் ஒப்புக்கொண்டான். அவனைவிட்டு கொடிய மிருகங்களும் பறவைகளும் விலகிச்சென்றன. வீட்டுக்குச் சென்றவுடன் முதல் வேலையாக அவன் ஏழைகளுக்கு சொத்து மதிப்பில் பாதியை அள்ளி அள்ளி வழங்கி அவர்கள் வாட்டம் போக்கினான். அனீஸ் தான் கற்ற வித்தையால் ஒரு கொடுமைக்காரனை திருத்தினான். பழிவாங்க வேண்டுமானால் இப்படித்தான் பழிவாங்க வேண்டும்!

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts