தேனீர் ஆசிரியரின் சமயோஜிதம்

சா-நோ-யூ என்பது ஜப்பானின் தேனீர் விருந்திற்கு பெயர். முதன் முதலில் தேயிலையினை உபயோகித்தது சீனர்கள் என்றே கூறுவார்கள். ஸென் நங் என்ற சீன அரசர் கொதிக்கும் தண்ணீரினை ஆற வைத்து குடிப்பதற்காக ஒரு மரத்தடியில் உட்கார்ந்த போது தண்ணீரில் ஒரு இலை விழுந்தது என்றும், அதனை எடுத்து போட்டு விட்டு மிதமான சூட்டில் அந்த தண்ணீரைக் குடித்த போது சுவையாகவும், உடலிற்கு புதிய ஆற்றல் தரும் வகையில் இருந்தது என்றும் அதிலிருந்து தான் தேனீர் குடிக்கும் பழக்கம் ஆரம்பித்தது என்று ஒரு கதையினைக் கூறுவார்கள்.

காஞ்சிபுரத்திலிருந்து சென்ற புத்த பிக்ஷு போதிதர்மர் சீனாவிற்கு சென்ற போது தியானத்தில் தூங்கி விடாமல் இருப்பதற்காக சிறிய தேயிலைக் கன்றை எடுத்துச் சென்றதாக இன்னொரு கதையும் உண்டு.

சீனாவில் வந்து சா'ன் கத்துக் கொண்டு சென்ற ஈசாய் (1141௧215), ஜப்பானில் முதன் முதலில் தேயிலையை அறிமுகப் படுத்தினார். ரின்சாய் ஸென் புத்த மதத்தினை தோற்று வித்தவரும் அவரே. கியோடோவிற்கு அருகில் இருந்த கோசான்ஜி கோயிலில் முதன் முதலில் தேயிலை விதைகளை பயிரிட்டு தியானம் புரியும் துறவிகள் தூங்காமல், நீண்ட நேரம் தியானம் புரிவதற்காக உபயோகப் படுத்தப் பட்டது.

ஸென் ஆசிரியர் ரியூகோ (1522௧591) முதன் முதலில் புதிய வகையில் அதனை சா-நோ-யூ என்ற பெயரில் சமுராய் மற்றும் உயர் வகுப்பினருக்கும் அதனை அறிமுகப் படுத்தினார். தேனீர் விருந்திற்கு அழைக்கப் படுவது மிகவும் பெருமையாக கருதப் பட்டது. முறையாக அதனை கற்பதற்காக பலர் ரியூகோவிடம் மாணவராக சேர்ந்தனர். டாய்கோ என்ற சமுராய் வீரனும் ரியூகோவிடம் மாணவனாக சேர்ந்தான்.

ஆசிரியரின் பொருமை, அமைதி, மனிதத் தன்மையுடன் அடுத்தவர்களுக்கு உதவும் தன்மை, வீண் சண்டைக்கு போகாத குணம் மற்ற அனைவரையும் அப்படியே மாறச் செய்தது. ஆனால் வீரனான டாய்கோ அதனை விரும்பாமல் ஆசிரியரால் அனைவரும் வீர தீரக் கலைகளை கற்காமல் தேனீர் விருந்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதணால் நாட்டிற்கே ஆபத்து என்று நினைத்து, மறு நாள் நடக்கும் தேனீர் விருந்தில் கலந்து கொண்டு அவரைக் கொன்று விடுவது என முடிவெடுத்தான்.

தேனீர் விருந்திற்கான மாளிகை, ஜப்பானியர்களே குனிந்து செல்லும் வகையில் கட்டப் பட்ட சிறிய குடிசையாகும். டாய்கோ நுழைந்த போது ரியூகோதான் தேனீரினை முறைபடி தயாரித்துக் கொண்டிருந்தார். சிறந்த ஆசிரியரான அவர், அவனது நோக்கத்தை கண்களைப் பார்த்தே அறிந்து, "இது அமைதிக்கான இடம், இங்கு வாளிற்கு வேலை இல்லை, வாளினை வெளியே வைத்து விட்டு வா" என்றார்.

ஆனால் டாய்கோ "நான் ஒரு சமுராய் வீரன். சா-நோ-யூவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாள் இல்லாமல் உள்ளே நுழைய மாட்டேன்" என்றான்.

ரியூகோ, "ஒ, அப்படியா, நல்லது. வாளுடனே வந்து தேனீர் அருந்து" என்று உள்ளேக் கூப்பிட்டார்.
அங்கிருந்து சென்ற ரியூகோ அடுப்பில் எரிந்து கொண்டு இருந்த கரியினை லேசாக தண்ணீர் விட்டு வேகமாக கிண்டி விட்டார். அவ்வளவு தான் சாம்பலும் புகையுடன் அந்தக் குடிசை முழுவதும் வேகமாக பரவியது. தும்பலும், புகையின் நெடியும் ஒருவராலும் குடிசையின் உள்ளே இருக்க முடியவில்லை. கண்களை உறுத்தாமல் இருப்பதற்காக அனைவரும் குடிசையை விட்டு வெளியே ஓடினர். சமுராய் டாய்கோவும் தான்.

கொஞ்ச நேரம் கழித்து "இது என்னுடைய தவறு" என்று கூறி மன்னிப்புக் கேட்ட ரியூகோ, டாய்கோவைப் பார்த்து "வா, வந்து தேனீரினை அருந்திவிட்டு செல், ஆனால் உன்னுடைய வாள் சாம்பல்களுக்கு நடுவில் கிடக்கிறது. அதனைக் கழுவித் தருகிறேன்" என்றார்.

தான் எதிர் பார்த்த மாதிரி சந்தர்பம் அமையாததால் டாய்கோ ஆசிரியரைக் கொல்லும் எண்ணத்தை அன்றோடு கை விட்டு விட்டான்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts