ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு...!



பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் உள்ள மிக பிரமாண்டமாண ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 


ஆனை  மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் ஆனந்தமான துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார்.



"மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார்.  உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில் விட்டு விடு. இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்'''.


மன்னர் சரி என்றவாறு துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைக்கத்துவங்கினார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி  சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார்.


மரம் பெரியதாகி பழம் விடும் நேரம் வந்ததும் அரண்மணைக் காவலாளிகள் வைத்து மாங்கனியை யாரும் பறிக்ககூடாது. அப்படி சாப்பிட்டால் மரண தண்டனை  என அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட துறவி மன்னரிடம் வந்து ''மன்னா நீங்கள் அந்த மாங்கனி கொட்டையை நான் சொன்னதை கேளாமல் மரமாக்கி விட்டீர்கள். நீங்கள் நினைப்பது போல் அந்த மரத்தில் ஓரே பழம் மட்டுமே பழுக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது. அதை தெய்வீகப் பெண்மணி ஒருவரே சாப்பிடுவார். நீங்கள் சாப்பிட நினைத்தால் இந்த தேசம் அழிவுறும். என உரைத்து கிளம்பினார் துறவி. ஆனால் மன்னன் துறவி கூறியதை அலட்சியம் செய்தான்.


தாரகன் என்பவர் வியாபார விஷயமாக தன்மகள் தாரணி உடன் ஆனைமலைக்கு வந்திருந்தார். அப்போது அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தோழிகளுடன் தாரணி நந்தவனத்தில் உள்ள ஆற்றில் குளிக்கச்சென்றார். தாரணி நீராடும்போது அந்த மாமரத்தில் இருந்து தன் அருகே விழுந்த மாங்கனியை எடுத்து  சாப்பிட்டார். இதனை அறிந்த மற்ற பெண்கள், மன்னனின் தண்டனை விவரத்தை எடுத்து கூறினர்.


அதற்குள் விஷயம் அறிந்த மன்னன் காவலாளிகளை விட்டு தாரணியை கைது செய்து, குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனையை அறிவித்தான். ஒரு  மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என் ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் என்று சூளூரைத்து உயிர் பிரிந்தாள். அவள் உடல் மயானம் எடுத்துச் செல்லப்பட்டது. அவள் உருவத்தைப்போலவே மண்ணால் செய்து வைத்து, மாங்கனிக்காக இறந்த கன்னியை மாங்கன்னியாக மாசாணி அம்மனாக  தொழுதுசென்றார்கள் மக்கள்.


மாசாணி அம்மனாக சிறிதளவில் அவர் சமாதியில் துவங்கிய வழிபாடு அந்த ஆத்மா நம்பி வரும் பக்தர்களை காத்து அருள்பாலிக்கிறது. பல்வேறு  அவதாரங்களில் ஈஸ்வரி அவதாரம் எடுத்து பல அம்மனாக அற்புதங்களை தந்திருக்கிறார் மாசாணி அம்மன். இவர் உக்கிர தெய்வம் ஆவார்.


இங்கு வரும் பக்தர்கள், மாசாணி அம்மனிடம் குறைகளை எழுதி  பூசாரியிடம் பக்தர்கள் தர அதை அம்மன் நிவர்த்தி செய்கிறார். பில்லி சூனியம் போன்ற அமானூஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க உக்கிரதெய்வமான மாசாணி அம்மன வணங்கினால் நலம் பயக்கும் என்பது நம்பிக்கையாகும்.
Share:

வடஸ்ரீரங்கம் என்று சொல்லப்படும் பொன்னேரி அருகே உள்ள தேவதானம் ரங்கநாதர் ஆலயம்


தேவர்களால் தானம் செய்யப்பட்ட இடத்தில், நெல் மணிகளை மரக்காலால் அளந்த களைப்பால் சயன திருக்கோலத்தில் காட்சி தரும் பெருமாளை தரிசித்தால் நினைத்த காரியம் நிறைவேறுவதுடன் செல்வம் குவியும். ‘அந்த இறைவன் எங்கு இருக்கிறார்?’ என்கிறீர்களா..


அதற்கு நாம் வடஸ்ரீரங்கம் என்று சொல்லப்படும் பொன்னேரி அருகே உள்ள தேவதானம் ரங்கநாதர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.

சாளுக்கிய மன்னன் தென்னிந்தியாவின் மீது படையெடுத்த போது, திருச்சியில் காவிரிக் கரையோரம் உள்ள ஸ்ரீரங்கநாதரின் அழகைக் கண்டு அதிசயித்துப் போனான். பல இடங்களில் போரிட்டுக் கொண்டு வந்த அந்த மன்னனுக்கு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் உருவம் மட்டும் கண்ணில் இருந்து மறையவில்லை. அவரது அழகை வேறு எங்காவது வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது.



இத்தலம் வந்தபோது, அங்கு ஏரிக்கரையின் பக்கமாக வந்து கொண்டிருந்தான். அந்த இடம் முழுவதும் நெல் விளையும் பூமியாக, ஸ்ரீரங்கத்தைப் போலவே பசுமையுடன் காட்சியளித்தது. அதனால் இதனை வடஸ்ரீரங்கம் என்றே மனதில் எண்ணிக்கொண்டான். இந்த இடமானது தேவர்களால் தானமாக வழங்கப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த ஊர் தேவதானம் என்று அழைக்கப்பட்டது.

சாளுக்கிய மன்னன் அந்த இடத்தைப் பார்த்து அதிசயித்து நின்றான். அப்போது அங்கு ஒரு விவசாயி அறுவடை செய்யப்பட்டு, கதிரடிக்கப்பட்டு களத்தில் போடப்பட்டிருந்த நெல் மணிகளை மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார். திடீரென அந்த விவசாயி மறைந்தார். இதனைக் கண்ட மன்னன், விவசாயியைத் தேடினான். அவரோ, களைப்பின் காரணமாக மரக்காலை தலைக்கு வைத்தபடி ஓரிடத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.

அங்கு சென்ற மன்னனுக்கு, சயனக் கோலத்தில் பெருமாள் காட்சி கொடுத்து மறைந்தார். இதனால் ஆனந்தம் அடைந்த மன்னன், அங்கேயே இறைவனுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தான். பின்னர் தன்னுடைய படைகளுடன் வட இந்தியாவிற்குப் புறப்பட்டான். கங்கை நதிக்கு வடக்கேச் சென்றபோது, நேபாள நாட்டில் இமயமலை அடிவாரத்தில் பெரிய அளவிலான ஒரு கல்லைப் பார்த்தான். அந்தக் கல்லைக் கொண்டு, தான் நினைத்த இறைவனின் திருவுருவத்தைச் செய்ய எண்ணினான். அதற்காக அந்தக் கல்லை ஏற்றிக்கொண்டு, தென்னிந்தியா புறப்பட்டான். ஆனால் கல்லானது, வழியில் கங்கை நதியில் விழுந்தது. நீரில் விழுந்த கல் மூழ்காமல், மிதக்கத் தொடங்கியது.

இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன், அது பற்றி அறிஞர்களிடம் விசாரித்தபோது, அது சாளக்கிராம கல் என்பது தெரியவந்தது. மேலும் அந்தக் கல்லில் இறைவனின் சிலையை வடித்து வழிபட்டால், அந்தப் பகுதி முழுவதும் சுபீட்சம் அடையும் என்றும் கூறினார்கள். இதையடுத்து அந்தக் கல்லையே கொண்டு வந்து, தனக்கு இறைவன் காட்சி கொடுத்த இடத்தில் ஆலயத்தை எழுப்பியதுடன், இறைவனின் சிலையையும் வடித்து வழிபட்டான் என்கிறது தல வரலாறு.

இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை தரிசித்து உள்ளே நுழைந்ததும், கொடி மரமும், கருடாழ்வாரும் உள்ளனர். அடுத்ததாக ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார். இவர்களை வழிபட்டு உள்ளேச் சென்றால், கருவறைக்கு வெளியே துவார பாலகர்களான ஜெயன், விஜயன் ஆகியோர் நம்மை வரவேற்கின்றனர்.

அவர்களுக்கு வலது பக்கத்தில் நம்மாழ்வார், பொய்கையாழ்வர், பூதத்தாழ்வர், குலசேகராழ்வர், திருமழிசையாழ்வார், பெரியாழ்வர், தொண்டரடியாழ்வர், திரு மங்கையாழ்வர், மதுரகவியாழ்வர், ஆண்டாள் ஆகிய பன்னிரு ஆழ்வார்கள், மணவாள முனிவர், விச்வக்சேனர், ராமானுஜர், தேசிகர், வேணுகோபால் சுவாமி கள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

இவர்களை தரிசத்த வண்ணம் உள்ளே சென்றால் ஆதிசேசன் என்படும் ஐந்து தலைகள் கொண்ட நாகப் பாம்புவின் மீது சயன திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாத பெருமாள் பள்ளிக்கொண்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நாபியின் மீது பிரம்மா உள்ளார். இறைவனின் பாதித்திற்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து, களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.

பெருமாளின் திருவடியை சேவித்த நிலையில், தும்புறு மகரிஷியும், பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர். 18.5 அடி நீளமும் 5 அடி உயரத்துடன் காணப்படும் இறைவனின் உருவம், சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டது.

இந்த ஸ்ரீரங்கநாத பெருமாளை அமாவாசை நாளன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்து 7 மற்றும் 11 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், பணக் கஷ்டம், திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைவேறும் என்பது ஐதீகம்.

பெருமாளுக்கு இடதுபுறமாக ரங்கநாயகி தாயார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகில் சக்கரத்தாழ்வார் சன்னிதி இருக்கிறது. அதன்கு பின்புறம் புற்றுக்கோவிலும், தனிச் சன்னிதியில் ஆண்டாளும் இருக்கின்றனர்.

இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகுவதுடன், நினைத்த காரியம் நிறைவேறுவதை நாமும் கண்டு பயனடையலாம். 
Share:

பசுவும் தேவர்களும் வழிபட்ட ஆலயம்



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ளது பசுவந்தனை. இந்த ஊரில் கயிலாசநாத சுவாமி கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் பெயர் கயிலாசநாதர்.


இறைவியின் பெயர் ஆனந்தவல்லி அம்மன். ஆலய தல விருட்சம் வில்வ மரம்.

இத்தல சிவலிங்கத்தின் மீது, பசு வந்து அணைந்து பால் சொரிந்ததால் இத்தலம் ‘பசுவந்தனை’ என்று அழைக்கப்படுகிறது.


கயிற்றாறு (தற்போது கயத்தாறு என்று அழைக்கப்படுகிறது) என்னும் பகுதியை ஆண்டு வந்த மன்னன், ஆநிரைகளை (பசுக்களை) போற்றி வந்தான். பசுக்கூட்டங்கள், மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம். அந்த பசுக் கூட்டத்தில் இருந்த ஒரு பசு மட்டும், அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து விட்டு பின்னர் தனது கூட்டத்தில் புகுந்து சேர்ந்து விடும்.

அந்த பசு மாட்டில் மட்டும் பால் குறைவதை அறிந்த மன்னன், தனது காவலர்களை அனுப்பி ‘உண்மை என்ன?’ என்று கண்டறிந்து வருமாறு ஆணையிட்டான். மன்னனின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட காவலர்கள், அந்த மாட்டை கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது தான் பசு தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வந்தது தெரியவந்தது.

இறையுணர்வு மிக்க தனது பசு, பால் சொரிந்த இடத்தை சென்றடைந்த மன்னன், அங்கிருந்த சிவலிங்கத்தை கண்டு பணிந்து பயபக்தியுடன் வணங்கினான். இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன், வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்வதைக்கண்டு மெய் உருகிப் போனான்.

பசுபால் சொரிந்து, வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தான். அதன்படி அந்த இடத்தில் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதருக்கு சிறியதாக ஒரு ஆலயத்தை அமைத்தான். அதனை சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்து நகரமாக்கினான். பசுவந்து நீராடிய குளம் ‘சிவ தீர்த்தம்’ என்றும், ‘கோசிருங்கவாவி’ என்றும் அழைக்கப்படுகிறது.

இத்திருக்கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் நடுவே பாலமுருகன் சன்னிதி அமையப்பெற்றுள்ளது. இதனால் இந்த ஆலயம் ‘சோமஸ்கந்தர் தலம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் சஷ்டியப்த பூர்த்தி (60 வயது கடந்தவர் களுக்கும்), சதாபிஷேகம் (80 வயது கடந்தவர்களுக்கும்) திருமணம் நடைபெறுவது மிகச்சிறப்பு வாய்ந்ததாகும்.

இக்கோவிலில் சுவாமி, சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். இத்தல இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகப் பாலை வாங்கி சாப்பிட்டால், தீராத நோய்கள் கூட தீரும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயத்தில் சித்திரைப் பெருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூர வளைகாப்பு விழா, நவராத்திரி விழா, கந்த சஷ்டி திருவிழா, திருவாதிரை, மகா சிவராத்திரி விழா ஆகியவை முக்கிய திரு விழாக்களாகும். இங்கு நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
Share:

தீராத நோய் தீர்க்கும் தன்வந்திரி





தல வரலாறு

வயலார் கிராமத்தில் வசித்த தம்பான் இனத்தைச் சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகளாகக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவர்களிடம் சென்று, பல சிகிச்சைகள் எடுத்தும், எதுவும் பலனளிக்கவில்லை.

அவர் ஒருநாள், வைக்கத்தில் உள்ள வைக்கத்து அப்பன் சுவாமியை வழிபட்டார். அப்போது அவருக்கு வயிற்று வலி குறைந்தது. ஆனால், அவர் கோவில் வளாகத்தை விட்டு வெளியே வந்தவுடன், அவருக்கு மீண்டும் வயிற்று வலி வந்துவிட்டது. எனவே அவர் அன்றிரவு கோவிலிலேயே தங்கிவிட்டார்.


அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், ‘இந்தக் கோவிலில் இருக்கும் வரை உனக்கு வயிற்று வலி இருக்காது. நீ கோவிலை விட்டு வெளியேச் சென்றால் மீண்டும் உனக்கு வயிற்று வலி ஏற்படும். இங்கிருந்து சேர்த்தலைக்கு சென்று அங்குள்ள கேளம் குளத்தில் மூழ்கினால், உனக்கு நீருக்கு அடியில் மூன்று சிலைகள் கிடைக்கும். முதலில் கிடைக்கும் சிலை அதிகச் சக்தி வாய்ந்தது. எனவே அதனை குளத்திலேயே விட்டுவிடு. இரண்டாவது கிடைக்கும் சிலையை எடுத்துச் சென்று ஒருவருக்குத் தானமாகக் கொடுத்து விடு. மூன்றாவதாக எடுக்கும் சிலையை ஆன்மிக வழிமுறைகளைப் பின்பற்றி நிறுவி வழிபட்டால் உன் வயிற்று வலி நிரந்தரமாக நீங்கும்’ என்றார்.

அவரும் சிவபெருமான் கனவில் சொன்னபடி, இரண்டாவதாகக் கிடைத்த தன்வந்திரி சிலையை வெள்ளூடு என்ற மனையைச் சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் செய்தார். அதை, நம்பூதிரி தன்னுடைய வீட்டிலேயே வைத்து வழிபாடு செய்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மண்மூசு என்பவரின் உதவியுடன் கோவில் ஒன்று கட்டி, அந்தக் கோவிலில் தன்வந்திரி சிலையை நிறுவினார்.

அவருக்கு பிறகு வந்த தலைமுறையி னரிடையேக் கோவில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மண்மூசு குடும்பத்தினர் அந்தச் சிலையின் கையை உடைத்து எடுத்துச் சென்றனர். கோட்டயம் அருகிலுள்ள ஓளச்ச என்ற இடத்தில் அதை நிறுவிக் கோவில் கட்டினர்.

வெள்ளூடு நம்பூதிரியின் குடும்பத்தினர், தங்களிடமிருந்த சிலையின் உடைந்த கைக்குப் பதிலாக வெள்ளியில் கை ஒன்றைச் செய்து சிலையுடன் பொருத்தி, அந்தச் சிலையை மருத்தோர் வட்டத்தில் கோவில் ஒன்றைக் கட்டி நிறுவினர் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்கிறது.



தன்வந்திரி பகவான்

இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த 24 தோற்றங்களில் பதினேழாவது தோற்றமாகக் கருதப்படும் தன்வந்திரி பகவான், வட்டவடிவமான கருவறையில் மேற்கு நோக்கிப் பார்த்த நிலையில் இருக்கிறார். கருவறையின் இடது புறம் சிவபெருமான் சன்னிதியும், வலதுபுறம் கணபதி, சாஸ்தா, பகவதி சன்னிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆலயமானது அதிகாலை 5 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கேரளாவின் சிறப்பு பெற்ற ஓணத்திருநாள் மற்றும் பிற திருவோண நட்சத்திர நாட்களிலும் இங்கு பால் பாயசம் வழிபாடு நடக்கிறது. ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வாவு பூஜை மற்றும் சம்கிரம பூஜை ஆகியவை நடத்தப்படுகின்றன. நவராத்திரி, ராமர் பட்டாபிஷேகம் போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அமைவிடம்

பல்வேறு நோய்களைத் தீர்க்க உதவும் இத்தலம் கேரள மாநிலம் சேர்த்தலாவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், ஆலப்புழாவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இரு நகரங்களில் இருந்தும் இக்கோவிலுக்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

மருதோர்வட்டம்

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்த ஆயுர்வேத மருத்துவரான வெள்ளூடு மூசு என்பவர், ஒரு துளி மருந்து கொடுத்தால், அது எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகிவிடும் என்கிறார்கள். அதனைச் சொல்லும் வகையில், மலையாள மொழியில் ‘மருன்னு ஒரு வட்டம்’ என்று அழைக்கப்பட்டு வந்த பகுதியே, பிற்காலத்தில் ‘மருதோர்வட்டம்’ என்று பெயர் மாற்றமடைந்திருக்கிறது என்கின்றனர். கேரளாவில் பல ஊர்களில் தன்வந்திரி கோவில்கள் அமைக்கப்பட்டிருந் தாலும், மருதோர்வட்டத்தில் அமைந்திருக்கும் தன்வந்திரி கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவிலாக இருக்கிறது.
Share:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை திருக்கோவில்


 மாணிக்கவாசகரைப் போற்றும் ஆவுடையார் கோவில் 

 கொடிமரம், பலிபீடம், நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டேஸ்வரர் இல்லாத ஆலயம், பிரதோ‌ஷம், தெப்போற்சவம் நடைபெறாதக் கோவில், திருவாசகம் தோன்றிய தலம், மாணிக்கவாசகர் எழுப்பிய ஆலயம், தேவார வைப்புத் தலம், திருப்புகழ் பெற்ற ஆலயம் என ஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை திருக்கோவில்.



11 மந்திரங்கள், 81 பதங்கள், 51 அட்சரங்கள், 224 புவனங்கள், 36 தத்துவங்கள், 5 கலைகள், 6 வாசல்கள், ஆறு சபைகள், நவத் துவாரங்களு டன் ஆலயம் விளங்குகின்றது. கருவறையில் ஆவுடையார் எனும் பீடம் மட்டுமே அமைந்துள்ளது. அதன் மேலே குவளை சாத்தி அலங்காரம் செய்யப்    படுகிறது. ஆவுடையாரின் பின்புறத்தில் 27 நட்சத்திர பீடங்கள், அதற்குமேல் சூரியன், சந்திரன், அக்னி தீபங்கள்  மூன்றும் ஒளி வீசுகின்றன.

சுவாமி முன்புறம் உள்ள அமுத மண்டபத்தில் படைக்கல் அமைந்துள்ளது. புழுங்கல் அரிசி அன்னம் ஆவி பரப்பி இறைவனை ஆராதிக்கிறது. முளைக்கீரை, பாகற்காயும் அதைச்சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவை வைத்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஆறுகால பூஜை நேர்த்தியாக நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் அமுத படைக்கல்லில் புழுங்கல் சாதம் படைக்கப்படுகிறது.

ஆவுடையார் கருவறையின் வடக்கே யோகாம்பிகை சன்னிதி அமைந்துள்ளது. அன்னை அரூபமாக உள்ளதால் யோக பீடமும், அன்னையின் பாதக் கமலங்களும் மட்டுமே இங்கு உள்ளன. அம்பிகையின் அபிஷேக நீர், தொட்டித் தீர்த்தத்தில் விழுகிறது. இந்த புனித நீர்  மனக்கவலை மற்றும் தீய சக்திகளை நீக்கும் சக்தி கொண்டது. அன்னையை அவளின் முன்புறம் அமைந்துள்ள கல் ஜன்னல் வழியே  மட்டுமே தரிசிக்க வேண்டும்.

மாணிக்கவாசகர் வரலாறு

பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகே அமைந்துள்ள திருவாதவூரில், பிறந்தவர் வாதவூரர். பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராகப் பணியாற்றி ‘பிரமராயன்’ பட்டம் பெற்றவர். மன்னனின் ஆணைக்கிணங்க குதிரைப்படைக்கு குதிரைகள் வாங்கச் செல்லும் வழியில், திருப்பெருந்துறையான ஆவுடையார் கோவிலில் குருந்த மரத்தடியில் அமர்ந்த இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். குரு உபதேசமும் பெற்றார்.

இதையடுத்து குதிரை வாங்க வைத்திருந்த பணத்தைக் கொண்டு ஆலயத் திருப்பணியை செய்து முடித்தார். அதற்காக மன்னன் அவரை சிறையில் அடைத்தான். சுடு  மணலில் நிற்க வைத்து வதைத்தான். மாணிக்கவாசகர் அனுபவிக்கும் துன்பத்தை பொறுக்க முடியாத இறைவன்,  மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு அறியச் செய்வதற்காக, வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளம் ஊருக்குள் வராமல் தடுக்க, ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடந்தபோது, இறைவன் பணியாள் வேடத்தில் வந்து பிட்டுக்காக மண் சுமந்து பிரம்படிபட்டார். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது.

இறைவன், மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார். பாண்டிய மன்னன், மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு வேண்டினான். மன்னரைத் தேற்றிய வாதவூரர், தன் முதலமைச்சர்  பதவியைத் துறந்து, ஆன்மிகப் பாதையைத் தேடினார். உத்திரகோசமங்கை, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு தலங்களை தரிசித்து, சிதம்பரம் வந்து சேர்ந்தார்.

தில்லை அம்பலவாணன், அந்தணர் வடிவில்  வந்து, மாணிக்கவாசகரின் பாடல்கள் அனைத்தையும் கேட்டு, தன் ஓலையில் எழுதினார். பாடலின் இறுதியில் ‘மாணிக்க  வாசகர் சொற்படி, அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ எனக்  கையொப்பம் இட்டு, பொற்சபையின்  பஞ்சாக்கர படியில் வைத்து மறைந்தருளினார்.

தில்லை வாழ் அந்தணர்கள், இந்த ஏடுகளைக் கண்டு வியந்து, இதன் பொருள் கூறுமாறு மாணிக்கவாசகரை வேண்டி நின்றனர். ‘இதன்பொருள் இவ்வானந்த கூத்தனேயாவன்’ எனக்கூறி, அனைவரும் காணும் விதமாக ஜோதியுள் இரண்டறக் கலந்தார்.

மாணிக்கவாசகர்

ஆவுடையார் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கு முகமாய் மூலவராகவும், முதல் பிரகாரம் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் வடக்கு   முகமாய் உற்சவராகவும் மாணிக்கவாசகர் காட்சி தருகிறார். நந்தி மற்றும் சண்டேசுவரராக இவரே ஆட்சி செய்வதால், அவர்களுக்கு ஆலயத்தில் இடம் தரப்படவில்லை. சுவாமி, அம்பாளுக்கு இணையாகப் பெருமை பெற்றவராக விளங்குவதால், அனைத்து ஆலய விழாக்களிலும் மாணிக்கவாசகப் பெருமானே முன்னிறுத்தப்படுகிறார்.

இத்தலத்தில் திருமால், பிரம்மா, இந்திரன் என எண்ணற்றோர் தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். அவை இன்று கிணறுகளாகவும், குளங்களாகவும் ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இருந்தாலும், ஆலயத்திற்கு தென்மேற்கில் அமைந்துள்ள அக்னி தீர்த்தம் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது தவிர, சுவாமிக்கு அபிஷேக நீர் எடுக்கப் பயன்படும், கிணறு தீர்த்தம் ஆலயத்திற்குள் இருக்கிறது.

அபூர்வ சிற்பங்கள்

ஏழுநிலை ராஜகோபுரத்தின் எதிரே அமைந்துள்ளது, ஆயிரம்கால் மண்டபம். இதில் நரசிம்மர், காளி, ஊர்த்துவத்தாண்டவர், பிட்சாடனர், வில்லேந்திய முருகன், ரி‌ஷபாந்தகர்,   சங்கரநாராயணன், அகோர வீரத்திரர், அக்னி வீரபத்திரர்   முதலிய சிற்பங்களும், வெவ்வேறு தேசத்து குதிரைகளும், அதன் மீதான விதவிதமான அணிகலன்களும், இசைத்தூண்களும் கலைநயத்தை வடித்தெடுத்துள்ளன.

கால் விரல்களின் நகங்கள், கால் தசைகள், கால் எலும்புகள் தெரியும் விதமான சிற்பங்கள் நம்மை வியப்பூட்டுகின்றன. எழில்மிக்க ஏழுநிலை ராஜகோபுரம் விண்ணை முட்டி நிற்க, கோபுரத்தின் இடையில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.

மூன்றாம் பிரகாரத்தில், வெயிலுவந்த விநாயகர், அக்னி தீர்த்தம், தியாகராஜர் மண்டபம், குருந்த மரம் அமைந்துள்ளன. இதில்  வேலைப்பாடுடன் கூடிய கொடுங்கைகள் மரவேலைப்பாட்டின் கலையில், கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. தொங்கும் கல்லிலான சங்கிலித் தொடர்கள், ஊஞ்சல் மண்டபம் போன்றவை கண்ணுக்கு விருந்தாகின்றன.

இரண்டாம் பிரகாரத்தில் தில்லை மண்டபம் உள்ளது. இது நடனசபை என அழைக்கப்படுகிறது. இம்மண்டபத் தூண்களில், பதஞ்சலி, வியாக்ரபாதர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. குறவன், குறத்தி சிற்பங்களின் ஆடை அணிகலன்கள் நமக்கு வியப்பூட்டுகின்றன.

முதல் பிரகாரத்தில் ஆத்மநாதர், யோகாம்பிகை, குருந்தமூல மண்டபம், மாணிக்கவாசகர் உற்சவர் சன்னிதி அமைந்துள்ளன. தூண்கள் முழுவதும் இறை வடிவங்கள், ஆதீனப் பெருமக்களின் சிலா வடிவங்கள், அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நரிகளைப் பரிகளாக்கி, குதிரை ஓட்டியாக வரும் சிவபெருமானின் சிலை, வெகு அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எதிரே அமைச்  சராக, அடியாராகக் காட்சி தரும் மாணிக்கவாசகர்    வடிவம், மன்னன்    வரகுண பாண்டியன்  உருவம் போன்றவை கலைநயத்தைக்     காட்டுகின்றது.

27 நட்சத்திரங்களின் வடிவம் புடைப்புச் சிற்பமாக, சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி வாசலின் மேல்புறத்தில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம்   தினமும் காலை 6.30  மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும்  திறந்திருக்கும்.

இவ்வாலயத்தில் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்     படுகின்றன. ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என இரண்டு பெருவிழாக்கள், தலா பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மாணிக்கவாசகரையே சிவபெரு மானாகப் போற்றி, சிவபெருமானுக்குரிய ஆடை அலங்காரங்களைச் செய்து வீதியுலா நடத்துகின்றனர்.

தேர்த்திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்குமான வழிபாட்டு உரிமையை மாணிக்கவாசகரே பெறுவது, இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும். இதுதவிர, 12 மாதங்களிலும் 12 விதமான அபிஷேகங்கள் இந்த ஆலயத்தில் நடைபெறும்.

அமைவிடம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டத்தில், வெள்ளாற்றங்கரையில் அமைந்திருக்கிறது, ஆவுடையார் கோவில் எனும்  திருப்பெருந்துறை திருத்தலம். திருச்சியில் இருந்து 102 கி.மீ., அறந்தாங்கியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

–பனையபுரம் அதியமான்.

ஆலயத்தின் தல மரம் குருந்த மரமாகும். இது மூன்றாம் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் பசுமையாக காட்சி தருகிறது. இந்த மரத்தின் அடியில், இறைவன் குருவாக அமர்ந்து மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்ததாக வரலாறு. குரு அமர்ந்த மரம், குருந்த மரமாக வழங்கப் படுகிறது.

முதல் பிரகாரத்தில் சுவாமி கருவறையின் பின்புறம், குருந்தமூலம் நான்கு தூண் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குருந்தமூல சுவாமியிடம் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் கோலம் இங்கு கற்சிற்பமாக காட்சி தருகிறது. விழாக்காலத்தில் உபதேசக் காட்சியருளல் இங்கு நடைபெறுவது வழக்கம்.
Share:

கால்நடைகளின் காவல் தெய்வம்



கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில், முருகனின் ஏழாவது படைவீடு என்று அழை க்கப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் அவினா சி லிங்கேஸ்வரர் கோவில், பிரம்மா, சிவன், விஷ்ணு என மும்மூர்த்திகளுடன் காட்சி தரும் தி ரு மூர்த்திமலை அமணலிங்கேஸ் வரர் கோவில் என்று சொல்லிக் கொண்டே போகலாம். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடும்பம், நட்பு, சுற்றம் என்று மனிதர்களுக்காக வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் தங்கள் வீட்டு கால்நடைகள் நலமுடன்வாழ வேண்டுதல் செய்வதற்கு என்றே தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளது என்பது அதிசயம் தான்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் அமை ந்துள்ள ஆல்கொண்டமால் கோவில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கும் அதிசய திருத்தலம் ஆகும்.

தல வரலாறு

பரமபத நாதனாகிய பரந்தாமன் துவாபரயுகத்தில் ஆயர்பாடியில் நந்தகோபாலன்- யசோதை தம்பதி யிடம் மகனாக வளர்ந்து வந்தார். அவர் கறவை கணங்களை மேய்த்து வந்த காரணத்தால், வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கண் நீங்காத செல்வத்தை அளித்தன. கண்ணபிரானின் திருக்கண் பார் வையால் ஆயர்பாடியில் மக்களும், பசுக்களும் நோய் நொடியின்றி வாழ்ந்தனர்.

அந்த கண்ணபிரான், உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில் சோமவாரப்பட்டி கிராமத்தில் காட்டின் மத்தியில் கோவில் கொண்டுள்ளார். பண்டைய காலத்தில் ஆலம ரத்தூர் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, அ டர்ந்த காடாக இருந்தது. இங்கு விஷப்பாம்புகள் வாழும் ஒரு ஆல மரத்தின் கீழ் சிவ லிங்க வடிவில் புற்று ஒன்று இரு ந்தது. இந்த பகுதி யில் மேய்ந்த பசுக் கள் புற்றில் தாமாகவே பாலை சொரிந்து வந்தன. ஒரு நாள் பசு ஒன்றை, பாம்பு தீண்டியது. பாம்பின் நஞ்சு பாதிக்காமல், பசுவின் விஷத்தை மாயவன் உண்டு பசுவை காப்பாற்றினார். இதனால் அவர் ‘ஆல்கொண்டமால்’ என்று பெயர் பெற்றார். இங்கு ஆல மரத்தின் கீழ் அமர்ந்த திருமா லையும், ஆலன் உண்ட சிவபெருமானையும் ஒரே க டவுளாக எண்ணி வழிபடத் தொடங்கினர். இன்றும் அதே வழிபாட்டு முறை தொடர்கிறது.

அவதார வடிவம்

உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும், தீய சக்தியும், தலைதூ க்குகிறதோ அப்போதெல்லாம் விஷ்ணு பகவான் அவதரிப்பார் என்பது ஐதீகம். பெரும்பாலும் கோவில்களில் சிலைகள் உருவ வழிபாட்டுடன் காணப்படும். இங்கு ஆல்கொண்டமால் எனும் பெயரில் அமர்ந் திருக் கும் விஷ்ணுபகவானின் அவதாரங்கள் சில, சிலையில் வடிவமைக் கப்பட்டுள்ளன. இதுவே மூலவராக வணங்கப்படுகிறது. இந்த சிலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மேல்பாகத்தில் கிருஷ்ண பகவா னுக்கு இருமருங்கில் சூரியன், சந்திரன் உருவங்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 3,4,5 ஆகிய தேதிகளில், இங்கு தமிழர் திருநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திரு விழாவின் போது பக்தர்கள் தங்களது மாட்டு கறவைப் பாலை கொண்டு வந்து, ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து, திரு நீரும், தீர்த்தமும் பெற்றுச் செல்கிறார்கள். இவற்றை தங்கள் ஊரில் உள்ள பிற கால்நடைகள் மீது தெளிக்கின்றனர். இப்படிச் செய்தால், அவைகளுக்கு நோய்கள் வராது என்பது அவர்களது நம்பிக்கை. இந்தக் கோவிலில் உற்சவராக திருமால் இருந்தாலும், சிவாலயங்களில் இருப்பது போல நந்தி இருப்பது இந்தக் கோவிலின் தனி சிறப்பு.

ஆல்கொண்டமால் கோவில் விழாவின் போது, பக்தர்கள் மண்ணால் செய்து வர்ணம் தீட்டப்பட்ட பசு, கன்றுகளின் உருவ பொம்மைகளை கோவில் வளாகத்தில் உள்ள கால்நடை சிலை களின் முன்வைக்கிறார்கள். தேங்காய் உடைத்து, தேங்காய் தண்ணீரை கொண்டு தாங்கள் கொண்டு வந்த உருவ பொம்மைகளுக்கு கண் திறந்து வழிபடுகின்றனர்.

மாட்டுப்பொங்கல் அன்று ஈன்ற கன்றுகளை, கோவிலுக்கென்று அப்பகுதி விவசாயிகள் விட்டு விடுவார்கள். அந்த கன்றுகள் கிராமங் களில் தன்னிச்சையாக சுற்றித்திரியும். அதை ‘சலங்கை மாடு’ என்று அழைக்கிறார்கள்.

சலங்கை மாடு என்பதன் அடையாளத்துக்காக காதுகளை சூலாயு தம் போல் மாற்றி விடுவார்கள். பின்னர், மாடுகளை உருமி இசைக்கு ஆடும் வகையில் பயிற்சி அளிக்கின்றனர். அதன் முன்னே இரு நீள மூங்கில் கம்புகளை உயரத்தூக்கி கொண்டும், கால்களில் சலங்கை கட்டிக்கொண்டும் இசைக்கு தக்கவாறு ஆடுகின்றனர். இந்த வழி பாட்டு முறைகள் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று ஆகும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்தி ருக்கும்.

அமைவிடம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் சோமவாரப்பட்டிக்கு அருகே ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. 
Share:

சிவனை நீராட்டும் நந்தி வாய் தீர்த்தம்





ழைய கோவில்களில் உள்ள அதிசயமான கட்டுமான அமைப்புகள் அல்லது இயற்கைக்கு மாறாக இருக்கும் புதிரான நிகழ்வுகள் ஆகியவை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுவது உண்டு. 

மேற்கண்ட வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. அங்குள்ள மல்லேஸ்வரம் என்ற ஊரில் அமைந்த தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவிலில், நந்தி சிலை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. நந்தி சிலை அமைப்பில் அதிசயம் எதுவுமில்லை. ஆனால், நந்தி சிவபெருமானுக்கு எதிர்ப்புறமாக இல்லாமல் நேர் மேலே இருக்கிறது. அதைவிடவும் அதிசயம் என்ன வென்றால் அந்த நந்தியின் வாயிலிருந்து வழிந்து வரும் நீர், கீழே உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகமாக அமைகிறது.

அந்த செய்தி ஆச்சரியமானதாக இருந்தாலும், அதிசயமாக இருப்பது நந்தியின் வாயிலிருந்து எப்போதுமே நீர் ஊற்றாக பெருகி வழிந்து வருவதுதான். அதுவும் ஒருநாள், இரண்டு நாள் அல்ல. ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல.. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த நீர் அபிஷேகம் நடந்து வருகிறது. சிவபெருமானுக்கு அபிஷேகமாக மாறிய பிறகு அந்த நீர் எதிரில் உள்ள கோவில் தீர்த்தக்குளத்தில் கலந்து விடுவதுபோல செய்யப்பட்டுள்ளது.

நந்தியின் வாயில் இருந்து பெருகிவரும் ஊற்று நீர் எப்போதும் சிவலிங்கத்தின் மீது படும்படி மிகவும் சரியாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை யாராலும் அறிய இயலவில்லை. மேலும், அந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், அதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். 
Share:
Powered by Blogger.

Popular Posts